அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் அதிக மகிழ்ச்சி. "நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்" (சங்கீதம் 75:10) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இன்றைக்கு நீங்கள் இருக்கும் சூழ்நிலையிலிருந்து தேவன் நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.
சல்ஸா என்ற சகோதரியின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் கணவர் மரித்தபோது அவர்களுடைய இளைய மகள் வயிற்றில் இருந்தாள். கணவர் மரித்த பிறகு இருப்பதற்கு இடமில்லாத காரணத்தினால் அவர்களும் அவர்களுடைய மூத்த மகனும் ஒரு சிறுகுடிசையில் குடியிருந்தார்கள். அங்கேதான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்கள். சில நேரம் சாப்பிட எதுவுமில்லாத மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள். கிடைக்கிற சிறுசிறு வேலைகளை செய்து, தினக்கூலிபோல சம்பாதிக்கவேண்டியதிருந்தது. அந்த இக்கட்டான நிலையில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஊழியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்கள். அங்கே ஏறெடுக்கப்படும் ஜெபங்களால் ஆசீர்வாதம் பெற்றார்கள். தன்னுடைய குறைந்த வருமானத்திலிருந்து ஊழியத்தை தாங்க ஆரம்பித்தார்கள். தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்க ஆரம்பித்து, மற்றவர்களைக் குறித்து அவர்கள் கரிசனை காட்டியபோது, தேவன் அவர்களை ஆசீர்வதிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் அவர்கள் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சிகளை பார்த்தார்கள். ஒவ்வொரு முறை நான் ஜெபிக்கும்போதும், "என் வாழ்க்கையிலும் ஒரு அற்புதம் நடக்காதா?" என்று அவர்கள் கேட்பார்கள். ஒருநாள், நான் தேவ செய்தியை அளித்துக்கொண்டிருந்தபோது, "தேவன் உன்னை இப்போதே உயர்த்தப்போகிறார். தேவ சித்தம் உன் வாழ்க்கையில் நிறைவேறும்," என்று பரிசுத்த ஆவியானவர் என்னுடைய வார்த்தைகள் மூலம் நேரடியாக அவர்களோடு பேசினார்.
அந்த வார்த்தைகள் அவர்கள் இருதயத்தை ஆற்றும் தைலம்போல இருந்தது. அந்த ஜெபத்திற்கு பிறகு, தேவன் அவர்கள் வாழ்க்கையில் செயல்பட தொடங்கினார். அவர்களுடைய மூத்த மகன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தான். தொடர்ந்து, தானாக வியாபாரத்தை தொடங்கினான். தேவன் குடும்பத்தை ஆசீர்வதித்தார். இப்போது அவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது; சுற்றிலும் வசிக்கும் அனைவருக்கும் பெருத்த சந்தோஷத்தை இக்குடும்பத்தினர் அளிக்கிறார்கள். மெய்யாகவே தேவன் அவர்களை உயர்த்தியுள்ளார். அன்பானவர்களே, தேவன் இப்படியே உங்களுக்கும் செய்வார். அவர் நம் தலைகளை உயர்த்துகிறவர் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவமானத்தை, வெட்கத்தை, வறுமையை அனுபவித்த இடங்களில் தேவன் உங்களை உயர்த்துவார். ஆம், உங்கள் வேதனையை புரிந்துகொள்ளவும், உங்களை உயர்த்தும் வல்லமையுடையவராய் விளங்கவுமே இயேசு தம்மைத்தாமே சிலுவையின் மரணபரியந்தம் தாழ்த்தினார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நம்பிக்கையும் நன்றியும் நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே இன்றைக்கு வருகிறேன். நீதிமானை உயர்த்துவேன் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய போராட்டங்கள், இக்கட்டுகள் மத்தியிலும் என் வாழ்வில் நீர் கிரியை செய்துகொண்டிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, நான் இப்போது இருக்கும் சூழ்நிலையிலிருந்து என்னை நீர் உயர்த்தவேண்டும் என்று கேட்கிறேன். என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என் வாழ்வை குறித்த உம்முடைய எண்ணங்களிலும், உம்முடைய ஏற்ற சமயத்திலும் நான் நம்பிக்கை வைக்க உதவும். நீர் என் தலையை உயர்த்துகிறவர் என்று அறிந்து என்னுடைய கவலைகளையும் பயங்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை உம்முடைய சமாதானத்தினால் நிறைத்து, உம்முடைய ஞானத்தினால் என்னை வழிநடத்தும். என்னுடைய தேவைகளின் மத்தியிலும் நான் பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்கு உதவும். என்னுடைய வேதனையை நீர் அறிந்திருக்கிறபடியினாலும், நீர் எப்போதும் என்னோடிருக்கிறீர் என்ற நிச்சயத்தையும் நம்பிக்கையையும் எனக்கு தரும்படி சிலுவையில் நீர் செய்த தியாகத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.