அன்பானவர்களே, இன்று தேவன் உங்கள் வாழ்வில் ஒரு அசாதாரணமான காரியத்தை செய்யப்போகிறார். அவருடைய வல்லமை அளவிடப்பட முடியாதது. ஆகவே, அவரிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:37) என்று வேதத்தின் மூலம் அவர் நமக்கு நினைவுப்படுத்துகிறார். இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா சவால்களுக்கும் மேலாக தமது வல்லமையினால் தேவன் உங்களை உயர்த்தி, ஜெயம் பெறுவதற்கு உங்களை ஆயத்தப்படுத்துகிறார்.

வாழ்க்கையின் போராட்டங்கள் உங்களை அழுத்துவதால், "ஆண்டவரே, என் வாழ்வில் எத்தனையோ சவால்கள் இருக்கின்றன. எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன. முன்னேறுவதற்கு வழியே தென்படவில்லை. நான் எப்படி ஜெயம்பெறுவேன்?" என்று நீங்கள் கேட்கலாம்.

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பெண் இரண்டு வயது குழந்தையாயிருந்தபோதே தந்தையை இழந்துவிட்டார்கள். இவர்களுடைய தாயார் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் நான்கு பிள்ளைகளை தனியே வளர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அனுதின வாழ்க்கையே கஷ்டமாக இருந்ததால், எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்ற நிலையே காணப்பட்டது. யாரோ ஒருவர் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தைக் குறித்து இப்பெண்ணின் அம்மாவுக்கு கூறியுள்ளார்கள். இவர்கள் அம்மா, முழு விசுவாசத்தோடு தன் பிள்ளைகள் அனைவரையும் இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்துள்ளார்கள்.

இந்தப் பெண் பள்ளிப்படிப்பை முடித்தார்கள். மருத்துவராகவேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருந்தது. மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பது எட்ட முடியாத இலக்குபோல்  காணப்பட்டாலும், அதற்கான நுழைவுத் தேர்வை (NEET) எழுதினார்கள். அதிசயவிதமாக அதில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றார்கள்; கொல்கத்தாவிலுள்ள ஓர் அரசு மருத்துவ கல்லூரியில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. அதை அவர்களால் நம்பவே இயலவில்லை. அவர்கள் மிகவும் மகிழ்ந்து தேவனை துதித்தார்கள். மருத்துவப் படிப்பு மிகவும் கடினமாக காணப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்து படித்து, எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்கள். மருத்துவ துறையில் மேலும் முன்னேற விரும்பி, அதிக போட்டியுள்ள இன்னொரு தேர்வையும் எழுதினார்கள். தீவிரமான போட்டி இருந்தாலும், அதில் வெற்றி பெறும்படி தேவன் பெலத்தையும் திறமையையும் கொடுத்தார். இப்போது அவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார்கள்; அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறார்கள்; தன் குடும்பத்திற்கு ஆதரவாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய மூன்று அக்காமாரும் இக்கட்டான நிலையிலிருந்து தேவ கரத்தினால் உயர்த்தப்பட்டு, செழிப்பாக இருப்பதாகவும் இந்த சகோதரி தெரிவித்துள்ளார்கள். நம்பிக்கையே இல்லாத நிலையிலிருந்தவர்களை தேவன் இன்று உயரத்தில் அமர்த்தியுள்ளார். அன்பானவர்களே, உங்களுக்கும் இப்படியே செய்ய தேவன் ஆயத்தமாயிருக்கிறார். சந்தோஷமாயிருங்கள்; தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். உம்முடைய அன்பினால் நான் முற்றும் ஜெயங்கொள்ளுவேன் என்று வாக்குக் கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இக்கட்டுகளின் மத்தியிலிருந்து என்னை தூக்கியெடுத்து, செழிப்பான பாதையில் நடத்தும். கூடாத காரியங்களை நடத்தக்கூடிய உம்முடைய வல்லமையின்மேல் நான் நம்பிக்கையாயிருப்பதால் என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும். உம்முடைய திட்டத்தில் நான் மகிழ்ச்சியை கண்டடையும்படி, எல்லா இக்கட்டுகளையும் மேற்கொள்வதற்கான தைரியத்தினால் என்னை நிறைத்தருளும். உம்முடைய சித்தத்தின்படி என் வாழ்வை நிலைப்படுத்தி, உம்முடைய ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடும்படி செய்யும். எல்லா சூழ்நிலையிலும் உம்முடைய அன்பே என்னை தாங்குகிறது என்பதை நான் ஒருபோதும் மறந்துபோகாதபடி செய்யும். பாதையே இல்லாத இடத்தில் நீர் எனக்கொரு பாதையை ஏற்படுத்தி, உம்முடைய சமாதானத்தையும் பெலனையும் எனக்கு அருளிச்செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.