எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய தினம் உங்களுக்கு ஆசீர்வாதமானதாக அமைவதாக; ஆண்டவர் எப்போதும் உங்களை வழிநடத்துவாராக. இன்றைக்கு, "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" (யாத்திராகமம் 33:14) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். எவ்வளவு மகிமையான வாக்குத்தத்தத்தை தேவன் தருகிறார்!

ஆம், அன்பானவர்களே, நம் வாழ்விலும் இது நிறைவேறுவதற்கு நாம் முழு இருதயத்தோடும் தேவனை தேடி, பயபக்தியுடன் அவரிடம் ஜெபிக்கவேண்டும். நாம் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடும்போது, அவர் எப்போதும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்துவார். ஆகவேதான் வேதம், "அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்" (சங்கீதம் 105:4) என்றும், "நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்" (நீதிமொழிகள் 8:30) என்றும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. "களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே" என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆம், அருமையானவர்களே, ஜெபம் உண்மையில் அருமையானது. ஜெபத்தின் மூலமாக நாம் தேவனுடன் பேசலாம்; அவருடன் நடக்கலாம்; தேவ பயத்துடன் வாழலாம்; அவருடைய தெய்வீக இளைப்பாறுதலையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம். இயேசு எப்படி ஜெபித்தார்? அவர், சாயங்காலம் ஜெபித்தார் (மத்தேயு 14:23); "அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்" (லூக்கா 6:12) என்று வேதம் கூறுகிறது.

இவ்வாறே, நம்மைப்போன்ற மனுஷனாகிய தாவீது தினமும் அதிகாலையில் ஜெபித்தான். "அதிகாலமே உம்மைத் தேடுகிறேன். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்" என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 63:1; 55:17). அதனால், கர்த்தர் அவனுக்கு மேய்ப்பராகி, வாழ்நாள் பரியந்தம் அவனை நடத்தினார். அவ்வாறே, எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரின் சமுகத்தை தினமும், நேரம் வாய்க்கும்போதெல்லாம் தேடும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் ஆண்டவர் உங்களுக்கு முன்னே சென்று, எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து முடிப்பார். அல்லேலூயா! நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர்!

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய சமுகத்தில் சமாதானமும் இளைப்பாறுதலும் இருக்கிறதென்று வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயபக்தி நிறைந்த இருதயத்துடன் ஜெபத்தில் உம்மை தொடர்ந்து தேடுவதற்கு எனக்கு உதவும். என் இனிய இரட்சகரான இயேசு இவ்வுலகில் இருந்தபோது அவரையும், தேவ மனுஷனாகிய தாவீதையும் அவர்களுடைய ஜெபத்தின் மூலம் நீர் வழிநடத்தியதுபோல என்னையும் நடத்தும். உம்மோடு அனுதினமும் நடப்பதற்கு எனக்குப் போதித்தருளும். நீர் வாக்குப்பண்ணியுள்ள சமாதானத்தையும் பெலனையும் உம்முடைய சமுகத்தில் நான் அனுபவிக்கும்படி செய்யும். நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் நீர் முன்னே செல்லும்; என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறட்டும். ஆண்டவரே, நான் உமக்குள் களிகூருகிறேன்; உம்முடைய கிருபையை நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.