அன்பானவர்களே,"நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (1 கொரிந்தியர் 3:7) என்ற இன்றைக்கான வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டு வாழ்த்துகிறதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவதில், உழைப்பதில், பிரயாசப்படுவதில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையாததுபோல் நீங்கள் உணரலாம். படிப்பில் தோல்வி, தொழிலில் நஷ்டம், வேலையில் பிரச்னை, குடும்ப வாழ்வில் போராட்டங்கள் இருக்கக்கூடும். "ஆண்டவர் எனக்கு வெற்றியை வைத்திருக்கிறாரா?" என்று நீங்கள் சந்தேகப்படலாம். அன்பானவர்களே, நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் தேவனுடைய ஆசீர்வாதம் அதன்மேல் இல்லாவிட்டால், அது வாய்க்காது; பலன் அளிக்காது.
நீங்கள் செழிக்கும்படி இன்றைக்கு தேவன் விரும்புகிறார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் அவர் ஆசீர்வதிப்பார். "நான் இதற்கு நன்றாக முயற்சிக்கவில்லை," என்று நீங்கள் சொல்லலாம்; ஆனால், நீங்கள் முழு மனதுடன் செய்யும் சிறுகாரியங்களையும் தேவனால் பூரணமாக ஆசீர்வதிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யும் சிறு பிரயாசத்தையும் ஆண்டவர் ஆசீர்வதித்து, பெருகப்பண்ணுவார்.
வேதாகமத்தில் எலியாவை குறித்தும், விதவையைக் குறித்தும் வாசிக்கிறோம் (1 இராஜாக்கள் 17ம் அதிகாரம்). தேவன், சாறிபாத் என்னும் ஊருக்குச் செல்லும்படி எலியாவுக்குக் கட்டளையிடுகிறார். "உனக்கு உணவிடும்படி ஒரு விதவைக்கு கட்டளையிட்டிருக்கிறேன்," என்று கூறுகிறார். எலியா வந்தபோது, விறகு பொறுக்கிக்கொண்டிருந்த விதவையைக் கண்டான். அவளிடம் அப்பமும் தண்ணீரும் கேட்டான். அவளோ, "என்னிடம் அப்பம் இல்லை. ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணெயும் மட்டும் இருக்கிறது. நானும் என் மகனும் கடைசியாக சாப்பிட்டுவிட்டு, செத்துப்போகும்படி விறகு பொறுக்குகிறேன்," என்று கூறினாள். ஆனால், எலியா, "பயப்படாதே, போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் சிறிய அடையை எனக்கு செய்து, கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் செய்யலாம்," என்று கூறினான். பிறகு அவன், "கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்" என்று கூறினான். அவள் அவன் சொன்னபடியே செய்தாள். வாக்குப்பண்ணப்பட்டபடியே, அவள் மாவும் எண்ணெயும் குறைந்துபோகவில்லை. பஞ்சத்தில் நாள்தோறும் அவளும் அவள் குடும்பத்தினரும் போதுமான அளவு சாப்பிட்டார்கள்.
அன்பானவர்களே, அவ்வண்ணமே, உங்கள் கனவுகள், திட்டங்கள், இலக்குகளை அடைய முடியாததுபோல் காணப்படலாம். செலவழிக்க எதுவுமில்லை என்ற நிலையில் அல்லது பெலன் குன்றிப்போன நிலையில் நீங்கள் இருக்கலாம்.
இன்றைக்கு தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க நோக்கமாயிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள். அவர் உங்கள் வியாபாரத்தை, வேலையை, குடும்ப வாழ்க்கையை, படிப்பை ஆசீர்வதிப்பார். உங்கள் இருதயத்தில் தாம் போடுகிறவற்றை அவரே விளையச் செய்கிறார். அவரது ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியும். நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் தொடர்ந்து வளருகிறதையும், பெருகுகிறதையும் காண்பீர்கள். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்! இன்றைக்கு தேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார்; உங்கள் பிரயாசங்களை பெருகப்பண்ணுகிறார். பயப்படாதிருங்கள்; மனங்கலங்கிப் போகாதிருங்கள். தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கிறது; பரிபூரணத்தின் வழியே, வெற்றியின் வழியே அவர் உங்களை நடத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே எல்லா ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் இருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் முயற்சிகள் போதாதபோதும், என்னை நீரே பெருகப்பண்ணுகிறீர். உம்மாலன்றி என்னால் எதிலும் உண்மையான செழிப்பை காண முடியாது என்பதை அறிந்து என்னுடைய துக்கங்கள், போராட்டங்களோடு உம்மிடம் வருகிறேன். என் வாழ்வில், என் குடும்பத்தில், என் வேலையில் நான் எடுக்கிற சிறிய முயற்சியும் உம்முடைய கிருபையினால் பன்மடங்காய் பெருகும்படி உம்முடைய ஆசீர்வாதத்தை பொழிந்தருளும். தேவையின் நேரத்தில் விதவைக்கு வேண்டியவற்றை அருளிச்செய்ததுபோல, பெருக்கத்தின் தேவனாகிய நீர் என் வாழ்வின் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பீர் என்று நம்புகிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்களை முற்றிலுமாய் நம்பும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும்; பயங்களை அகற்றிவிடுவதற்கான தைரியத்தை எனக்கு தாரும். நன்றியுள்ள இருதயத்துடன் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களை இன்றைக்கு பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.