எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று டிசம்பர் 30ம் தேதி. இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாளே இருக்கிறது. ஆண்டின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். ஒருவேளை உங்கள் இருதயம் கவலைகளினால் பாரப்பட்டிருக்கலாம்; இக்கட்டுகளையும் மனமுறிவையும் எதிர்கொள்ள நேரிட்டதால் நீங்கள் உடைந்துபோயிருக்கலாம். இன்றைக்கு, "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்" (சங்கீதம் 147:3) என்ற அருமையான வசனத்தை தியானிப்போம். அன்பானவர்களே, ஆண்டின் இறுதி நாட்களிலும் நீங்கள் உள்ளமுடைந்து போயிருக்கிறீர்களா? அப்போது, இந்த செய்தி உங்களுக்கானது. உள்ளம் நொறுங்கிப்போன நிலையிலிருந்து உங்களை தூக்கியெடுக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்கள் காயங்களை கட்டுவதற்கு விரும்புகிறார்; நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளுக்கும் உங்களை நீங்கலாக்க அவர் விரும்புகிறார்.

ஒருவிசை உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் ஆண்டவருடன் நெருங்கி ஜீவிக்கிறீர்களா? எல்லாவற்றிலும் அவரையே சார்ந்திருக்கிறீர்களா? "அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்" (யோசுவா 24:22). அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவருக்கு சாட்சியாய் இருக்கிறீர்களா? எல்லா பிரச்னையிலிருந்தும் வெளியே வருவதற்கு ஆண்டவர் உங்களுக்கு உதவுவார் என்று நூறு சதவீதம் முழுமையாக விசுவாசிக்கிறீர்களா? "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்," என்று வேதம் கூறுகிறது. ஆண்டவராகிய இயேசுவே இந்த சத்தியத்தை கூறினார். நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காண்பீர்கள்.

சாமுவேல் தீர்க்கதரிசியின் தாயாகிய அன்னாளை நினைத்துப் பாருங்கள். அவளுடைய சக்களத்திக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ குழந்தை இல்லை. அன்னாள் அதிக விசனத்தை சகித்து, பாடனுபவித்தாள். அவள் இருதயம் நொறுங்கிப்போயிருந்தது. கலக்கத்தின் மத்தியில் அவள் செய்த ஒரு காரியம் எல்லாவற்றையும் அப்படியே மாற்றிப்போட்டது. அவள் தேவ சமுகத்திற்கு சென்று, முழங்காலிட்டு, தன் வேதனையை அவர் முன்பு ஊற்றிவிட்டாள். அன்னாள், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாள். அவர், அவள் விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்தார். தேவன், ஒரு குழந்தையை மாத்திரம் அவளுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கவில்லை. மாறாக, தாம் தெரிந்துகொண்ட சாமுவேல் தீர்க்கதரிசியுடன் அநேக பிள்ளைகளை அவளுக்குக் கொடுத்தார். அன்பானவர்களே, அவ்வாறே, உடைந்துபோன உங்கள் உள்ளத்தை அவர் குணப்படுத்துவார். உங்கள் பாரங்கள் அகற்றப்படும். இதை விசுவாசியுங்கள். உடைந்துபோன நிலையிலிருக்கும் உங்கள் உள்ளத்தை இப்போதே மகிழ்ச்சியாக்க ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். நம்மை அவருக்கு முன்பாக தாழ்த்தி, ஜெபிப்போம். என் வாழ்வில் நான் சந்தித்த பெரிய பிரச்னை நினைவுக்கு வருகிறது. நான் முழங்காற்படியிட்டு முழு இருதயத்துடனும் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டேன். தேவன் என் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து, இக்கட்டிலிருந்து என்னை தூக்கியெடுத்தார். அவ்வாறே, புத்தாண்டினுள் செல்ல இருக்கும் நிலையில் நாம் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவோம்.

அன்பானவர்களே, முழங்காற்படியிடுங்கள். ஆண்டவருக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அவரை நோக்கி உங்கள் கைகளை உயர்த்துங்கள். வேதனையின் மத்தியில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஓர் அற்புதம் நிகழ இருக்கிறது. அதிசயங்களை செய்கிறவர் உங்களோடு இருப்பதால், அற்புதத்தை எதிர்பாருங்கள். உடைந்த உங்கள் உள்ளத்தை அவர் குணமாக்குவார்; உங்கள் காயங்களை கட்டுவார்; உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வாழ்வில் நேரிடும் இக்கட்டுகளினாலும் வேதனையினாலும் பாரப்பட்ட இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். நீர் இருதயம் நொறுங்கியவர்களை குணமாக்கி, எங்கள் காயங்களை கட்டும் தேவனாயிருக்கிறீர். எல்லா பாரத்தையும் கவலையையும் துக்கத்தையும் உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை தூக்கியெடுப்பதற்கு எப்போதும் என் அருகில் நீர் அதிசயங்களை செய்கிறவராக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆவியை சீர்ப்படுத்தி, புதிதாக்கும் வல்லமை உமக்கு உண்டு என்று விசுவாசிக்கிறேன். என் இருதயத்தை உம்முடைய சமாதானத்தினாலும், என் ஆத்துமாவை உம்முடைய களிகூருதலினாலும் நிரப்பும். உம்முடைய கிருபையை நம்பி, உம்மோடு நெருங்கி ஜீவிக்க எனக்கு உதவியருளும். உம்முடைய அதிசயமான கிரியைகளை நான் பார்ப்பதால், உம் மகிமை என் வாழ்வில் பிரகாசிக்கட்டும். என் துக்கத்தை சந்தோஷமாகவும், என் கலக்கத்தை துதியாகவும் மாற்றுவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.