அன்பானவர்களே, இந்த புத்தாண்டில் உங்களோடு தொடர்புகொள்வதில் மகிழ்ச்சிடைகிறேன். 2025ம் ஆண்டில் ஆண்டவர் உங்களுக்கு விசேஷித்த வாக்குத்தத்தத்தை வைத்திருக்கிறார். "கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்" (சங்கீதம் 121:5) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும்.
ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். தீங்கு வரும்போதெல்லாம் நீங்கள் சர்வவல்லவரின் நிழலில் பாதுகாப்பை கண்டடையலாம். விளையாட்டு மைதானத்திற்கு பிள்ளைகளுடன் செல்லும் பெற்றோரை குறித்து எண்ணிப்பாருங்கள். அவர்கள் தூரத்திலிருப்பதுபோன்றும், பிள்ளைகள்மேல் கவனமில்லாமலிருப்பதுபோன்றும் தெரியும். ஆனால், ஊஞ்சலிலிருந்தோ, சறுக்குப் பலகையிலிருந்தோ தங்கள் பிள்ளை விழப்போகும் தருணத்தில் அவர்கள் பாய்ந்து வந்து, பிள்ளை விழும் முன்னரே பிடித்துக்கொள்வார்கள். அவர்கள் தொலைவில் இருப்பதுபோல் தோன்றினாலும், எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; காப்பாற்றுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள். அவ்வாறே, ஆண்டவரும் உங்களை கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார். "மெய்யாகவே தேவன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாரா? நான் எதன் வழியாக கடந்துசெல்கிறேன் என்பதை அவர் காண்கிறாரா? ஏன் அவர் மௌனமாக இருக்கிறார்?" என்று நீங்கள் திகைக்கலாம். ஆனால், அன்பானவர்களே, உங்களுக்கு சிறிய இடர் ஏற்பட்டாலும் அவருக்குத் தெரிந்துவிடும். உங்களை மீட்பதற்கு அவர் விரைந்து வந்து, நீங்கள் விழும் முன்னரே உங்களை தாங்கிக்கொள்வார்.
சூரியனின் கொடும் வெயிலுக்கு தப்புவதற்கு நாம் நிழலை தேடுகிறதுபோல, எல்லா தீங்கிலிருந்தும் உங்களை காக்கும் நிழலாக ஆண்டவர் இருக்கிறார். வனாந்தரத்தில் அவர் இஸ்ரவேல் ஜனங்கள்பேரில் காட்டிய கரிசனையை நினைத்துக்கொள்ளுங்கள். பகலில் வெயிலிலிருந்து அவர்களை காப்பதற்கு அவர் மேகஸ்தம்பத்தை அனுப்பினார். அவ்வாறே அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்; உங்களை காக்கிறார்; பாதையில் தீங்கு வராதவண்ணம் தடுக்கிறார். அவர் உங்களை இரட்சிப்பார்; உங்களுக்கு நிழலாயிருப்பார்.
ஆகவே, அன்பானவர்களே, சந்தோஷமாயிருங்கள்! ஆண்டவரின் பராமரிப்பின்மேல் சந்தேகம் கொள்ளாதீர்கள். "தேவன் என்னை பார்க்கிறாரா? நான் சென்றுகொண்டிருக்கிற பாதை அவருக்கு தெரியுமா?" என்றெல்லாம் கேட்காதீர்கள். அவரே எப்போதும் உங்களைப் பாதுகாக்கிறபடியினால், அவரை முழுமையாய் நம்புங்கள். உங்களை மீட்பதற்காக அவர் வருவார்; உங்கள் வலப்பக்கத்தில் நிழலாயிருப்பார். இன்று அவரை ஸ்தோத்திரிப்போமா? அவருடைய ஆச்சரியமான வாக்குத்தத்தங்களை உரிமையாக்கிக் கொள்வோமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் ஒருபோதும் என்னைவிட்டு விலகாமல் என்மேல் கண் வைத்திருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு நிழலாகவும் காவலாகவும் எல்லா தீங்குக்கும் விலக்கும் கேடகமாகவும் நீர் விளங்குவதற்காக உம்மை துதிக்கிறேன். உம்மை காண இயலாவிட்டாலும், உம் சத்தத்தை கேட்க முடியாவிட்டாலும் நீர் எப்போதும் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறீர் என்று நம்புகிறேன். உபத்திரவ காலத்தில் என்னை மீட்பதற்கு விரைந்து வருவதற்காகவும் நான் விழுந்திடும் முன்னரே என்னை தாங்குவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். வனாந்தரத்தில் நீர் இஸ்ரவேல் ஜனங்களை தேற்றுகிறவராகவும் அவர்களுக்கு அடைக்கலமாகவும் இருந்தீர். இப்போது எனக்கும் அப்படியே இருக்கிறீர். வாழ்க்கையில் நெருக்குதல் இருந்தாலும் உம்முடைய சமுகத்தையும் வாக்குத்தத்தங்களையும் நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். வல்லமையுடையவரான நீர் எனக்கு காவலாய் இருக்கிறீர் என்று அறிந்து நான் திடநம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அடைவதற்கு உதவும். எந்த இக்கட்டுகள் வந்தாலும் உம்முடைய நிழலில் நான் எப்போதும் அடைக்கலம் கண்டுகொள்ள உதவி செய்தருளும். நீர் பாராட்டும் கிருபைக்காகவும் அளிக்கும் பராமரிப்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.