அன்பானவர்களே, "கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது" (யோசுவா 5:9) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும்.

கர்த்தர், எகிப்தின் நிந்தையை புரட்டித் தள்ளினார். அவர் அதை தூரமாக தள்ளிப்போட்டார் என்பதே இதன் பொருளாகும். இயேசுவின் உயிர்த்தெழுதலின்போது இதை நாம் காண்கிறோம். கல்லறையை மூடியிருந்த கல், இயேசு உயிர்த்தெழும்படி புரட்டித் தள்ளப்பட்டது. அவ்வாறே, உங்கள் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்னைகளையும் ஆண்டவர் இன்றைக்கு அகற்றுவார். உங்கள் விரோதிகளும், உங்களுக்கு தீங்கு உண்டாக்குவதற்கு முயற்சிக்கிற யாவரும் புரட்டித் தள்ளப்படுவார்கள். ஆண்டவர் உங்களை மகத்தான உயரங்களுக்கு உயர்த்துவார்.

இன்றைய தினம் காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பான நாளாகும். கடந்த ஆண்டு இதேநாளில் காருண்யா தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடமிருந்து (NAAC) A++ தரச்சான்றை பெற்றது. பல்கலைக்கழகத்திற்கு இது மிகவும் உயர்ந்த அங்கீகாரமாகும். தேவனுடைய கிருபையினால் மாத்திரமே காருண்யா இந்த கனத்தை பெற்றது. இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு நாங்கள் ஊக்கமாய் ஜெபித்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆண்டவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் காருண்யாவுக்கு இந்த மகத்தான கனம் என்னும் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது.  

வேதாகமத்தில், 2 இராஜாக்களின் புஸ்தகத்தில் எலிசா, தன்னுடைய வேலைக்காரன், தங்களைச் சுற்றிலும் இருக்கும் பாதுகாப்பை காணும்படி அவனுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்று தேவனிடம் ஜெபிக்கும் சம்பவம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அவனுடைய வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்டபோது, எலிசாவை சுற்றிலும் பெரிய சேனை இருப்பதை அவன் கண்டான். "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" (2 இராஜாக்கள் 6:16) என்று எலிசா கூறினான். அவ்வண்ணமே, உங்கள் விரோதியிடமிருக்கிறவர்களைப் பார்க்கிலும் அதிகமானோர் உங்களுடன் இருக்கிறார்கள். நம்முடைய கண்களால் அதைக் காண முடியாமல் இருக்கலாம்; ஆனால், கர்த்தர் பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களுடன் இருக்கிறார். உங்கள் முதுகில் குத்தியவர்கள், உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கிறவர்கள் உள்பட எல்லா விரோதிகளையும் தேவன் அகற்றுவார். தம்முடைய கல்லறையிலிருந்த கல்லை அவர் புரட்டித் தள்ளியதுபோல, எதிர்ப்புகளை ஆண்டவர் இன்றைக்கு புரட்டித் தள்ளுவார்; உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் வரும்படி செய்வார்.

அன்பானவர்களே, ஆண்டவருடைய பாதுகாப்பு உங்கள்மேல் இருக்கிறது. நாங்கள் காருண்யாவுக்காக ஜெபிக்கும்போதெல்லாம், பல்கலைக்கழகம் முழுவதும், காருண்யா வளாகம் முழுவதும் பெரிய பாதுகாப்பு இருப்பதை உணர்வோம். அவ்வாறே, ஆண்டவர், உங்கள்மேலும் உங்கள் குடும்பத்தினர் மேலும் தமது பாதுகாப்பின் கரத்தை வைத்திருக்கிறார். எந்த விரோதியாலும் உங்களை தொட இயலாது; எந்த சாபமும் உங்களை தொட முடியாது; எந்த தீய வார்த்தையும், பொல்லாங்கும் உங்களை தொட முடியாது. உங்களுக்கு விரோதமாக செய்யப்படும் சதியாலோசனை எதுவும் வாய்க்காது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பாதுகாக்கும் கரம் என்மேல் இருக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் என்னை நினைப்பதற்கும், என்னை பாதுகாப்பதற்கும் நான் எம்மாத்திரம்? அநேகர் எனக்கு விரோதமாக எழும்பி, எனக்கு தீங்கு செய்ய காத்திருக்கிறார்கள். நான் மிகவும் நேசித்தவர்களும், நம்பியவர்களும் எனக்கு துரோகம் செய்து, என் வாழ்க்கையை அழிப்பதற்கு முயற்சி செய்வதால் மனமுடைந்திருக்கிறேன். ஆனாலும், உம்மேல் நம்பிக்கை வைத்து, என் வாழ்க்கையின்மேல் உம் ஆசீர்வாதங்களை கூறுகிறேன். சத்துருவானவனின் பொல்லாத சதிகள் நொறுங்கட்டும் என்றும், நீர் என்னை விடுவிக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம் பாதுகாப்பின் கரம் என் வாழ்க்கையின்மேல் அமரட்டும். நான், ஆசீர்வாதங்களின்மேல் ஆசீர்வாதங்களை பெற்று, மகா உயரங்களுக்கு உயர்த்தப்படவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.