அன்பானவர்களே, இன்றைக்கு, "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி" (பிலிப்பியர் 1:5) என்ற வசனத்தை தியானிப்போம். ஆண்டவர் சீக்கிரம் வருகிறார்; அவர் திரும்ப வரும்போது நாம் அவர் முன்பாக குற்றமற்றவர்களாக நிற்கும்படி நம்மை ஆயத்தப்படுத்துகிறார். "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்" (1 கொரிந்தியர் 1:8) என்று வேதம் கூறுகிறது. அவ்வாறே, "கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்" (சங்கீதம் 125:1) என்றும் வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் தேவனுடன் நடக்கும்போது, விசுவாசத்தில் உறுதியாயிருக்கும்போது, ஆவிக்குரிய வளர்ச்சி தொடரவேண்டும்.

ஆகவேதான், ஆண்டவர், "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளபடி முதலாவது நமக்கு இரட்சிப்பை அருளிச்செய்கிறார். நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருக்கும்போது, நம்முடைய பழைய பாவ சுபாவம் அகற்றப்படுகிறது; நாம் அவருக்குள் புதிதாக்கப்படுகிறோம்.

இரண்டாவதாக, "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக" (1 தெசலோனிக்கேயர் 5:23) என்று வேதம் கூறுவதுபோல, ஆண்டவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். இந்த பரிசுத்தமாக்குதல், நம்மால் நடப்பதல்ல; நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரால் நடப்பதாகும். நாம் தேவனுடைய பரிசுத்த சுபாவத்தை காண்பிக்கும்படியாக அவர் அனுதினமும் நம் குணாதிசயத்தை மறுரூபமாக்குகிறார்.

ஆண்டவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மில் ஒரு கிரியையை தொடங்கினால், அதை நிறைவேற்றாமல் விடமாட்டார். அவர் நம்மை முற்றிலும் சீர்ப்படுத்தி, அவரைப்போலாக்குகிறார். அவர், மிகுதியின் தேவனாய், பரிபூரணத்தின் தேவனாய் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் நாள் வரைக்கும் அவர் நம்மை குற்றமற்றவர்களாக காப்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். "என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" (சங்கீதம் 23:5) என்று தாவீது கூறுகிறான்.  நமக்குள் ஆண்டவரின் கிரியை நடத்தி முடிக்கப்பட்டதாயும் நிரம்பி வழிகிறதாயும் இருக்கிறது. இன்றும், தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் பரிசுத்தராய் இருக்கிறபடி, உங்களையும் பரிசுத்தமாக்குவாராக. அவரது பிரசன்னம் உங்களோடு இருப்பதாக; அவருடைய பூரண ஆசீர்வாதங்கள் நிறைவாய் உங்கள்மேல் தங்குவதாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னில் நீர் நற்கிரியையை தொடங்கியுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். கிறிஸ்துவின் நாள் பரியந்தம் அதை நடத்துவீர் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி, சீயோன் பர்வதம்போல் உறுதியாயிருக்கும்படி என்னை பெலப்படுத்தும். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றை முழுமையாய் பரிசுத்தப்படுத்தும். உம்முடைய பரிசுத்த சுபாவத்தை நான் காண்பிக்கும்படி என் இருதயத்தை அனுதினமும் மறுரூபப்படுத்தும். எனக்குள் பழையவையாய், பாவமானவையாய் காணப்படுகிற யாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவுக்குள் என்னை புதுச்சிருஷ்டியாக்கும். ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த சித்தத்தை விட்டு நான் ஒருபோதும் விலகிப்போகாமல் இருக்கும்படி, என்னை முற்றிலும் சீர்ப்படுத்தும். என்னை குற்றமற்றவனா(ளா)க காத்து, நீர் வரும்போது உமக்கு முன்பாக நிற்பதற்கு ஆயத்தப்படுத்தும். உம் பிரசன்னம் எப்போதும் என்னோடு இருக்கவேண்டும் என்றும், உம் ஆசீர்வாதங்கள் என்மேல் பூரணமாய் விளங்கவேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.