அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்" (சங்கீதம் 3:3) என்ற வசனத்தை இன்று தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, கர்த்தர்தாமே உங்களைச் சுற்றிலும் கேடகமாக இருப்பார். அவர் உங்களுக்கு மகிமையாக விளங்கி, உங்கள் தலையை உயர்த்துவார்.

தாவீதின் வாழ்க்கையில் அருமையான எடுத்துக்காட்டை பார்க்கிறோம். பெலிஸ்தனுடன் யுத்தம் செய்வதற்கு சவுல், தாவீதை அனுப்பியபோது, தன்னுடைய பட்டயத்தை அவனுக்குக் கொடுத்து, கவசத்தை தரிப்பித்தான். ஆனால், அவற்றை அணிந்துகொண்டு தாவீதால் நடக்க முடியவில்லை. அவன், "இது எனக்கு பழக்கமில்லை; இவற்றை போட்டுக்கொண்டு என்னால் போக முடியாது," என்று கூறினான். ஆகவே, அவன் கனமான ஆயுதத்தை வைத்துவிட்டு, தன்னுடைய தடியை எடுத்துக்கொண்டு எதிரியுடன் போரிட சென்றான். அவன் யுத்தகளத்திற்கு வந்தபோது, பெலிஸ்தன், பரிசைபிடிக்கிறவனுடன் நின்றுகொண்டிருந்தான். இளைஞனான தாவீது, ஆயுதமில்லாமல் வந்ததைக் கண்ட அவர்கள் எரிச்சலானார்கள். "உண்மையிலேயே எங்களை தோற்கடிக்கவா இப்படி வந்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். தாவீது திடமாக நின்று, "நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்," என்று கூறினான். மேலும், "இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்குவேன். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்," என்றும் தாவீது கூறினான். பெலிஸ்தன் தாவீதை தாக்குவதற்கு அவனை நெருங்கியபோது, தாவீது தன் பையினுள் கைவிட்டு, ஒரு கல்லை எடுத்து, கவணில் வைத்து எதிராளியின் நெற்றியில்படும்படி கல்லை எறிந்தான். கல், பெலிஸ்தனின்மேல் வேகமாக பட்டது; அவன் தரையில் விழுந்தான். "தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது" (1 சாமுவேல் 17:50) என்று வேதம் கூறுகிறது.

அன்பானவர்களே, பெலிஸ்தன், பாதுகாப்புக்கு தன்னுடைய பரிசைபிடிக்கிறவனை சார்ந்திருந்தான். ஆனால், தாவீதோ கர்த்தருடைய நாமத்தையே தனக்கு உண்மையான கேடகமாக கொண்டிருந்தான். அந்த நாமமே தாவீதுக்கு மகிமையாக விளங்கியது; அவனது தலையை உயர்த்தியது. அவன் ஈட்டியுடனும் பட்டயத்துடனும் செல்லாமல் தேவ பெலத்துடன் சென்றான். தேவன் அவனுக்கு வெற்றியை அருளிச்செய்தார். அன்பானவர்களே, இன்றைக்கு நீங்கள் இவ்வுலகின் போராட்டங்களை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம். இக்கட்டுகளை, வியாதியை, சவால்களை, கடினமான மனிதர்களை, தவறான குற்றச்சாட்டுகளை, அநியாயமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம். ஆண்டவரின் நாமமே உங்களுக்குத் தேவையாயிருக்கிறது. உங்களை பாதுகாப்பதற்கு சரீரப்பிரகாரமான கேடகமோ, வாளோ தேவையில்லை. ஆண்டவரின் நாமமே உங்களுக்குக் கேடகம். அதுவே உங்களுக்கு மகிமை. அதுவே உங்கள் தலையை உயர்த்தும்.

இன்றைக்கு ஆண்டவரின் நாமத்திற்குள் மறைந்துகொள்ளுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், அன்பானோருக்கும் அதுவே முத்திரையாக விளங்கட்டும். அவரது நாமம் உங்களுக்குக் கேடகமாகி, உங்களைப் பாதுகாக்கும். அவரே உங்கள் தலையை உயரமாய் உயர்த்துவார். இன்றைக்கு ஆண்டவரின் நாமம் நம்மேலும் நமக்கு அன்பானோர்மேலும் இருக்கும்படி அதை ஏற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் எனக்குக் கேடகமாகவும், என்னைக் காக்கிறவராகவும் என்னுடைய பெலனாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என்னுடைய மகிமையாயிருக்கிறீர்; என்னுடைய தலையை உயர்த்துகிறவரும், என்னை நம்பிக்கையால் நிரப்புகிறவருமாயிருக்கிறீர். எந்தப் போராட்டம் எனக்கு வந்தாலும் நான் என்னுடைய சுயபெலனை சாராமல், உம்முடைய வல்லமையுள்ள நாமத்தையே சார்ந்துகொள்ள உதவும். என்னையும் என் குடும்பத்தினரையும் உம்முடைய அன்பினால் மூடி மறைத்தருளும். உம்முடைய வல்லமை எனக்குக் கேடகமாக விளங்கப்பண்ணும். வாழ்வின் கடினமான தருணங்களில் உம்மை நம்பவும், உம்மை மாத்திரமே பாதுகாவலராக கருதவும் வேண்டிய தைரியத்தை எனக்கு தந்தருளும். எனக்கு அநியாயம் செய்யப்படும்போதும், என்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போதும் தயவாய் எனக்கு வல்லமையான கேடகமாக விளங்குவீராக. என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் உம்முடைய நாமத்தை முத்திரையிடும். இப்போதும் எப்போதும் நீர் என்னுடன் இருக்கிறீர் என்று அறிந்து உம்முடைய கிருபையை சார்ந்துகொள்ள எனக்கு உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.