அன்பானவர்களே, "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" (சங்கீதம் 126:5) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். அவருக்கு முன்பாக நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் கர்த்தர் கணக்கு வைக்கிறார். நிச்சயமாகவே, உங்கள் கண்ணீர், ஆசீர்வாதமாக மாறும். நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலாக நீங்கள் சிரிப்பீர்கள். ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலாக கெம்பீர சத்தமிடுவீர்கள். அதைத்தான், "அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது" என்று இரண்டாம் வசனத்தில் வாசிக்கிறோம்.
ஆண்டவர் உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கும்போது, நீங்கள் சந்தோஷத்தினால் துள்ளிக்குதிப்பீர்கள். உங்கள் உள்ளத்திலிருக்கும் மகிழ்ச்சியை அனைவரும் காண்பார்கள். அக்கம்பக்கத்தவர், உறவினர்கள் மற்றும் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் அனைவரும், "ஆண்டவர் உனக்குப் பெரிய காரியங்களைச் செய்துள்ளார்," என்று கூறுவார்கள். அன்பானவர்களே, உங்கள் வாழ்வில் இப்படியே நடக்கும். நீங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். ஆண்டவர்தாமே உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைப்பார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் இப்படியே செய்தார். சீயோனின் சிறையிருப்பை அவர் திருப்பியபோது அவர்கள் சொப்பனங்காண்கிறவர்களைப்போல இருந்தனர். இஸ்ரவேலர்கள் 70 ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு முழு தலைமுறை கடந்துபோனது. ஆனால், அதற்குப் பிறகு ஆண்டவர், அவர்கள் சிறையிருப்பை திருப்பினார். அவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பியபோது, நகைப்பினாலும் நிரம்பி வழியக்கூடிய அளவு சந்தோஷத்தினாலும் நிறைந்திருந்தனர். நடப்பது நனவா என்று அவர்களால் நம்ப இயலாதிருந்தது. தாங்கள் சொப்பனங்காணவில்லை என்பதை அவர்கள் உறுதியாக்கிக் கொள்ளவேண்டியதாயிருந்தது.
பேதுரு, சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது இப்படியே நடந்தது. பேதுருவை கொன்றுபோடும்படியாக, அதிகாரிகள் அவனைப் பிடித்து சிறைச்சாலைக்குள் போட்டனர்; தப்புவதற்கான நம்பிக்கையே அவனுக்கு இல்லாதிருந்தது (அப்போஸ்தலர் 12:13-19). விசுவாசிகள், மரியாளின் வீட்டில் கூடி, அவனுக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய ஜெபத்தின் காரணமாக, ஆண்டவர் பேதுருவை விடுவிக்கும்படி ஒரு தூதனை அனுப்பினார். அவனுடைய சங்கிலிகள் தெறிப்புண்டன; அவன் பாதுகாப்பாக சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டான். அவன் மரியாளின் வீட்டுக்கு வந்து கதவை தட்டியபோது, உடன் விசுவாசிகளுக்கு அது அவன்தான் என்று நம்ப இயலவில்லை. ரோதை என்ற பெண், கதவை திறக்காமலே அதிர்ச்சியடைந்தாள். இது யாவுமே அவர்களுக்கு சொப்பனம்போல் தோன்றிது. தங்கள் ஜெபத்திற்கு ஆண்டவர் மெய்யாய் பதிலளித்ததை அவர்களால் நம்ப இயலவில்லை.
அன்பானவர்களே, ஓர் அற்புதம் நடக்கவேண்டுமென்று நீங்கள் நெடுங்காலமாக ஜெபித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், பேதுருவின் ஜெபத்தையும், இஸ்ரவேல் ஜனங்களின் கூப்பிடுதலையும் கேட்டு பதிலளித்த கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கும் பதிலளிப்பார். தேவன் பதிலளிக்கும்போது அது சொப்பனங்காண்பதுபோல் இருக்கும். கண்ணீரோடு விதைக்கும் நீங்கள் சந்தோஷமாய் அறுப்பீர்கள். "நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு" (2 நாளாகமம் 15:7) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, நீங்கள் அறுவடை செய்வீர்கள். கண்ணீரான உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தேவன் மகிமையானதாக மாற்றுவார். ஆகவே, தொடர்ந்து ஜெபியுங்கள்; கேளுங்கள்; கதவை தட்டுங்கள். உங்களுக்கான பதில் சமீபித்திருக்கிறது. உங்கள் கண்ணீர் சந்தோஷமாக மாறும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் அன்புடன் அளித்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் நீர் காண்கிறீர்;என்னுடைய துக்கத்தை நீர் சந்தோஷமாக மாற்றுவீர் என்று நம்புகிறேன். எனக்கு நன்மையுண்டாகும்படி நீர் கிரியை செய்துகொண்டிருப்பதால் என்னுடைய ஜெபங்கள் வீணாய்ப்போகாது என்று விசுவாசிக்கிறேன். என் ஜெபத்திற்கு பதில் அளித்து, என் இருதயத்தை நகைப்பினால் நிறைத்திடும்; என் நாவு கெம்பீர சத்தமிடும்படி செய்திடும். உமது வல்ல கரம் என் வாழ்வில் செயல்படுவதை என்னைச் சுற்றிலுமிருப்பவர்கள் பார்த்து, "ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்" என்று கூறுவார்களாக. தொடர்ந்து ஜெபிக்கவும், கேட்கவும், தட்டவும், என் ஜெபத்திற்கு பதில் வருகிறதென்று விசுவாசிக்கவும் தேவையான பெலனை எனக்கு தந்தருளும். சந்தேகங்கொள்ளாமல் விசுவாசிக்கவும், பயப்படாமல் பொறுமையாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். என்னுடைய கண்ணீரின் பயத்தை மகிமையான பயணமாக மாற்றும்; என் வாழ்க்கை உம்முடைய மாறாத அன்புக்கு சாட்சியாக விளங்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.