அன்பானவர்களே, "உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்" (உபாகமம் 28:5)  என்று வேதம் கூறுகிறவண்ணம் ஆண்டவர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பாராக. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பில், "நீ சாப்பிடுவதற்கு மிகுதியான அப்பங்கள் இருக்கும்," என்று எழுதப்பட்டுள்ளது. இங்கு 'கூடை' என்பது, இஸ்ரவேல் ஜனங்கள் அறுவடை செய்வதற்கு சுமந்து செல்லும் கலத்தைக் குறிக்கிறது. 'தொட்டி' என்பது அப்பம் செய்வதற்கு மாவு, தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை கலந்திடும் கலத்தைக் குறிக்கிறது. இவை அவர்களுடைய அன்றாட வாழ்வின் பிழைப்பை, வாழ்வாதாரத்தை குறிப்பவையாக உள்ளன. அவர்களுடைய அன்றாட, சாதாரண வாழ்வும் பூரணப்படும்படி செழிப்பாக்குவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவ்வாறே, ஆண்டவர் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையானவற்றை அருளி, நம்மை விசாரித்து ஆசீர்வதிக்கிறார். நமக்கு எது மிகவும் சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார்; ஏற்ற வேளையில் இடைப்பட்டு, பரிபூரண ஆசீர்வாதங்களை தருகிறார்.

தேவன் தம் ஜனங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறார் என்று இயேசு நிச்சயமாய் கூறுகிறார் (மத்தேயு 6:25-34). நம்முடைய பரம பிதா, நமக்கு என்ன தேவை என்று அறிந்து, அதை அளிப்பார் என்பதால் நம்முடைய தேவைகளைக் குறித்து கவலைப்படாமல் இருக்கும்படி அவர் தைரியப்படுத்துகிறார். நம் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுக்கும்போது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33) என்று இயேசு கூறியுள்ளதுபோல எல்லாமும் கிரமமாக அமையும். தேவனுக்கு முதலிடம் கொடுப்போம்; பரிசுத்தமாக வாழ்வதற்கு பிரயாசப்படுவோம். அப்படிச் செய்யும்போது, நமக்குக் தேவையான லௌகீக ஆசீர்வாதங்கள் எல்லாம் பின்தொடரும். நம்முடைய தேவைகளை தமக்கு மகிமையானவிதத்தில்கொடுப்பதற்கு தேவன் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

பிரதான் என்ற அன்பு சகோதரரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர் ஒரு நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்துகொண்டிருந்தார். பெருந்தொற்று காலத்தில் அவர் வேலையை இழக்க நேரிட்டது. அவரது மனைவி ரஷ்மிதா, தன் கணவருக்காக ஜெபிக்கும்படி ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். அங்கே தங்கள் குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்து, தங்கள் குறைவின் மத்தியிலும் உண்மையாய் ஊழியத்திற்குக் காணிக்கை கொடுத்தார்கள். ஜெப கோபுரத்தில், ஜெப வீரர்கள், புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கும்படி ஜெபத்துடன் அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் அதை தேவனிடமிருந்து வந்த வார்த்தையாக ஏற்றுக்கொண்டனர். நிறுவனத்தை தொடங்கிய மறுநாளே, ஒரு வேலை அவர்களுக்குக் கிடைத்தது. ஒரு வார காலத்திற்குள் சகோதரர் பிரதானால் ரூ.60,000 சம்பாதிக்க முடிந்தது. ஆண்டவர் அவர்களை நாளுக்குநாள் தொடர்ந்து ஆசீர்வதித்தார். இப்போது அவரிடம் 20 பேர் வேலை செய்கிறார்கள். சகோதரர் பிரதானுக்கு தேவன் ஒரு வீட்டைக் கொடுக்கவேண்டும் என்று என் கணவர் ஒருநாள் ஜெபித்தார். தற்போது, அவர் சொந்த வீட்டில் குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழ்கிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்!

அவர் நம் அன்றாட வாழ்வை ஆசீர்வதிக்கிறார். உங்கள் கூடையையும் மாப்பிசைகிற தொட்டியையும் அவர் ஆசீர்வதிப்பார்; நீங்கள் சாப்பிடுவதற்கான போஜனம் ஏராளமாய் இருக்கும். இந்த வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் மெய்யாய் நிறைவேறுவதாக. அவரை நம்புங்கள்; அவருடைய ராஜ்யத்தை தேடுங்கள்; உங்களுக்காக அவர் செய்யும் அற்புதங்களை காணுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, வசனத்தில் நீர் கூறியுள்ளபடியே என்மேல் கிருபை பாராட்டி, என்னை விசாரிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கூடையையும் மாப்பிசைகிற தொட்டியையும் ஆசீர்வதித்து, என் வாழ்வை உம்முடைய பரிபூரணத்தினால் நிரப்பும். உம்மை முழுவதுமாய் நம்பவும், என் தேவைகள் எல்லாவற்றையும் உம்முடைய ஏற்ற வேளையில் அருளிச்செய்வீர் என்று விசுவாசிக்கவும் உதவி செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். நான் ஒருபோதும் கவலைப்படாமல், நீர் தேவைகளை கொடுப்பதாக, என்னை விசாரிப்பதாக அளித்துள்ள வாக்குத்தத்தங்களை சார்ந்துகொள்ள உதவி செய்யும். என் வாழ்வில் எல்லாவற்றிலும் உமக்கு முதலிடம் கொடுப்பதால் என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என் அனுதின வாழ்வில் காணப்படும் ஆசீர்வாதங்கள் உமது மகத்துவத்திற்கும் அன்புக்கும் சாட்சியாக விளங்கட்டும். என் வாழ்வில் எப்போதும் ஆளுகை செய்வதற்காக உம்மை துதித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.