எனக்கு அருமையானவர்களே, தேவன், "உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" (மீகா 7:15) என்று வாக்குப்பண்ணுகிறார். நம் தகப்பனாகிய தேவன், மெய்யாகவே, தம் பிள்ளைகளுக்கு அற்புதங்களைச் செய்வதில் பிரியமாயிருக்கிறார். "அவர் நாமம் அதிசயமானவர்" (ஏசாயா 9:6) என்று வேதம் கூறுகிறது. தேவன், உங்களுக்கு அதிசயங்களைச் செய்வார். நினைத்துப்பார்த்திராததை உங்களை வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதற்கு அவர் ஆயத்தம்பண்ணியிருக்கிறார். "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படி" (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறபடியே அவர் செய்வார்.
"இப்படி ஒரு அதிசயம் எனக்கு நடக்குமா?" என்று நீங்கள் கேட்கலாம். மரியாளும் அப்படியே கேட்டாள். அவள், "கன்னியாக இருக்கும் எனக்கு இது எப்படி நடக்கும்?" என்று கேட்டாள். ஆனால், பரிசுத்த ஆவியானவர் அவள்மேல் வந்தார். தேவன்தாமே அவள் கருவில் குழந்தையாக உருவானார். அது எவ்வளவு ஆச்சரியம்! மரியாளுக்கு அப்படிப்பட்ட அற்புதத்தை செய்த தேவன், நிச்சயமாகவே உங்களுக்குத் தேவையானவற்றையும் செய்வார். இயேசு உங்களுக்குள் வாசம்பண்ணும்படியும், நீங்கள் இயேசுவின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படியும் அவர் செயல்படுவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. கானாவூரில் திராட்சரசம் இல்லாதிருந்தபோது, இயேசு ஓர் அற்புதத்தை செய்து தன் மகிமையை வெளிப்படுத்தினார் (யோவான் 2:11). சாதாரண தண்ணீரை அவர் இனிப்பான திராட்சரசமாக மாற்றினார். அன்பானவர்களே, உங்களுக்கும் அவர் அப்படியே செய்வார். பயப்படாதிருங்கள். உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.
சேலத்தை சேர்ந்த திருமதி ரமணி, தற்போது சென்னையில் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தபிறகு கடுமையான தலைவலியினாலும், உடல்வலியினாலும், சரீர பெலவீனத்தினாலும் அவதிப்பட்டார்கள். பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவோ, எந்த வேலையையும் செய்யவோ அவர்களால் இயலவில்லை. மருத்துவர்கள் அனைத்து பரிசோதனைகளையும் செய்து பார்த்தாலும், மருத்துவரீதியாக எந்தக் குறைபாட்டையும் காண இயலவில்லை. ஒரு வருட காலம் முழுவதும் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகமாக பாடுபட்டார்கள். அவர்களுடைய கணவர் தினக்கூலி வேலை செய்துவந்தார். ஆகவே, பணக்கஷ்டமும் இருந்தது. அவர்களுடைய தாயார், தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால், மருந்துக்கான செலவை அவர்களால் செய்ய இயலவில்லை. சுற்றிலுமிருப்பவர்கள், "உன் இயேசுவால் என்ன செய்ய முடியும்? அவர் இன்னும் சிலுவையில் தொங்குகிறார். அவரால் உனக்கு எப்படி உதவி செய்ய இயலும்?" என்று கேலி செய்தார்கள். இந்த வார்த்தைகள் அவர்களை அதிகமாய் காயப்படுத்தின. ஆண்டவரை பின்பற்றுவது குறித்து அவர்கள் தாயாரே அவர்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனாலும், சகோதரி ரமணி இயேசுவின் மேலான விசுவாசத்தில் உறுதியாயிருந்தார்கள்.
அந்த சமயத்தில் சென்னை ஆவடியில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா நடப்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களும் கூட்டத்திற்கு வந்து ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஜெபவேளையில் நான், "ஆண்டவரே, உம்முடைய ஜனங்களின் தலைவலியை நீக்கிப்போடும்," என்று ஜெபித்திருக்கிறேன். சகோதரி ரமணி, அந்த ஜெபத்தின்போது, அசையாத விசுவாசத்தோடு, தன்னை சுகப்படுத்தும்படி தேவனிடம் முறையிட்டிருக்கிறார்கள். கூட்டம் முடிந்து, பேருந்தில் ஏறுவதற்கு தன்னுடன் வந்தவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, தெய்வீக வல்லமை தன் உடலுக்குள் செல்வதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். "இதற்கு முன்பு இதேபோன்று ஆரோக்கியத்தையும் பெலனையும் நான் உணர்ந்ததில்லை," என்று அவர்கள் கூறினார்கள். அந்த தருணத்திலிருந்து ஆண்டவர் அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளித்தார். மறுநாள், அவர்கள் பூரண சுகத்தோடு வீடு திரும்பியிருக்கிறார்கள். நூறு சதவீதம் சுகத்தோடு இருக்கிறார்கள். இந்த அற்புதத்திற்கு நன்றியாக, அவர்கள் தங்கள் பிள்ளைகள் மூவரையும் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்துள்ளதோடு, இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கும் தவறாது வருகிறார்கள்; "தேவன் எனக்கு அதிசயங்களை காண்பித்தார்" என்று அவர்கள் சந்தோஷமாக சாட்சி கூறுகிறார்கள்.
அன்பானவர்களே, தேவன் உங்களையும் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். தகப்பனாகிய அவர், உங்கள் வாழ்வில் அதிசயங்களைச் செய்வதற்கு வாஞ்சையாயிருக்கிறார். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; அவருடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள்; அவருடைய மகிமை வெளிப்படுவதை காணுங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, ஆச்சரியமானவரும், அற்புதங்களைச் செய்கிறவருமான தேவனாகிய உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். "உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" (மீகா 7:15) என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசம்பண்ணி, இயேசு தரும் ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் வரும்படி செய்வாராக. கானாவூரில் நீர் தண்ணீரை இனிப்பான திராட்சரசமாக மாற்றியதுபோல, என் சூழ்நிலையையும் அற்புதவிதமாக மாற்றும். நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி, நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலான அற்புதங்களைச் செய்தருளும் (எபேசியர் 3:20). நீர் உண்மையுள்ளவர் என்பதை உறுதியாய் நம்பி, உம்முடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய கிருபையைக் குறித்து நான் சாட்சி கூறும்படி, என் வாழ்விலும் உம்முடைய மகிமையை வெளிப்படுத்தும். அற்புதங்களைச் செய்யும் உம்முடைய வல்லமை என் வாழ்வில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பரிபூரணத்தையும் அளிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.