அன்பானவர்களே, இன்றைக்கு, "தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்" (யோபு 37:5) என்ற வசனத்தை நாம் தியானிக்கிறோம். தேவன் பேசும்போது, அற்புதங்கள் நடக்கின்றன. "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" (சங்கீதம் 33:9) என்று வேதம் கூறுகிறது. தேவன், என் கணவர் மூலமாக பேசுவதை பலவேளைகளில் கேட்டிருக்கிறேன். நாங்கள் குடும்பமாக ஜெபிக்கும்போது ஆண்டவர் தீர்க்கதரிசன வார்த்தைகள் மூலம் எங்களோடு பேசுகிறார். ஆண்டவர் எப்படி பேசுவார், மனுஷன் எப்படி பேசுவான் என்று நாம் தெளிவாய் வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். கர்த்தர் முழங்குகிறார்! தேவன் இடிமுழக்கம்போன்ற சத்தத்தில் பேசுகிறார்; அவருக்கு முன்பு நாம் நடுங்குகிறோம். குடும்ப ஜெபத்தின்போது ஆண்டவர் எங்களிடம் என்ன பேசுகிறாரோ அதை அவர் நிச்சயமாய் செய்துமுடிப்பார். தேவன் தம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்துவார் என்பதை அறிந்து, அவர் தரும் எல்லா தீர்க்கதரிசனங்களையும் உரிமையாக்கிக்கொள்கிறோம்.
ஆம், அன்பானவர்களே, உங்கள் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். நீங்கள் எந்தப் பாதையில் கடந்துசென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும். உங்கள் பெயரை அவர் அறிந்திருக்கிறார். "அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே" (ஏசாயா 40:26) என்று வேதம் கூறுகிறது. அவருடைய படைப்பின் மீது அவருக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கிறது. நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் நம்மை பார்க்கிறார்; நம்மோடு பேசுகிறார். சீஷர்கள் புயலில் அகப்பட்டுக்கொண்டபோது, அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் பயத்தில், "ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் மடிந்துபோகிறோம்," என்று கூப்பிட்டார்கள். உடனடியாக இயேசு எழும்பி, காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். காற்று அமர்ந்தது; எங்கும் அமைதியுண்டாயிற்று. சீஷர்கள் வியந்து, "இவர் யார்? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே," என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். நம்முடைய அறிவுக்கு எட்டாத அற்புதத்தை அவர் செய்கிறார். அன்பானவர்களே, அவர் உங்களுக்கும் பெரிய அற்புதத்தைச் செய்வார்.
ஜெனிபர் என்ற சகோதரியின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் நடத்திய உபவாச ஜெபத்தில் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு தந்தை இல்லை. அவர்கள் தாயார் பார்த்து வந்த ஆசிரியை வேலையையும் இழக்க நேரிட்டது. சகோதரி ஜெனிபர், சிறுநீரகத்தில் உண்டான கற்களால் அவதிப்பட்டார்கள். அவர்கள் தங்கை வேலைதேடிக்கொண்டிருந்தாள். அதிக கடன், பணக்கஷ்டம் ஆகிய பாரங்கள் குடும்பத்தை அழுத்திக்கொண்டிருந்தன. இக்கட்டான நிலையில் தங்கள் நிலத்தை விற்பதற்கு அவர்கள் தீர்மானித்தார்கள். ஜெபவேளையில் அவர்கள், "ஆண்டவரே, ஏதாவது செய்து எங்களை இதிலிருந்து விடுவித்தருளும்," என்று மன்றாடினார்கள். அன்று நான் மக்களுக்காக ஜெபித்தபோது, அவர்களும் என்னோடு இணைந்து ஜெபித்தார்கள். நாங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஜெபித்தோம். கூட்டம் நடந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு, அவர்கள் தங்கள் ஜெப விண்ணப்பங்கள் அனைத்தையும் எழுதி, ஜெப விண்ணப்பப் பெட்டியில் போட்டார்கள்.
ஆண்டவர், உடனே அவர்கள் ஜெபங்களுக்கு பதில் கொடுத்தார். அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்ததற்கேற்ப அவர் வல்லமையாக செயல்பட்டார். ஜெனிபருக்கு இருந்த சிறுநீரக கல் பிரச்னை முற்றிலும் குணமானது. அவர்கள் தங்கைக்கு வேலை கிடைத்தது; அவர்கள் நிலம் விற்கப்பட்டது. எல்லா பணக்கஷ்டம் மற்றும் கடன்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் நினைத்துப் பார்த்திராதவண்ணம் ஆண்டவர் பல அற்புதங்களைச் செய்தார்.
அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் குடும்பத்துக்கும் நல்லவராகவே இருப்பார். அவர் உங்களுக்கு பெரிய காரியங்களைச் செய்வார். அதை உங்களால் கிரகிக்க இயலாது. நம்முடைய ஜெபங்களுள் ஒன்றுக்கு மாத்திரம் பதிலளிக்கும் அளவுக்கு அவர் பிசினித்தனமானவர் அல்ல. அவர் உதாரகுணமுள்ளவர். இப்போதும், அவர் ஒரு வார்த்தை சொல்வார்; நீங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். இதை விசுவாசித்து பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய மகத்துவமான வல்லமையை கண்டு ஆச்சரியத்துடன் உம் முன்னே வருகிறேன். உம்முடைய சத்தம் ஆச்சரியமானவிதத்தில் முழங்குகிறது; நான் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை நீர் செய்கிறீர். ஆண்டவரே, என் இருதயத்தில் மறைந்திருக்கும் எல்லா ஜெப விண்ணப்பங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்னை பெயர் சொல்லி அழைக்கிறீர். ஆண்டவரே, பேசும்; என் வாழ்வில் உம்முடைய பூரண சித்தத்தின்படி அற்புதங்கள் நடப்பதாக. என் வாழ்வைக் குறித்து நீர் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் உரிமையாக்கிக்கொள்கிறேன். நீர் உதாரகுணமுள்ள தேவன். உம்முடைய பிள்ளைகளுக்கு வழங்காமல் எந்த நன்மையையும் ஒருபோதும் வைத்துக்கொள்ளமாட்டீர். அதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கு வேண்டியவற்றையெல்லாம் தருவதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறீர் என்பதை முழுவதும் விசுவாசித்து, எப்போதும் உம்முடைய சமுகத்தில் நான் நடப்பதற்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.