எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6)என்ற வசனத்தை நாம் தியானிப்போம்.  அன்பானவர்களே, நீதியான வாழ்க்கையின் அழகை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. நீங்கள் நீதியின்மேல் பசிதாகமாயிருந்தால், ஆவிக்குரிய வாழ்க்கையில் உண்மையான திருப்தியை காண்பீர்கள். என்னை நேரடியாக சந்தித்து தனியாக ஜெபிக்கின்றவேளையில் சிலர், "என்னைக் குறித்து கர்த்தரின் சித்தம் என்ன? ஆண்டவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்," என்று கேட்பார்கள். அன்பானவர்களே, ஆண்டவர் இதுபோன்ற நீதியின்மேலான தாகத்தையே உங்களிடம் எதிர்பார்க்கிறார். இந்தத் தாகம் உங்களுக்கு இருந்தால், ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் திருப்தியடைவீர்கள். "ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது" என்று வேதம் இதை உறுதிப்படுத்துகிறது (ஆதியாகமம் 15:6; கலாத்தியர் 3:6; யாக்கோபு 2:23). ஆபிரகாம், கர்த்தரை உறுதியாக விசுவாசித்த தேவ மனுஷனாயிருந்தான். திடமான விசுவாசத்தினால் அவன் நீதிமானாக எண்ணப்பட்டான்.

"கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? ...உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே" (சங்கீதம் 15:1, 2) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவருடன் உத்தமமாய் நடக்கும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தாவீது, "நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்" என்று தன் வாஞ்சையை வெளிப்படுத்துகிறான் (சங்கீதம் 17:15).  தானியேல், தாவீது மற்றும் யோபு போன்ற பக்தர்கள் நீதியாக வாழ்ந்ததை வேதத்தில் பார்க்கிறோம். ஆம், அன்பானவர்களே, நாமும் நீதியின்மேல் தாகமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மதிய வேளையிலோ அல்லது நாளின் எந்த வேளையிலோ வயிற்றுப் பசி எவ்வளவு தீவிரமாக வருகிறதோ அதேபோன்று நாம் நீதியின்மேல் தீவிர பசிகொண்டவர்களாக இருக்கவேண்டும்.

"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் 37:5)என்று வேதம் நமக்கு நீதியாக வாழ்வதற்கான வழியை காண்பிக்கிறது. உங்கள் வழிகளை முற்றிலுமாய் கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள். அனுதினமும், "தகப்பனே, எனக்கு வழிகாட்டி நடத்தும்," என்று கேளுங்கள். நீங்கள் மெய்யாகவே ஆண்டவரை விசுவாசித்து, அவருக்கு சமீபமாய் இருக்கும்போது, அவர் நீதியின் வாழ்க்கையை உங்களுக்கு தந்து ஆசீர்வதிப்பார். அன்பானவர்களே, நீதியான வாழ்க்கையை உங்களுக்கு அருளும்படி இப்போதே ஆண்டவரிடம் ஜெபியுங்கள். ஆண்டவர்தாமே அவரது நீதியின்மேலான பசியானாலும் தாகத்தினாலும் உங்கள் உள்ளத்தை நிரப்புவாராக, ஆமென்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய பிரசன்னத்தையும் நீதியையும் தேடி, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த வழிகளின்மேல் எனக்கு ஆழ்ந்த பசியையும் தாகத்தையும் தந்தருளும். நீதியாக செயல்படவும், சத்தியத்தை பேசவும் எனக்கு உதவி செய்யும். ஆபிரகாம் உம்மை விசுவாசித்தது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதுபோல, உம்மேலான என் விசுவாசம் அனுதினமும் வளர்ந்து பெருகும்படி செய்யும். உம்முடைய வழிகளை நான் அப்படியே பின்பற்றும்படி, அனுதினமும் நான் நடக்கவேண்டிய வழியை எனக்குப் போதித்தருளும். தாவீது, தானியேல் போன்ற உம்முடைய ஊழியர்களின் உத்தமமும் நீதியுமான மாதிரிகளை நான் பின்பற்றும்படி என் ஆவியை பெலப்படுத்தும். உம்முடைய முகத்தை நீதியில் தரிசிக்கவும், உம்மோடு நெருங்கி உலாவவும் என் ஆத்துமா எப்போதும் வாஞ்சிக்கட்டும். நீதியின்மேல் தாகமுள்ளவர்கள் திருப்தியடைவார்கள் என்று வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.