அன்பானவர்களே, உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். ஆண்டவர் ஒருபோதும் தவறமாட்டார் என்பதே நம் நம்பிக்கை. அவர்மேல் நம் நம்பிக்கையை வைக்கும்போது, அவர் நமக்குள் வருகிறார்; நம் வாழ்வில் அவரது ஆசீர்வாதங்கள் வெளிப்படுகின்றன. "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங்கீதம் 1:3) என்று வேதம் கூறுகிறபடி ஆசீர்வதிக்கப்படுவோம். தண்ணீர் ஓடும் இடத்தில் நாட்டப்பட்ட மரங்களைப் பாருங்கள்; அவை தங்களுக்கு வேண்டிய நீரை உறிஞ்சி, நன்றாக செழித்திருக்கும். அவற்றை சுற்றியிருக்கும் மணலானது விளைச்சலுக்கேற்றதாக, சத்துகள் நிரம்பியதாக இருக்கும். அவை ஆழமாக வேரூன்றியிருப்பதால், சத்துள்ளவையாயிருப்பதால் ஏற்றகாலத்தில் கனிகொடுக்கும். அவ்வண்ணமே ஆண்டவர் உங்களை ஏற்ற இடத்தில் நாட்டப்போகிறார்.

முந்தின வசனம் தேவனுடைய வசனத்தை தியானிக்கிற மனுஷன், அந்த மரம்போல் இருக்கிறான் என்று கூறுகிறது. இன்றிலிருந்து தேவன் தம் வசனத்தினால் உங்களை போஷிக்கப்போகிறார். அந்த வார்த்தை நம்மை செழிப்புள்ள மரம் போலாக்கும். அது நமக்குள் ஜீவத்தண்ணீர்போல பாயும்; நம் வேர்களைப் பெலப்படுத்தும்; நம் வாழ்வின் எப்பக்கமும் கனியை உற்பத்தி செய்யும். நாம் தவறான இடத்தில் நாட்டப்பட்டிருந்தால், அவர் நம்மை அங்கேயே விட மாட்டார். அந்த செழிப்பில்லாத மணலிருந்து, ஆவிக்குரியவிதத்தில், உணர்வுரீதியாக, ஒழுக்கரீதியாக நம்மை களைப்புறச் செய்யும் இடத்திலிருந்து நம்மை பிடுங்கியெடுத்து மெய்யாகவே கனிகொடுக்கக்கூடிய இடங்களில் மறுபடியும் நாட்டுவார்.

ஒருவர், ஒருமுறை தன் சூழ்நிலையை என்னோடு பகிர்ந்துகொண்டார். பெருநிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, திருமணத்திற்கு புறம்பான உறவு அவருக்கு ஏற்பட்டது. அந்த உறவு தனக்கு நன்றாகவும், திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நம்பினார். மாறாக, எப்போதும் பயந்து மறைந்தே வாழ்ந்துகொண்டிருப்பதாக கூறினார். அவர் பெயர் கெட்டுப்போனது; அதற்கான காரணம் நரகம்போல இருந்தது. அவர் நம்பியதுபோல், மெய்யான சந்தோஷமாக அது இல்லை. தேவன் அதுபோன்று தவறான  இடங்களிலிருந்து நம்மை பிடுங்கியெடுப்பார். அவரது வார்த்தையாகிய, ஜீவத்தண்ணீர் பாயும் நதியண்டையில் நம்மை நாட்டுவார்; எப்போதும் கனிகொடுக்கும்படி செய்வார். அந்த ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் போராட்டங்களில் தயவாய் எனக்கு உதவி செய்திடும். என் வாழ்வில் தவறான இடங்களை, நான் உதவியற்றிருக்கிறவேளைகளை இப்போதே மாற்றிப்போடும். தவறான காரியங்களை என் வாழ்க்கையிலிருந்து அகற்றும். தவறான ஆசைகளை எடுத்துப்போடும். சரியான பாதையிலிருந்து என்னை விலகச் செய்யும் எல்லாவற்றையும் அகற்றி, இன்றிலிருந்து உம் வார்த்தையால் என்னை ஆசீர்வதித்தருளும். காலைதோறும் உம் வசனத்தை வாஞ்சையாக பருக உதவி செய்யும். நீர் தெளிவாகவும் தனிப்பட்டவிதத்திலும் என்னோடு பேசுவதை கேட்கப்பண்ணும். உம் சந்தோஷத்தால் என்னை நிறைத்து வாழ்வின் எல்லா பகுதிகளிலும் நான் செழித்திருக்கும்படி செய்யும். ஆண்டவரே, உம் வசனத்தில் வேரூன்றி, உம் ஜீவத்தண்ணீர் பாயும் ஆற்றண்டை நாட்டப்பட்டு, உறுதியான, செழிப்பான, கனிதரும் மரமாக என்னை விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.