அன்பானவர்களே, இன்றைக்கு, "துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்" (நீதிமொழிகள் 15:29) என்ற வசனத்தை தியானிப்போம்.  துன்மார்க்கரான மனிதர்கள் பலர் செழிப்பாக இருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்; அவர்கள் உயர்ந்துகொண்டே போகலாம். நாம் இதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஏன் வெற்றி கிடைக்கிறது? நீதியாக வாழ்வதற்கு முயற்சிக்கும் நமக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி நமக்குள் எழும்பலாம். நாம் கடினமாக உழைத்தும், நமக்கு தகுதி இருந்தும், நமக்கு முன்னரே அவர்களுக்கு ஏன் வெற்றி கிடைக்கிறது என்று ஆச்சரியப்படலாம். 

ஆனாலும், வேதம், "நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்" (நீதிமொழிகள் 10:30, 7) என்று கூறுகிறது. நீதிமான் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு என்ன வல்லமை இருக்கிறது? "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது" (யாக்கோபு 5:16-18) என்று வேதம் கூறுகிறது. வேதத்தில் நீங்கள் இந்த சம்பவத்தை குறித்து விளக்கமாக வாசிக்கலாம் (1 இராஜாக்கள் 18ம் அதிகாரம்). நீதிமானின் ஜெபம் அவ்வளவு வல்லமையுள்ளது.

அன்பானவர்களே, ஒன்று நடக்கக்கூடாது என்று எலியா ஜெபித்தபோது, அது நடக்கவில்லை. ஆனாலும், அவன் மழைக்காக ஜெபித்தபோது, வானம் மழையைக் கொடுத்தது. அவ்வண்ணமாகவே, நீங்கள் ஜெபிக்கும்போது, தேவன் செவிகொடுப்பார். நாம் நீதியாக வாழ்ந்தால், தேவன் நம் ஜெபங்களை கவனித்து, நம்முடைய விண்ணப்பங்களை நிறைவேற்றுவார். தேவன் நீதிமான்களின் ஜெபங்களை கேட்கிறார். ஆகவே, இன்றைக்கு நீங்கள் ஜெபிக்கும்போது, தேவன் செவிகொடுத்து, உங்களுக்கு அற்புதங்களைச் செய்வார். இன்றைக்கு நமக்குத் தேவையானவற்றை அவரிடம் ஜெபத்தில் கேட்போம். அவர் நமக்கு அருளிச்செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் என்னுடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து, பரலோகத்திலிருந்து உத்தரவு அருளுவதாக உறுதிப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் நான் ஜெபிக்கும்போது, என்னுடைய ஜெபத்தை நீர் கவனிப்பீர் என்று அறிந்திருக்கிறேன். என்னுடைய தேவையை நீர் அறிந்திருக்கிறீர். என்னுடைய குறைவுகள் எல்லாவற்றையும் மகிமையில் உம்முடைய ஐசுவரியத்தால் நீர் நிறைவாக்கி, ஆவிக்குரியவிதத்திலும் சரீரபிரகாரமாகவும் என்னை பெலப்படுத்தி, உம்முடைய ஆசீர்வாதங்களை என்மேல் பொழிந்தருளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம் பார்வைக்கு ஆகாதவற்றை என்னிலிருந்து அகற்றி, என் வாழ்வில் உம்முடைய நன்மை நிறைந்து வழியும்படி செய்வீராக. அனுதினமும் நான் அதிகமதிகமாக நீதிமானாகி, உம்முடைய நாமத்திற்கு கனத்தை கொண்டு வரும்படி என்னை எப்போதும் வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.