அன்பானவர்களே, இந்த நாள் கர்த்தர் உங்களுக்கென்று உண்டுபண்ணின நாள். இது அவருடைய ஆசீர்வாதங்கள் நிறைந்த நாள். ஆகவே, களிர்ந்து மகிழுங்கள். "கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்" (சங்கீதம் 5:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், தேவன் நீதிமானை ஆசீர்வதிக்கிறார். அவருடைய கிருபை நீதிமானை கேடகம்போல சூழ்ந்துகொண்டு தெய்வீக பாதுகாப்பை அளிக்கிறது; வேண்டியவை எல்லாவற்றையும் அருளிச்செய்கிறது. தேவனுடைய கிருபை, உங்களுக்குள் நிரம்பி வழிகிறது. மனுஷர் முன்பாக தேவனுடைய தயவு இயேசுவின்மேல் வந்ததுபோல, பிறருடைய கண்களில் தேவன் உங்களுக்கு தயவை தந்தருளுவார் (லூக்கா 2:52). அவ்வண்ணமாக, தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்வண்ணம் அவருடைய கிருபை வாசல்களை திறக்கும். வழியில் எந்தத் தடையும் இருக்காது.

ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருமுறை, அரசு அதிகாரி ஒருவரிடம் சில அனுமதிகளை பெற வேண்டியிருந்தது. அவர் தேவனுடைய பிள்ளைகளை வெறுப்பவர் என்பதால், அவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு காரணங்களை தேடுவார் என்று கூறினார்கள். நாங்கள் பயப்படாமல், எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் கொடுத்து, "ஆண்டவரே, நீரே எங்களுக்கு ஜெயத்தை தரவேண்டும். உம்முடைய சித்தத்தை ஒரு காரியமும் தடுக்கக்கூடாது," என்று உபவாசித்து ஜெபித்தோம். ஜெபத்துடன் அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். அந்த அதிகாரி, எங்கள் குழுவினரை அழைத்தபோது, அவருடைய போக்கு முற்றிலும் மாறியிருந்தது. உதவி செய்யக்கூடியவிதத்தில், அனுமதியை பெறுவதற்கு ஆலோசனை கூறி, பயன்படுத்தவேண்டிய ஏற்ற வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து வழிநடத்தினார். அது, மனுஷருடைய கண்களில் கிடைக்கும் தயவு.

ஏற்ற மக்களுடன் நாம் தொடர்புகொள்ளும்படி செய்து, நமக்கு வேண்டியவற்றை அருளி, பாதுகாத்து, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தேவையான ஞானத்தை கொடுத்து, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவர் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவருடைய கிருபை கேடகம்போல, நம்மை முற்றிலும் சூழ்ந்திருக்கிறது. கிருபை உங்கள் வாழ்வை வெள்ளம்போல சூழ்ந்துகொள்ளும் நாளுக்கு ஆயத்தப்படுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய கிருபை கேடகத்தைப் போல என்னை சூழ்ந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய தெய்வீக பாதுகாப்பை எனக்குக் கொடுத்து, அனுதினமும் வேண்டியவற்றை அருளிச்செய்யும். நீர் இயேசுவுக்கு செய்ததுபோல, மனுஷரின் கண்களில் எனக்கு தயவை தந்தருளும். உம்முடைய சித்தம் என் வாழ்வில் தடையில்லாமல் நிறைவேறும்படி வாசல்களை திறந்தருளும். ஏற்றவர்கள் இடைப்படும்படியும், வாய்ப்புகள் உண்டாகும்படியும் என்னை வழிநடத்தும். எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்து, தீர்மானங்களை செய்ய தெய்வீக ஞானத்தை தந்தருளும். எதுவும் நிச்சயமற்ற சூழ்நிலையிலும் உம்முடைய ஏற்றவேளையின்மேலும், வழிகாட்டுதல்மேலும் நம்பிக்கையாயிருக்க உதவும். என் வாழ்வில் உம்முடைய தயவு பூரணமாய் காணப்படட்டும். நீர் வேண்டியவற்றை அருளுகிறதில் உண்மையுள்ளவர்கள் என்று முற்றிலும் நம்பி, என்னுடைய திட்டங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.