அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆவியில் உந்துதல் கொண்டவர்களாக, ஆண்டவரிடமிருந்து புதியவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறேன். இன்றைக்கு, "கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" (சங்கீதம் 37:28) என்ற வசனத்தின் மூலம் அவர் நம்மோடு பேசுகிறார். ஆகவே, இந்த வசனத்தை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, சுதந்தரியுங்கள். தங்கள் வாழ்வில் நியாயமானவற்றை நடப்பிக்கிறவர்களையும், நியாயமான வழியில் நடக்கிறவர்களையும் ஆண்டவர் நேசிக்கிறார்.

ஒருமுறை நாங்கள் ஒரு கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிவிட்டு கிளம்பினோம். அப்போது கடைக்காரர் ஓடி வந்து, "சார், உங்கள் பர்ஸை விட்டுப் போகிறீர்கள்," என்று கூறினார். அவருடைய நேர்மையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அந்த பர்ஸில் ஒரு ரூபாய் கூட குறையவில்லை. இந்நாள்களில் இதுபோன்ற நேர்மையானவர்களை காண்பது அரிதாயிருக்கிறது. அவருடைய கடைக்குச் சென்றால் ஏமாற்றமாட்டார் என்பதை அறிந்தவுடன், அவர்மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டானது. அவர் மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். அன்பானவர்களே, நியாயவான்கள் அப்படியே நடக்கிறார்கள். அவர்கள் தீமையான எந்த காரியமும் செய்வதில்லை; சரியானவற்றை மாத்திரமே செய்கிறார்கள். என்னுடன் பணிபுரிந்தவர் ஒருவர் அப்படிப்பட்டவராயிருந்தார். நான் அவருடைய தவறுகள் சிலவற்றை சுட்டிக்காட்டினால், உடனே அதை ஒத்துக்கொண்டு, அவற்றுக்கு பொறுப்பேற்றுக்கொள்வார். அடுத்த முறை அதை சிறப்பாக செய்வதாக உறுதி கூறுவார். பலவேளைகளில் மக்கள் தங்கள் தவறுகளை மறைக்கிறார்கள். தங்கள் இருதயத்தில் நியாயமானவர்கள், எதையும் மறைப்பதை சகித்துக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தவற்றை தவறென்றே சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தவற்றை ஒத்துக்கொள்கிறார்கள். அன்பானவர்களே, நாம் சரியானவற்றை உறுதியாக ஆதரித்து, அதைப் பற்றிக்கொள்வதற்கு இப்படிப்பட்ட நியாய உணர்வுள்ளவர்களாக இருப்பது அவசியம்.

சிலவேளைகளில் நாம் தவறு செய்தாலும், மனந்திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்டு, காரியங்களை சரி செய்வதே முக்கியம். தங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு தம்மிடம் வருகிறவர்களை தேவன் நேசிக்கிறார். சமுதாயத்தில் அநியாயமாய் நடத்தப்படுகிறவர்களுக்கு நியாயம் கிடைக்க பிரயாசப்படுகிறவர்களும் உள்ளனர். உங்கள் இருதயத்தில் நியாய உணர்வு இருக்குமென்றால், பாடுபடுகிறவர்களுக்காக நீங்கள் பரிதவித்து, அவர்களுக்கு உதவி செய்து, நிலையை சீராக்க விரும்புவீர்கள். அவர்களுக்கு இரக்கமும் மனதுருக்கமும் காண்பித்து, அவர்களுக்கு சேவை செய்யும் மனதுடன் இருப்பீர்கள். இதுபோன்ற நியாயத்தை நம் உள்ளத்தில் காண்பதற்கு தேவன் விரும்புகிறார்; அப்படிப்பட்டவர்களை பரிசுத்தவான்கள் என்று அவர் அழைக்கிறார். நீதியை நடப்பிக்கிறவர்கள், சத்தியத்தை மதிக்கிறவர்களாக, வஞ்சகத்தில் ஈடுபடாதவர்களாக, உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்விலும், பிறருடைய வாழ்வு சார்ந்த விஷயத்திலும் நியாயத்தை உறுதியாக ஆதரிக்கிறார்கள். அதனால், தேவன், "நான் அவர்களை என்றென்றைக்கும் காத்துக்கொள்ளுவேன்," என்று கூறுகிறார். அவர்களை ஆசீர்வதித்து, அவர்கள் பெயரை இவ்வுலகிலும், பரலோகத்திலும் காத்துக்கொள்வதாக அவர் வாக்குப்பண்ணுகிறார். அன்பானவர்களே, நியாயத்தை நடப்பிக்கிறவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். அவரிடம், அப்படிப்பட்ட இருதயத்தை நாம் கேட்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதியை நேசிக்கிற, அதைப் பின்பற்றுகிற இருதயத்தை எனக்கு தாரும். என்னுடைய செயல்கள் எல்லாவற்றிலும் நான் நியாயமாய் நடந்துகொள்ள உதவும். சத்தியத்திற்காகவும், உம்முடைய பார்வைக்கு ஏற்றதும், சரியானதுமான காரியங்களுக்காகவும் உறுதியாக நிற்கவும் எனக்கு தைரியத்தை தந்தருளும். நான் பேசுகிறவற்றிலும் செய்கிற எல்லா காரியங்களிலும் நியாயத்தை செய்யும்படி இந்த ஜெபத்திற்கு நீர் பதிலளித்து என்னை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்புகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய பெயரை நீர் பெருமைப்படுத்தி, எப்போதும் என்னை காத்து, உம்முடைய வெளிச்சம் என் மூலம் பிரகாசிக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.