அன்பானவர்களே, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதே நமக்கு கிடைக்கக்கூடிய பெரிய ஆசீர்வாதமாகும். "பாவத்தின் சம்பளம் மரணம்" ஆனால், தேவன் அதற்கு ஒரு தீர்வை வைத்திருக்கிறார். "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" என்று வேதம் கூறுகிறது (ரோமர் 6:23).

இயேசு அருளும் பாவ மன்னிப்பானது தேவனின் கிருபைவரமாக இருக்கிறது. இன்றைக்கு உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டு, பாவத்தில் சாபத்திலிருந்து விடுதலை பெறலாம். உங்கள் ஆத்துமாவிலும் வாழ்விலும் நித்திய ஜீவனை அடையலாம். ஆகவேதான் இயேசு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று கூறுகிறார். "நான் உனக்கு பாவத்திலிருந்து மன்னிப்பை தருகிறேன். அது தேவனுடைய நித்திய ஈவு," என்று இயேசு கூறுகிறார் (ரோமர் 6:23). ஆம், உங்களுக்கு மன்னிப்பை அருள இயேசு விரும்புகிறார். ஆம், இயேசுவே, உங்கள் பாவம் மன்னிக்கப்படும்படி, தம்முடைய பரிசுத்த இரத்தமாகிய தேவனுடைய இரத்தத்தை சிந்தியதால் அவரால் மாத்திரமே இதைச் செய்ய முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவத்தையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). உங்களை ஒடுக்குகிற எல்லா பாவ சாபங்கள் நீங்கும்படி நீங்கள் சுத்திகரிக்கப்படுவீர்கள். ஆகவே, அன்பானவர்களே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டு, உங்கள் அடிமைத்தனங்களை விட்டு இயேசுவிடம் வாருங்கள். இப்போதும் உங்கள் குடும்பத்தில் யாராவது பாவத்திற்கு அடிமையாக இருந்தால், அவர்கள் விடுதலை பெறும்படி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உரிமையாக்கி மன்றாடுங்கள்.

பிரின்ஸி பீட்டர் என்ற பெயருடைய ஒரு சகோதரர் இருந்தார். அவரது பெயர் கிறிஸ்தவ பெயராக இருந்தாலும், கிறிஸ்துவுடன் அவருக்குத் தொடர்பு இல்லை. இளம்வயதிலிருந்தே குடித்துக்கொண்டிருந்தார். அதன் மத்தியிலும் அவரது அம்மா, அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு பிறகு இன்னும் அதிகமாய்க் குடித்தார்; ஆகவே, அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்கள். வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பழைய பிளாஸ்டிக் துண்டுகளை பொறுக்கி, விற்று பணம் சம்பாதித்து சாப்பிட்டார்; மது அருந்தினார். மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்தார். அப்படிப்பட்ட நிலையில் அவரது தாயார் அவரை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்து வந்தார்கள்; அங்கே ஜெப வீரர் ஒருவர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்றார். உங்கள் இருதயம் ஆண்டவருக்கு ஏற்றதாயிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது, அவருக்குள் மாற்றம் உண்டானது. மனந்திரும்பி, தேவனின் உதவியை நாடினார். ஜெப கோபுரத்திற்கு வந்து தியான அறையில் ஜெபித்து நேரத்தை செலவிட ஆரம்பித்தார். சிறிதுசிறிதாக குடிப்பழக்கம் அகன்றது. இயேசுவின் அன்பால் நிரப்பப்பட்ட புதுமனுஷனாக மாறினார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு, தாம் மரியாதைக்குரிய மனுஷனாக மாறியிருப்பதாகவும், உலகரீதியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகவும் சாட்சி கூறினார். இயேசுவின் இரத்தம் தன்னை சுத்திகரித்திருப்பதாக அவர் விசுவாசிக்கிறார். தேவன் அருளிய மன்னிப்பின் மூலம் வாழ்க்கையில் புதிய ஆரம்பத்தை கண்டார். அன்பானவர்களே, கர்த்தர், இயேசுவின் மூலம் நம்முடைய பாவங்களை மன்னித்து நித்திய ஜீவனை நமக்கு ஈவாக அளிக்கிறார். இந்த கிருபையை அவர் உங்களுக்குத் தருவாராக.

ஜெபம்:
பரம தகப்பனே, நான் பாவி என்பதை அறிந்து, உம்முடைய மீட்பின் கிருபையை வேண்டி இன்றைக்கு உம் முன்னே வருகிறேன். என்னுடைய பாவங்களையும் தப்பிதங்களையும் தாழ்மையுடன் அறிக்கை செய்து உம்முடைய மன்னிப்பை வேண்டுகிறேன். ஆண்டவரே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீர் எனக்கு அருளியிருக்கும் நித்திய ஜீவனாகிய ஈவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் மூலமாக மாத்திரமே நான் மெய்யான மறுரூபமாகுதலையும் புது ஜீவனையும் அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, அவரை நான் விசுவாசிக்கிறேன் என்று அறிக்கையிடுகிறேன். என்னுடைய தகுதியினால் இந்த ஈவைப் பெற முடியாது; ஆனால், திறந்த இருதயத்தோடும் நன்றி நிறைந்த ஆவியோடும் இதைப் பெற்றுக்கொள்கிறேன். தகப்பனே, கிறிஸ்துவுக்குள்ளான என்னுடைய புதிய அடையாளத்தை காட்டும்வண்ணம் நான் வாழ்வதற்கு வழிகாட்டும். பாவத்திற்கு விலகி, நீதியாய் வாழ்வதற்கு உதவும். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து, உமக்குள்ளான ஐக்கியத்தில் வளரும்படி பெலப்படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.