அன்பானவர்களே, "கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்" (ஏசாயா 51:3) என்று வேதத்தில் எழுதியுள்ளபடி, ஆண்டவர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பாராக.
"இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்" (எண்ணாகமம் 24:1) என்று கூறப்பட்டுள்ளதுபோல, "வனாந்தரத்தை ஏதேனைப்போல ஆக்குவேன்," என்று ஆண்டவர் கூறுகிறார். ஏதேன், மகிமை நிறைந்த இடம்; தம்முடைய படைப்பின் நடுவே தேவன் உலவிய இடம்; ஆதாமுடனும் ஏவாளுடனும் அவர் ஐக்கியம் பாராட்டிய இடம் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். அன்பானவர்களே, இதே ஆசீர்வாதத்தை இன்று உங்களுக்குக் கொடுப்பதற்கு தேவன் விரும்புகிறார்.
ஆபிரகாமும் சாராளும் ஆசீர்வதிக்கப்பட்டவிதத்தை பார்க்கும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார் (ஏசாயா 51:1,2). தேவன் அவர்களை அதிகமாய்ப் பெருகப்பண்ணினார். அவர், ஆபிரகாமோடு உலவி, அவனை சிநேகிதன் என்று அழைத்தார். அதே தேவன், உங்களுடனும் இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய பிரசன்னம் காணப்படும் இடமாக, ஏதேன் தோட்டம்போல இருப்பீர்கள். ஆண்டவர், "அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போல ஆக்குவேன்," என்று கூறுகிறார். கர்த்தரின் தோட்டம், நான்கு ஆறுகளினால் நீர்வளம் பெற்றதாக, தேவனே சகல விருட்சங்களையும் முளைக்கப்பண்ணின இடமாக விளங்கியது (ஆதியாகமம் 13:10). அதேபோல, மற்றவர்களுக்கு நீங்கள் நீர்ப்பாய்ச்சி, இளைப்பாறுதல் அளிக்கும்படி, தேவன், உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக, அவரது பூரண ஆசீர்வாதங்களை கொண்டவர்களாக மாற்றுவார். "சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாயிருக்கும்," என்று வாக்குப்பண்ணுகிறார். உங்கள் வாழ்வை தேவன் சீர்ப்படுத்துவார் என்பதை இது குறிக்கிறது. சாராளின் வாழ்க்கையைப் பாருங்கள்; குழந்தையில்லாத நிலையில் தேவன் ஜீவனை உற்பத்தி பண்ணி, 'நகைப்பு' என்ற அர்த்தம் கொண்ட ஈசாக்கைக் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார். தேவன், சாராளின் இருதயத்தை சந்தோஷத்தினால் நிறைத்தார்; உங்களுக்கும் அப்படியே செய்வார். என் வாழ்வில் இதை நான் அனுபவித்திருக்கிறேன். என் அம்மா இறந்தபோது, நான் மிகவும் அழுதேன். ஆனால், குடும்ப ஜெபம் செய்தபோது, ஆண்டவர் என் தகப்பன் மூலமாக, "என் பிள்ளையே, அழாதே. நான் தாலந்துகள் நிறைந்த பிள்ளைகளை உனக்குத் தந்து ஆசீர்வதிப்பேன். நீ அழுத அதே வீட்டில் பிள்ளைகள் சிரிக்கும் சத்தத்தைக் கேட்பாய்," என்று கூறினார். அப்போது நான் கரித்தரித்திருக்கவில்லை. ஆகவே, அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. ஆனாலும், ஆண்டவர் வாக்குப்பண்ணியபடி, பிற்காலத்தில் நான் அதே இடத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக சிரிப்பதைக் கேட்டேன்.
"சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாயிருக்கும்". ஆண்டவர், உங்கள் வாழ்க்கையை நகைப்பினால் நிறைத்து, உங்கள் துக்கத்தை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். தேவன் செய்த நன்மைக்காக நீங்கள் அவரை ஸ்தோத்திரித்து, துதித்து பாடுவீர்கள். "துதியும் கீதசத்தமும் உண்டாயிருக்கும்," என்று கர்த்தர் சொல்லுகிறார். சொல்லிமுடியாத ஈவான இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் தேவனை துதிப்பீர்கள். உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியினால், நீங்கள் பெற்ற மெய்யான அழைப்புக்கு தேவன் உங்களை மீட்டெடுப்பார். என் துக்கத்தை அவர் சந்தோஷமாக மாற்றியதுபோல, நிச்சயமாக உங்களுக்கும் செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வாக்குத்தத்தங்களை நம்பி, விசுவாசமுள்ள இருதயத்தோடு உம் முன்னே வருகிறேன். சீர்ப்படுத்துகிற தேவனாய், அவாந்தரவெளிகளை தோட்டங்களாக மாற்றுகிறவராக நீர் விளங்குகிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் சீயோனுக்கு ஆறுதல்செய்து, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அளித்ததுபோல, என்னையும் ஆறுதல்படுத்தி, நான் இழந்தவற்றை, என் வாழ்வில் இடிந்துபோனவற்றை சீர்ப்படுத்தும். ஏதேன் தோட்டத்தில் நிறைந்திருந்ததுபோல, உம்முடைய பிரசன்னம் என்னை பூரணமாக நிரப்பட்டும். நீர் மட்டுமே அருளக்கூடிய சந்தோஷத்தினாலும் நகைப்பினாலும் என்னை நிரப்பும். என்னுடைய புலம்பலை ஆனந்தக் களிப்பாகவும், துக்கத்தை துதியின் கீதமாகவும் மாற்றும். உம்முடைய கிருபையினாலும் உண்மையினாலும் நான் களிகூரவும், என் இருதயத்திலிருந்து ஸ்தோத்திரமும் பாடலும் தொடர்ந்து எழும்பவும் செய்யும். என்னை சீர்ப்படுத்துவதாக, ஆசீர்வதிப்பதாக, எப்போதும் என்னுடன் இருப்பதாக அன்போடு நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை விசுவாசித்து இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.