அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்" (சங்கீதம் 28:7) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். அன்பானவர்களே, "இன்றைக்கு அதிக பலவீனமாக இருக்கிறேன். எனக்கு உதவி செய்ய யாருமே அருகில் இல்லை. நானே இந்த சிரமமான சூழ்நிலையை சமாளிக்கவேண்டும்," என்று அங்கலாய்க்கிறீர்களா? இன்றைக்கு ஆண்டவரே உங்களுக்கு சகாயராய் உதவி செய்வார், தைரியமாயிருங்கள். இப்போதே அவர் உங்களைப் பெலப்படுத்தி, தாம் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்துவார்; நீங்கள் முழு இருதயத்துடன் அவரை நம்பலாம் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

வேதாகமத்தில் யாக்கோபின் வாழ்க்கையில் இப்படியே நடந்தது. தன் அண்ணனை ஏமாற்றிய பிறகு யாக்கோபு வீட்டை விட்டு ஓடிப்போனதை வேதத்தில் வாசிக்கிறோம். பயத்தினாலும் வெட்கத்தினாலும் அவன், தன் அண்ணனுக்கு தூரமாக ஆண்டுக்கணக்கில் மறைந்திருந்தான். அந்தவேளையில், தேவன், தம்மை நம்புவது எப்படி? உண்மையாய் தம்மை சார்ந்திருப்பது எப்படி? என்று யாக்கோபுக்கு கற்றுக்கொடுத்தார். பின்னர் ஒருநாள், தேவன், அவனுடைய சொந்த தேசத்திற்கும், உறவினர்களிடமும் திரும்புமாறு யாக்கோபிடம் கூறினார் (ஆதியாகமம் 31ம் அதிகாரம்). ஆனால், யாக்கோபு, "மீண்டும் என் அண்ணனை சந்திக்க வேண்டியதிருக்குமே," என்று பயந்தான். "நான் அவனுக்கு விரோதமாக தவறு செய்தேன். என்னை கொல்வதற்காக அவன் காத்திருக்கிறான். நான் எப்படி திரும்ப செல்லமுடியும்?" என்று எண்ணினான்.

அன்பானவர்களே, நீங்களும் உங்கள் கடந்த காலத்தை, உறவினரை, குடும்பத்தினரை அல்லது பழைய வியாதியை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம். நீங்கள், "நான் தனியே இருக்கிறேன். எப்படி என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும்? அவர்கள் என்னை அழிப்பதற்கு காத்திருக்கிறார்கள்," என்று கூறலாம். யாக்கோபும் அப்படியே நினைத்தான். பிறகு யாக்கோபு, "கர்த்தாவே, என்னை காப்பாற்றும். என் அண்ணன் என்னை தாக்குவதற்கு வருவான் என்று அஞ்சுகிறேன்," என்று ஜெபித்தான். ஆனாலும், தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தன் தேசத்திற்கு திரும்ப ஏற்பாடுகளை செய்தான். அடுத்து, ஆச்சரியமான காரியம் நடந்தது (ஆதியாகமம் 32ம் அதிகாரம்). யாக்கோபை வழியில் சந்திக்கும்படி தேவன் தம் தூதனை அனுப்பினார். ஆம், தேவன் யாக்கோபை பெலப்படுத்தினார். அவர் அவனுக்கு கேடயமானார். யாக்கோபு, தன் அண்ணனை தூரத்தில் கண்டு, தனக்கு ஆபத்து நேரும் என்று எதிர்பார்த்தபோது,நடந்தது என்ன?

ஏசா, ஓடி வந்து யாக்கோபை தழுவிக்கொண்டான். தம்பியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, முத்தமிட்டான். இருவரும் அழுதார்கள். ஆம், அன்பானவர்களே, யாக்கோபு பயணித்தபோது தேவன் அவனை பெலப்படுத்தினார்; அவனை பாதுகாத்தார்; அவன் இருந்த சூழ்நிலையில் அவனுக்கு சகாயம் பண்ணினார். இன்றைக்கு, கடந்த காலத்தை எதிர்கொள்ள நேரிடுவது குறித்து நீங்கள் கவலையாயிருந்தால், இப்போதே தேவன் உங்களைப் பெலப்படுத்துகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவர் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துகிறார்; தமது சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்கிறார்; உங்களைப் பாதுகாக்கும் கேடயமாக இருந்து, யாக்கோபுக்கு உதவியதுபோல உங்களுக்கும் உதவுவார். எந்தத் தீங்கும் உங்களை அணுகாது. கொடுமை உங்களுக்கு நேராதவண்ணம் தேவன் பாதுகாப்பார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள். எதைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள். நமக்குப் பெலனாகவும் கேடயமாகவும் சகாயராகவும் இருப்பதற்காக இன்றைக்கு தேவனை ஸ்தோத்திரிப்போமா?

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, நான் பலவீனமாக இருக்கும் தருணங்களில் எனக்கு நீர் பெலனாயிருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பயப்படும் நாளில் எனக்கு கேடயமாக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்றைக்கு முழு இருதயத்தோடும் உம்மை நம்புகிறேன். நான் ஏற்கனவே கடந்தவற்றை திரும்ப எதிர்கொள்ள நேரிடும்போது, நீர் எனக்கு முன்னே செல்கிறீர் என்பதை நான் மறந்துபோகாமலிருக்க உதவி செய்யும். யாக்கோபுக்கு உதவியதுபோல, நீர் எனக்கு உதவி செய்வீர் என்று அறிந்திருக்கிறேன். என் இருதயத்தை உம்முடைய சமாதானத்தினால் நிறைத்திடும்; எல்லா பயத்தையும் அகற்றிடும். உம்முடைய பிரசன்னம் உறுதியான கேடயம்போல என்னை சூழ்ந்துகொள்ளட்டும். இமைப்பொழுது கூட என்னை தனியே விட்டுவிடாமல் என்னோடிருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உமக்குள் இளைப்பாறுதலை கண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.