அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி" (பிலிப்பியர் 1:6) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். அன்பானவர்களே, இயேசு அழைக்கிறார் ஊழியம் உங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கிவருகிறது என்று நாம் நம்புகிறேன். சமூக ஊடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரார்த்தனை திருவிழாக்கள், தொலைபேசி ஜெப கோபுரம் மற்றும் ஜெப கோபுரத்தின் வாயிலாக நீங்கள் ஊழியத்தோடு தொடர்பில் இருக்கலாம். இவை அனைத்தும் எப்படி தொடங்கின என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த ஊழியத்தை தொடங்கிய என்னுடைய தாத்தா, 1960ம் ஆண்டை ஒட்டிய காலத்தில் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, அவரை காசநோய் (TB) பாதித்தது.

அந்நாள்களில் அவர் தெருக்களில் ஊழியம் செய்தார்; சாலை ஓரங்களில் சுவிசேஷத்தை அறிவித்தார். அவர் காசநோயினால் பாதிக்கப்பட்டபோது, இருமினால் இரத்தம் வந்தது. நோய் குணமாகாத காரணத்தினால் அவர் என் பாட்டியிடம், தான் இறந்துவிடுவேன் என்று கூறி, பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இனிமேல் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியாது என்று நம்பிக்கையிழந்து பேசினார். ஆனாலும் என் பாட்டி, அவருடைய ஊழியத்தைப் பற்றி கொடுக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை நினைவுப்படுத்தி, அவர் மரணமடையமாட்டார் என்று உறுதியுடன் கூறினார்கள். இருந்த வேதனையின் மத்தியில் அவரால் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்போது தேவன் அவருக்கு தோன்றி, எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்தை காட்டினார்; தொடர்ந்து அவர் குணமடைந்தார்.

தெருக்களில் பிரசங்கித்துக்கொண்டிருந்த அவர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பிரார்த்தனை திருவிழாக்களில் பேச ஆரம்பித்தார். இன்றைக்கு தாத்தா எங்களுடன் இல்லாதபோதிலும், நாங்கள் அந்தப் பணியை தொடர்ந்து செய்கிறோம்; பிரார்த்தனை திருவிழாக்கள் மூலம் 5 லட்சத்துக்கும் மேலான மக்களை சந்திக்கிறோம்; சமூக ஊடகம், தொலைக்காட்சி மற்றும் ஜெப கோபுரங்கள் வாயிலாக பல லட்சம் பேருக்கு ஊழியம் செய்கிறோம். நற்கிரியைகளை செய்யும்படி என் தாத்தாவை பெலப்படுத்திய தேவன், அந்த நற்கிரியையை செய்யும்படி எங்களையும் பெலப்படுத்த உண்மையுள்ளவராயிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இயேசு திரும்ப வரும் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்ற உறுதியுடன் இருக்கிறோம்.

என் தாத்தா மறைந்தபோது தேவன், "இதுவரை ஒரே ஒரு தினகரனையே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். வரும் நாட்களில் இந்த நற்கிரியையை தொடர்வதற்கு ஆயிரக்கணக்கான தினகரன்களை நான் எழுப்புவேன்," என்று கூறினார். ஆகவே, அன்பானவர்களே, ஜெப கோபுரத்தில் மற்றவர்களுக்காக ஜெபித்து, பிறருக்காக அழுது, அவர்கள் கண்ணீரை துடைத்து, அவர்களுக்கு அற்புதத்தை கொண்டுவருவதற்கு உங்கள் நேரத்தை அளித்து இயேசு அழைக்கிறார் ஊழியம் மூலம் நற்கிரியையை தொடரலாம். இப்போதும் நாம் இணைந்து இந்த நற்கிரியையை தொடர்வோம். தொடர்ந்து செய்வதற்கான பெலனை, ஞானத்தை, வல்லமையை தேவன் நமக்கு அருளுவார். மக்களுடைய கண்ணீரை துடைத்து, அவர்களுக்கு அற்புதங்களை கொண்டு வரும் பணியை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னில் நீர் நற்கிரியையை ஆரம்பித்திருப்பதற்காகவும், கடந்த ஆண்டுகளில் என்னிலும் என் மூலமாகவும் நீர் செய்திருக்கிற எல்லா அற்புதங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஜனங்களை தொட்டு, அவர்களை உம் பக்கமாக திருப்பும் நற்கிரியையை தொடரும்படி ஜெபிக்கிறேன். இந்த தெய்வீக பணியை தொடர்வதற்கான வல்லமையை அதிகமாய் அருளிச்செய்யும். ஜனங்களுக்காக ஜெபித்து, அவர்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்படி, அவர்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்படி செய்து உமக்கு ஊழியம் செய்ய என் நேரத்தை அர்ப்பணிப்பதற்கு உதவும். இந்த நற்கிரியையை தொடர்வதற்கு என்னை பெலப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உலகத்தை உம்முடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை உண்மையாய் தொடர்வதற்கு எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.