அன்பானவர்களே, "...அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன்" (எண்ணாகமம் 14:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். உங்களை பலத்தவராக்குவதற்கு தேவன் விரும்புகிறார். இராட்சதர்களைக் காட்டிலும் உங்களைப் பெரியவராக்குவதற்கு அவர் வாஞ்சிக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு மோசேயைக் கொண்டு தேவன் வழிநடத்துகிறதை நீங்கள் இந்த வேத பகுதியில் வாசிக்கலாம். அவர்கள் அந்த தேசத்திற்கு வந்தபோது, தங்களைக் காட்டிலும் பெலத்தவர்களாக, உயரமாக, இராட்சதர்களைப் போல காணப்பட்ட மக்களை பார்த்தார்கள். அவர்கள் முன்பு தாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருப்பதாக இஸ்ரவேல் ஜனங்கள் எண்ணினார்கள். இந்த இராட்சதர்களின்மேல் தேவன் தங்களுக்கு ஜெயத்தை தந்து, அவர் வாக்குப்பண்ணிய தேசத்தை சுதந்தரிக்கச் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டு, அவர்மேல் கொண்டிருந்த விசுவாசத்தை இழந்தார்கள். "மோசே, நாங்கள் இந்த தேசத்தில் சாகும்படி ஏன் எங்களை கொண்டுவந்தீர்?" என்று அவர்கள் பயத்துடனும் அவநம்பிக்கையுடனும் கேட்டார்கள். அவர்கள் தேவனை விசுவாசிக்கவில்லை. தேவனுடைய ஊழியனாகிய மோசேயை நம்புவதற்கு அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, தேவன், "முறுமுறுக்கிற, என்னை விசுவாசிக்க மறுக்கிற இந்த ஜனங்களைக் காட்டிலும் நான் உன்னை பெரிதும் பலத்தவனாக்குவேன்," என்று கூறினார்.
இன்றைக்கு நாம் இதேபோன்ற சவால்களை, இருவிதமான ஆவிகளை சந்திக்கிறோம். நாம் இயேசுவின் பெயரை சுமந்துசெல்வதால், நம்மை ஒடுக்கக்கூடிய இராட்சதர்களை சந்திக்கிறோம். அப்போது, "ஆண்டவரே, நான் இப்படி ஒடுக்கப்படுவதற்கு நீர் ஏன் அனுமதித்தீர்? என்று கேட்கக்கூடும். இந்த இராட்சதர்களிடமிருந்து நம்மை ஆண்டவர் இயேசுவின் வல்லமையால் விடுவிக்க இயலுமா என்று சந்தேகித்து, இஸ்ரவேல் ஜனங்களைப்போல முறுமுறுக்க ஆரம்பிக்கிறோம். தாங்கள் கூறுவதை பின்பற்றாதவர்களை அழித்துவிடலாம் என்று எண்ணக்கூடிய இராட்சதர்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் தேவன், "மோசே, நீ என்னை விசுவாசித்தபடியினால், இந்த இராட்சதர்களைக் காட்டிலும், முறுமுறுக்கிற இந்த மக்களைக் காட்டிலும் உன்னை நான் பெரிதும் பலத்தவனாக்குவேன்," என்று கூறுகிறார். அன்பானவர்களே, "ஆம், ஆண்டவரே, என்னைச் சுற்றிலும் இராட்சதர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், நான் முறுமுறுக்கமாட்டேன். உமக்கு பிரியமில்லாதவற்றை செய்யமாட்டேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன். என்னையும், உம்மையும் வெறுக்கிற இந்த இராட்சதர்களைக் காட்டிலும் நீர் என்னை பெரிதும் பலத்தவனா(ளா)க்குவீர் என்று நம்புகிறேன்," என்று சொல்லுங்கள். தேவன் உங்களை உயர்த்துவார்.
சேலத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற அன்பு சகோதரரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர் விவசாயம் செய்கிறவர். பள்ளியில் படித்த அவரது மகள் பொல்லாத வல்லமையின் பிடியில் சிக்கியிருந்தாள். இயேசு அழைக்கிறார் ஊழியத்தை அவருக்கு யாரோ ஒருவர் அறிமுகம் செய்தார். அவர்கள் நாங்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்கள். நாங்கள் ஜெபித்தபோது, பிசாசுகள் மகளை விட்டு ஓடிப்போயின. அவள் விடுதலை பெற்றாள். இந்த அற்புதத்தைக் கண்ட அவர் குடும்பமாக தங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்கள். இதைக் கண்ட அவர்களது உறவினர்கள், ஆஸ்திகளையும் வீட்டையும் விட்டு அவர்களை துரத்திவிட்டனர். சகோதரர் ராமசாமி, மனைவியுடனும் மகளுடனும், அவரது மனைவியின் பெற்றோருடன் வாழ வேண்டியதாயிற்று. ஆனாலும், இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம், தொடர்ந்து அவருக்கு ஆறுதலாக விளங்கி வந்தது.
அவர் தன் நிலத்தை பயன்படுத்த அற்புதவிதமாக தேவன் உதவி செய்தார். அவர் பயிரிடவும், கரும்பு விளைவிக்கவும் தொடங்கினார். அதே சமயத்தில், மற்றவர்களுக்கு நாங்கள் ஜெபிக்க உதவும்படி அவர் இயேசு அழைக்கிறார் வணிக ஆசீர்வாத திட்டத்திலும் இணைந்தார். அவர் செய்த விவசாயத்தில் தேவ ஆசீர்வாதம் பொழிந்தது. கரும்பு, மஞ்சள், நாட்டுச் சர்க்கரை என்று அவர் கொண்டு சென்ற பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தேவன் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்தார்; அவரை துரத்திவிட்ட உறவினர்களைக் காட்டிலும் அவருக்கு அதிக வருமானம் கிடைத்தது. ஆம், அன்பானவர்களே, அவர் இயேசுவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக, அவரை ஒடுக்கியவர்களைக் காட்டிலும் தேவன் அவரை பெலப்படப் பண்ணினார். ஆண்டவர் உங்களுக்கும் அப்படியே செய்வார். அவரை விசுவாசியுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எனக்கு நேரிடும் இக்கட்டுகளுக்கும் மேலாக என்னை பெலப்படுத்துவதாக வாக்குத்தத்தம் அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சந்தேகம், பயம், ஒடுக்குதல் போன்ற இராட்சதர்களை நான் எதிர்கொள்ளும்போது, உம்முடைய வல்லமை என்னை விடுவிக்கும் என்று நான் நம்புவதற்கு உதவி செய்யும். நான் முறுமுறுத்ததை, உம்முடைய வாக்குத்தத்தங்களின்மேல் விசுவாசமில்லாதிருந்ததை மன்னித்தருளும். எனக்கு முன் வரும் எந்தத் தடையைக் காட்டிலும் நீர் பெரியவர் என்பதை அறிந்து உம்முடைய வசனத்தின்மேல் உறுதியாயிருக்க எனக்குப் போதித்தருளும். என்னை விரோதிக்கிறவர்கள் மத்தியிலும் நீர் என்னை உயர்த்துவீர் என்று விசுவாசிக்கத்தக்கதாக என் இருதயத்தை பெலப்படுத்தும். எல்லா சவால்களையும் நீர் வெற்றியாய் மாற்றி, என் வாழ்க்கை உம்முடைய மகத்துவத்திற்கு சாட்சியாக விளங்கும்படி செய்யும். எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்மை கனம்பண்ணும்படி திடவிசுவாசத்தினால் என்னை நிறைத்தருளும். என்னுடைய சுயபெலத்தின்மேல் சாயாமல், உம்மையே சார்ந்திருக்க தீர்மானித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.