அன்பானவர்களே, "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (ஏசாயா 66:13) என்று கர்த்தர் சொல்லுகிறார். பொதுவாக, குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் அன்பான தலைவராக தகப்பன் பார்க்கப்படுகிறார்; தாய், குடும்பத்திலுள்ளவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து போஷிக்கிறவராக இருக்கிறார்கள். இதனால், பிள்ளைகள், உறுதியாய் பெலத்துடன் இருப்பதற்கு தந்தையிடமிருந்தும், உருக்கமான அன்பை தாயிடமிருந்தும் கற்றுக்கொள்கின்றனர். ஆகவேதான் தேவன் தம்மை தாயுடன் ஒப்பிடுகிறார்.

ஒரு விமானம், தரையிலிருந்து மேலெழுந்ததும் விழுந்து நொறுங்கியதாக செய்தி வந்தது. அந்த விமான விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. அந்தப் பிள்ளைக்கு நான்கு வயது. எல்லோரும் உயிரிழந்த பிறகும் அந்த சின்னக் குழந்தை எப்படி பிழைத்தது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். விமானம் விழுந்தபோது, அந்தக் குழந்தையின் தாய், தன்னுடைய சீட் பெல்ட்டை தளர்த்திவிட்டு, குழந்தையின் முன்பு முழங்காலிட்டு குழந்தையை அப்படியே அணைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்த சரீரத்தைக் கொண்டு குழந்தைக்கு ஆபத்து நேர்ந்துவிடாமல்  காத்திருக்கிறார்கள்.

அவ்வண்ணமே, இயேசு, தன்னுடைய சீட் பெல்ட்டை தளர்த்தி, மனுவுருவம் எடுத்து தன்னையே தாழ்த்தினார் என்பதை அறிவீர்களா? சிலுவையில் பாடுபட்டு, தம்முடைய சரீரத்தையே பலியாக்கி, நித்திய மரணத்திலிருந்து நம்மை பாதுகாத்தார். தாயைக் காட்டிலும் அதிக உருக்கமான அன்புடன் இயேசு நம்மை தேற்றுகிறார். கிறிஸ்துவுக்குள் நாம் ஆறுதலும், அன்பினாலே தேறுதலும், உருக்கமான பட்சமும் இரக்கங்களும் அடைகிறோம் என்று வேதம் கூறுகிறது (பிலிப்பியர் 2ம் அதிகாரம்). இந்த தெய்வீக ஆறுதல் நம் உள்ளான மனுஷனை ஊடுருவி, யாராலும் தர இயலாத தேறுதலை அளிக்கிறது. நம்மோடு இருப்பவர்கள், நம்பேரில் எவ்வளவு அக்கறை காட்டினாலும், இயேசு அளிக்கும் ஆறுதலுக்கு அது ஈடாகாது. மனிதர்களின் அன்பு அருமையானதாயினும் அது தெய்வீக ஆறுதலின் ஆழத்துக்கு இணையாகாது. துக்கத்தின் நேரங்களில், இக்கட்டின் நேரங்களில், நாம் இயேசுவிடம் ஓடலாம்; தாய் அணைக்கும்போது கிடைப்பதுபோன்ற கனிந்த ஆறுதலை பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய உபத்திரவ காலங்களில் விசேஷித்தவண்ணம் வல்லமையானவிதத்தில் நம்மை ஆறுதல்படுத்துவதாக கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றுகிறார். சிலவேளைகளில் அவர் தமது ஆவியினால் நம்மை நிரப்புகிறார்; மற்ற நேரங்களில் தம்முடைய வல்லமையினால் நம்மை பாதுகாக்கிறார். தம்முடைய தெய்வீக ஆறுதலின் மூலம் அவர் துக்கத்திலிருந்து நம்மை உயர்த்தி, நமக்கு ஆதரவாக அவர் இருக்கிறார் என்று அறிந்துகொள்வதின் வழியாக நம் உள்ளங்களை சந்தோஷத்தினால் நிரப்புகிறார். இந்த தெய்வீக கனிவின் மூலம் நாம் உண்மையாகவே இயேசுவின் உள்ளத்தைக் குறித்து அறிந்துகொள்ளமுடியும். ஆகவேதான் கர்த்தர், "தாய் தேற்றுவதுபோல் நான் உன்னைத் தேற்றுவேன்," என்று அன்புடன் கூறுகிறார். ஒரு தாய் கூட தன் பிள்ளையை சிலவேளைகளில் மறந்துபோகலாம். ஆனால், இயேசு ஒருபோதும் நம்மைவிட்டு விலகவோ, நம்மை கைவிடவோமாட்டார். உலகபிரகாரமான நம் தாய்மார்களால் எப்போதும் நம்முடன் இருக்கக்கூடாமல் போகலாம். ஆனால், நம் பரம தேற்றரவாளனான இயேசு வாழ்வில் எல்லா காலமும் நம்முடனே இருக்கிறார். சகல ஆறுதல்களின் தேவன்தாமே, ஒரு தாயைப்போல தம் உருக்கான அன்பினாலும் தேறுதலினாலும் அணைத்துக்கொள்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உருக்கமான உம்முடைய அன்புக்காகவும் மாறாத பிரசன்னத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தாய் தன் பிள்ளையை தேற்றுகிறதுபோல, உம்முடைய உருக்கமான கரிசனையினால் நீர் என்னை அணைத்துக்கொள்கிறீர். இயேசு சிலுவையின் பலியானதின் மூலம் நித்திய மரணத்திலிருந்து என்னை காத்துக்கொண்டீர். நீரே என்னை  ஆறுதல்படுத்தக்கூடியவர் என்பதை அறிந்து துக்கத்தின் காலத்தில், உபத்திரவத்தின் காலத்தில் உம்மிடம் ஓடிவருகிறேன். என் இருதயத்தை உம்முடைய ஆவியினால் நிரப்பும்; உம்முடைய சமாதானம் என்னை சூழ்ந்துகொள்ளட்டும்; என் ஆத்துமாவிலிருந்து எல்லா பாரங்களையும் எடுத்துப்போடும். மற்றவர்கள் விழுந்துபோனாலும் நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கை வைப்பதற்கு எனக்கு போதித்தருளும். உம்முடைய உருக்கம் என் உள்ளத்தில் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். வாழ்வு முழுவதும் நீர் என் அருகிலேயே நடந்து வருகிறீர் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்க உதவும். ஒருபோதும் என்னைவிட்டு விலகாதிருப்பதற்காகவும் என்னை கைவிடாதிருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம் அன்பு எப்போதும் என்னை தாங்கிக்கொள்ளும் என்பதை அறிந்து உம்முடைய கரங்களில் இளைப்பாறி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.