எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி" (சங்கீதம் 103:4) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். அடுத்த வசனம், "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது" என்று இன்னும் அழகாகக் கூறுகிறது.

நம்முடைய தேவன், மீட்டுக்கொள்கிறவராக இருக்கிறார். அவரால், அழிவின் குழியிலிருந்து உங்களை தூக்கியெடுத்து தம்முடைய உருக்கமான இரக்கங்களால் முடிசூட்ட முடியும். அன்பானவர்களே, ஒருவேளை நீங்கள் அழிவுக்கு நேராக, தவறானவிதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். குடிப்பழக்கமுடையவராக இருக்கலாம்; விபச்சாரத்தில் ஈடுபடும் பழக்கமுடையவராக இருக்கலாம்; ஆனால், தேவனால் உங்களுக்கு புதுவாழ்க்கையை தர முடியும். மதுரமான, பரிபூரணமான, சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிக்க அவரால் கூடும். வேதாகமத்தில் யோவான் 4ம் அதிகாரத்தில், சமாரிய ஸ்திரீ என்ற பெண்ணைக் குறித்து நீங்கள் வாசிக்கலாம். அவள் பாவத்தினால் நிறைந்திருந்தாள்; இச்சையான வாழ்வினுள் பிடிபட்டிருந்தாள்; அவளுக்கு அநேக கணவன்மார் இருந்தனர். அவள் துன்மார்க்கமான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள். நொறுங்கிப்போன அந்த நிலையில் அவள் தண்ணீர் மொண்டுகொள்வதற்காக கிணற்றுக்கு வந்தாள். அங்கே இயேசு கிணற்றின் அருகே உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். தேவனாகிய கர்த்தரை, தான் சந்திக்க இருப்பதையே அவள் அறியாதிருந்தாள். இயேசு அவள் இருதயத்தை அறிந்திருந்தார். அவளுடைய வாழ்க்கை அவருக்கு முழுமையான தெரிந்திருந்தது; அவள்மேல் இரக்கம் கொண்டார். அவளிடம் உருக்கமான, ஆறுதலான வார்த்தைகளை அவர் பேசினார். தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவள் கேட்டாள்; முற்றிலும் மறுரூபமாக்கப்பட்டாள். அவள் இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். மட்டுமல்ல, மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கூறும்படி ஓடினாள். ஆம், அதே தேவனால் உங்களை வாழ்க்கையை மீட்டுக்கொள்ள முடியும். பாவம் இல்லாத, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புதிய வாழ்வை உங்களுக்குத் தருவதற்கு ஆண்டவரால் கூடும்.

"இது எப்படி நடக்கும்?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். இயேசு கிணற்றண்டையில், பாவியான பெண்ணிடம் பேசினார். அதன் பிறகு அவள், அவரைப் பற்றி மற்றவர்களிடம் தைரியமாக பகிர்ந்துகொண்டாள். அதுபோன்ற மாற்றம் இப்போதே உங்களுக்குள் நடக்கக்கூடும். ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் சிலுவையில் உங்களுக்காக தம்முடைய ஜீவனை கொடுத்தார். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். "ஆண்டவரே, என்னை மன்னியும். என் பாவங்களை மன்னியும். எனக்கு புதுவாழ்வை தாரும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை சுத்திகரியும்," என்று முறையிடுங்கள். இப்போதே அப்படி கூப்பிடுங்கள். சமாரியப் பெண் பெற்றுக்கொண்ட புதுவாழ்வைப் போல, நீங்களும் இன்று பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் நொறுக்கப்பட்ட நிலையில், என் வாழ்வில் நீர் வேண்டும் என்ற தேவையுடன் உம்மிடம் வருகிறேன். தயவாய், என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை கழுவியருளும். என் ஜீவனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உம்முடைய இரக்கங்களால் என்னை முடிசூட்டியருளும். சமாரிய ஸ்திரீயைப் போல என்னை முற்றிலும் மறுரூபமாக்கியருளும். என் இருதயத்தை உம்முடைய அன்பினாலும் சத்தியத்தினாலும் நிரப்பியருளும். என் ஆவியை கழுகைப்போல புதிதாக்கி, ஒருபோதும் உம்மை விட்டுவிடாதபடி உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு உதவும். என் வாழ்க்கை உம்முடைய கிருபைக்கு சாட்சியாக விளங்கட்டும். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புதிய வாழ்வை எனக்கு தருகிறபடியினால் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.