அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,...என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:3) என்ற வசனத்தை நாம் தியானிப்போம்.

நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், விருப்பங்கள், தேவைகள் அனைத்தும் நம் ஆத்துமாவிலிருந்தே எழுகின்றன. நம் நோக்கம், நம் விருப்பம், எதிர்காலத்தைக் குறித்த நம் கற்பனை அனைத்தும் நம் ஆத்துமாவினுள்ளே இருக்கின்றன. ஒருநாளைக்கு நம் மனதில் 60,000 சிந்தனைகள் உதிக்கின்றன என்றும், அவற்றுள் 75% சிந்தனைகள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன என்றும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. "என் மனதில் என்ன இருக்கிறது? நான் எப்படி வாழ்வில் வெற்றியடைவது? என் குடும்பத்திற்கு வேண்டியவற்றை எப்படி கொடுப்பது? வியாபாரத்தை எப்படி நடத்துவது? என் நற்பெயரை எப்படிக் காத்துக்கொள்வது? யாரை திருமணம் செய்துகொள்வது? என்னுடைய, என் குடும்பத்தினரின், வேலை, தொழிலின், வாழ்க்கையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நான் என்ன செய்யவேண்டும்?" இதுபோன்ற கேள்விகளை நாம் நமக்குள் கேட்டுக்கொள்வதுடன், "திட்டமிட்டபடி காரியங்கள் நடக்காவிட்டால் என்ன ஆகும்? நான் தோற்றுப்போனால் என்ன ஆகும்? செலுத்தவேண்டிய பணத்தை குறித்த நேரத்தில் செலுத்த இயலாமல் போனால் என்ன ஆகும்?" போன்ற உணர்வுகளும், முடிவற்ற சிந்தனைகளும் நம் ஆத்துமாவுக்குள் இருக்கின்றன.  

பலவேளைகளில், இப்படிப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும்போது, மன அழுத்தம் உண்டாகி, பயம் நம்மைப் பிடிக்கிறது;வாழ்வில் முன்னேறுவது சிரமமாகிவிடுகிறது. தோல்வியடைந்துவிடுவோமா என்ற பயம், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயம், வெட்கப்பட்டுப்போவோமோ என்ற பயம், நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது. மன அழுத்தமும், நேரிடும் தடைகளும், பொறுப்புகளின் பாரங்களும், சத்துருவின் தாக்குதல்களும் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கின்றன. ஆனால் எல்லா சூழ்நிலையிலும், நாம் சந்தோஷமாக இருந்தாலும், பாரமாக உணர்ந்தாலும், தேவன் நம் ஆத்துமாவை தேற்றி, தம்முடைய சமாதானத்தினால் நம்மை நிரப்புகிறார். புத்துணர்ச்சி வேண்டும் என்று மக்கள் உலக வழிகளை நாடுகிறார்கள். சிலர் ஸ்பா போன்ற புத்துணர்வு மையங்களுக்குச் செல்கிறார்கள்; சிலர் மசாஜ் மையங்களுக்குச் சென்று தற்காலிகமாக இளைப்பாறுகிறார்கள். சிலர் சினிமா தியேட்டர்களுக்குச் சென்று கொஞ்ச நேரம் யதார்த்த நிலையிலிருந்து தப்பிக்கின்றனர். இன்னும் சிலர் நண்பர்களுடன் வெளியே சென்று சந்தோஷத்தை தேடுகின்றனர். ஆனாலும் அவர்கள் வீடு திரும்பும்போது, பிரச்னைகள், கவலைகள், கலக்கங்கள் காத்திருக்கின்றன. அந்தப் பயங்கள், சந்தேகங்கள், எதிர்மறை எண்ணங்கள் தொடர்ந்து மனதுக்குள் எழுந்து, அவர்கள் தூக்கத்தையும் சமாதானத்தையும் பறித்துக்கொள்கின்றன. ஆனால், இதற்கும் தேவனிடம் பதில் இருக்கிறது. தாவீது சொன்னவண்ணமாக, "தேவன் நம் ஆத்துமாவை தேற்றுகிறார்".  

அவர் எவ்வாறு நம்மை தேற்றுகிறார்? அவருடைய வார்த்தையின் மூலம் தேற்றுகிறார். தினமும் நாம் வேத வசனங்களை தியானிக்கும்போது, அவர் வாழ்க்கையைக் குறித்த புதிய பார்வையை அளிக்கிறார்; அவரது வழிகளில் எப்படி நடப்பது என்ற புதிய வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். வேதாகமத்தில் காணப்படும் உதாரணங்கள், அவருடைய வார்த்தைகளில் காணப்படும் சத்தியங்கள் இவற்றைக் கொண்டு அவர் எப்படி வாழவேண்டும் என்று நமக்குப் போதிப்பார். "நான் உன்னுடனே இருப்பேன்," என்று வாக்குத்தத்தத்தை தருகிறார்; "உன் குடும்பத்தை இப்படி நடத்து," "உன் வியாபாரத்தை இப்படி நடத்து," "படிப்பில் இந்தப் பாதையில் முன்னேறு," "வாழ்க்கையை இப்படி நடத்து," என்று வழிகாட்டுகிறார். தினமும் காலையில் அவர் நம் ஆத்துமாவை தம் வார்த்தையைக் கொண்டு தேற்றுகிறார்.

ஆகவே, அன்பானவர்களே, "அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்," என்று இயேசு கூறியதுபோல, இன்றைக்கு அவருடைய வார்த்தையால் தேறுதலடைவோம். அவரது வார்த்தை உங்கள் ஆத்துமாவை போஷிக்கும்; உங்கள் மனதை புதுப்பிக்கும்; உங்களுக்கு வழியைப் போதிக்கும். நம்மை தேற்றக்கூடிய அவரது பிரசன்னம் நம் வாழ்வில் விளங்குவதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். ஆண்டவர் தினமும் நம்மை தமது ஆவியினால் நிரப்புவார்; அவர் தம்முடைய பூரண சமாதானத்தை நமக்கு தருவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நீர் என் ஆத்துமாவை தேற்றுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். கணக்கற்ற எண்ணங்கள், கவலைகள் இவற்றின் மத்தியில் உம்முடைய பூரண சமாதானத்தினால் என்னை நிரப்புகிறீர். பயமும், எதிர்காலத்தை பற்றிய அவநம்பிக்கையும் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும்போது, நீரே எனக்கு அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறீர். தினமும் எனக்கு ஞானத்தையும் வழிகாட்டுதலையும் ரும் உம்முடைய வார்த்தையை நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். என்னோடு இருப்பதாக வாக்குக்கொடுத்தபடி, குடும்பத்தில், தொழிலில், வாழ்க்கையில் நான் செய்யவேண்டுகிறவற்றை போதித்தருளும். உம்முடைய ஆவியானவர் என் மனதை புதுப்பித்து, நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அருளுவாராக. நீர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வீர் என்று விசுவாசித்து என்னுடைய கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்முடைய நித்திய அன்புக்காகவும், கிருபைக்காகவும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.