அன்பானவர்களே, தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார்; உங்களைக் கைவிடமாட்டார். யார் உங்களை கைவிட்டாலும், தேவன் மாறாதவராய் உங்களுடன் இருந்து, நீங்கள் முன்னேறுவதற்கு செம்மையான பாதையை தந்தருளுவார். ஆகவே, கவலைப்படாதிருங்கள். இன்றைக்கு, "அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 97:10) என்ற வசனத்தின் மூலம் தேவன் உங்களோடு பேசுகிறார். ஆம், இது உண்மையாயிருக்கிறது. தம் ஜனங்களின் ஜீவனை காக்கும்படி தேவன் அவர்களோடிருக்கிறார்.
உங்களுக்குத் தீங்கு செய்ய முயற்சிக்கிறவர்களால் நிந்தனையை, திகிலை, தாக்குதலை நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒருவேளை தேவ ஊழியராகிய உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திகில் சூழ்ந்திருக்கலாம். நீங்கள் இயேசுவை நேசிக்கிறதினால் உங்கள் உறவினர்களே உங்களுக்கு எதிராய் பில்லிசூனியம் செய்திருக்கலாம். அன்பானவர்களே, தேவன் உங்கள் சூழ்நிலையை காண்கிறார்; உங்களை பாதுகாப்பதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவரே, பரிசுத்தவான்களாகிய தம்முடைய ஜனங்களின் உயிரை காக்கிறார். பயப்படாதிருங்கள். எந்தத் திகிலாலும் அவரது பாதுகாப்பை மேற்கொள்ள முடியாது. அவர் பொல்லாதவர்களின் கைக்கு உங்களை தப்புவிப்பார்.
தாவீது பெற்ற வெற்றியையும் புகழையும் பார்த்த சவுல் ராஜா, ஒருநாள் அவன் ராஜாவாகிவிடுவான் என்று எண்ணி அவன்மேல் விரோதத்தை வளர்த்தான். பொறாமையின் காரணமாக தாவீதை அழித்துப்போட வகை தேடினான். இப்படியே நீங்கள் வேலை செய்யும் இடத்தில், சபையில், வேறு இடங்களில் மக்கள் உங்களை தங்களுக்கு போட்டியாக எண்ணி, உங்களை கீழே தள்ள முயற்சிக்கலாம். ஆனால், தாவீது தேவனை நம்பி, பாதுகாப்புக்கு அவரையே பற்றிக்கொண்டான். சவுல், தாவீதை பின்தொடர்ந்து, அவனைக் கொல்லும்படி, தன் வீட்டுக்குள்ளே நுழைந்தாலும், தாவீதின் மனைவியின் மூலமாக தப்பிக்கும் வழியை தேவன் உண்டாக்கினார். பட்டணங்கள்தோறும் சவுல், தாவீதை பின்தொடர்ந்தான். தாவீதுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களே அவனுக்கு துரோகம் செய்தார்கள். ஆனாலும், சவுல், ஒரு குகையினுள் தாவீதை கண்டுபிடித்தான். தேவன் தாவீதை விடுவித்ததுடன், சவுல் தூங்கும்போது அவனது உயிரை தாவீதின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
தாவீதை அழிக்க நினைத்தவர்களால் அவனை மேற்கொள்ள முடியாமற்போனபோது, தேவ பாதுகாப்பு தாவீதோடிருப்பது விளங்கியது. அவ்வாறே தேவன் உங்கள் உயிரை காப்பாற்றி, உங்களை பாதுகாத்து, உங்கள் வாழ்வில் தெய்வீக பிரசன்னம் இருப்பதை உங்கள் விரோதிகளும் அறிந்துகொள்ளும்படி செய்வார். "உன்னை விழத்தள்ள எவ்வளவோ முயற்சித்தோம்; ஆனால், முடியவில்லை," என்று அவர்களே கூறும்படி செய்வார். தேவனாகிய கர்த்தரின் வல்லமையான பாதுகாப்பு அப்படிச் செய்யும். ஆகவே, அன்பானவர்களே, ஆண்டவருக்குள் அடைக்கலம் தேடுங்கள். அவருக்குள் மறைந்துகொள்ளுங்கள்; அவர் பொல்லாதவர்களின் கைகளுக்கு உங்களை நீங்கலாக்கி தப்புவிப்பார்.
ஜெபம்:
ஆண்டவராகிய இயேசுவே, உம்முடைய வல்லமை என்னை பாதுகாத்து உயிர்ப்பிக்கும் என்று நம்பி இன்று உம்மண்டை வருகிறேன். எல்லா திகிலிலிருந்தும் தீங்கிலிருந்தும் என்னை பாதுகாக்கும் அடைக்கலமாகவும் கேடகமாகவும் நீர் விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பெலத்த கையை மீறி எந்த வல்லமையும் பொல்லாங்கும் என்னை மேற்கொள்ள முடியாது என்று நம்பும்படி என் இருதயத்தை திடப்படுத்தும். உம்முடைய பிரசன்னம் என்னை சூழ்ந்துகொள்ளும்படி செய்து, என்னை எதிர்க்கிறவர்களை சந்திப்பதற்கான தைரியத்தை தந்தருளும். உம்முடைய பாதுகாப்பு என்னையும் எனக்கு அன்பானோரையும் கேடகமாய் சூழ்ந்து கொள்வதாக. என் ஆவியில் சமாதானத்தை தந்து, தாவீதை நீர் விடுவித்ததுபோல எல்லா பொல்லாங்கிலிருந்தும் என்னை விடுவிக்கும்படி என்னோடிருக்கிறீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். என் ஜீவனை பாதுகாப்பதாக நீர் அளித்திருக்கும் மாறாத வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.