"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது" (எபேசியர் 3:12) இதுவே தேவன் இன்றைக்கு உங்களுக்கு தரும் வாக்குத்தத்தம். இயேசுவின் மூலமும் அவர்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலமும் நீங்கள் தேவனை அணுகி, உண்மையான விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அநேகவேளைகளில் யாரிடம் உதவி கேட்கலாம் என்று நீங்கள் திகைத்து நின்றிருக்கலாம். உதவ யாருமில்லை என்று தோன்றுகின்றவேளையில், அதைரியம் ஏற்படும். கைவிடப்பட்டதுபோல் தோன்றும்போது, நம்பிக்கை இழந்து, "எனக்கு உதவுகிறதற்கு யாருமில்லை. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. எனக்கு எதிர்காலமே இல்லை," என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, அன்பானவர்களே, உங்களுக்கு விடுதலை தரக்கூடியவர் ஒருவர் உண்டு. அவர் இயேசு கிறிஸ்து. இன்றைக்கு அவர் உங்களை அழைத்து, "என் பிள்ளையே, என்னிடம் வா. இயேசுவாகிய நான் உன் பாரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு உனக்கு இளைப்பாறுதல் தருவேன். நானே வழி. உனக்கென்று நான் திட்டம்பண்ணியுள்ள பாதையில் உன்னை நடத்துவேன்," என்று கூறுகிறார். இன்றையிலிருந்து, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக திட்டங்கள் நடைபெற ஆரம்பிக்கும். நீங்கள் இளைப்பாறுதலையும் விடுதலையையும் திடநம்பிக்கையையும் அடைவீர்கள். முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவீர்கள். இதுவே தேவன் உங்களுக்கு அளிக்கும் வாக்குத்தத்தமாகும். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்திருக்கிறீர்களா? சந்தோஷமாயிருங்கள். அவர் தெய்வீக ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தருவார்.
தங்கராஜ் என்ற வாலிபனின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர் 12ம் வகுப்புப் படித்தபோது, பெற்றோர் இருவரையும் இழந்தார். அவருடைய உறவினர்கள் அவரை அழைத்துக்கொண்டனர். அவரை ஆதரிப்பதற்குப் பதிலாக, அவருடைய வீட்டையும் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு, திக்கற்றநிலையில் விட்டுவிட்டனர். தனக்கு உரிமையான சொத்துக்களை மீட்டுத்தருமாறு அவர் 2013ம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நடந்தது. அந்த நேரத்தில் அவருடைய உறவினர்கள், மற்றவர்களையும் தூண்டிவிட்டு, அவரை மிரட்டினர். அவருக்கு எங்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. சட்டைப் பையில் 350 ரூபாயுடன் அவர், அவர்களிடமிருந்து தப்பினார். அது கோவிட் தொற்றின் காலமாதலால், மடம் ஒன்றில் அடைக்கலம் கேட்டார். ஆனால், அந்த மடம் செயல்படவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தார். ஆனால், அவருடைய இருதயத்தை துக்கம் அழுத்தியதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். அப்போது, காருண்யா நகரை நோக்கி செல்லும் பேருந்தை கண்டார். காருண்யா நகரில்தான் பெதஸ்தா ஜெப மையம் அமைந்துள்ளது. அந்தப் பேருந்தில் ஏறுமாறு அவருக்குள் ஏவுதல் உண்டானது. அவர் பெதஸ்தாவை அடைந்தபோது, அங்கு நற்செய்தியாளர் ஒருவர், "நீங்கள் கையில் ஒன்றுமில்லாமல் வந்திருக்கலாம். ஆனால், ஆண்டவர் உங்களுக்கு 100% ஆசீர்வாதத்தை தருவார்," என்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார். தங்கராஜ், காருண்யா நகரிலுள்ள பொது தங்குமிடத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அங்கு சந்தித்த ஒருவர் அவர் நோக்கம் மாறுவதற்கு உதவினார். அவர் வீடு திரும்பியபோது, வழக்கு முடிவு நிலையை எட்டியது. தேவ கிருபையினால் நீதிபதி இவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். அவரது வீடும் சொத்துக்களும் திரும்ப கிடைத்தன. தேவ கிருபைக்கு சாட்சியாக அவர் வாழ்ந்து வருகிறார். அவர் தாம் இழந்தவற்றை பெற்றுக்கொண்டதுடன், இயேசுவை நேசிக்கும் ஒரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவர் வாழ்க்கை அற்புதமாய் மாறியது.
இயேசு உங்களுக்கும் இப்படியே செய்வார். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். அவரை முழுவதுமாய் நம்புங்கள். அவர் சீர்ப்படுத்துகிற, மீட்டுக்கொள்கிற, அளவில்லாமல் ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார். இன்றைக்கு நீங்கள் விடுதலையாவீர்கள். நம்பிக்கையுடன் நடப்பீர்கள். கர்த்தர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் என்று நம்புங்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய சமுகத்தின்மேல் வாஞ்சையுள்ள இருதயத்துடன் உம்மண்டை வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம் விடுதலையையும் திடநம்பிக்கையையும் அளிப்பதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். கைவிடப்பட்டவனா(ளா)ய், நம்பிக்கையற்றவனா(ளா)ய் நான் உணரும்போது, நீர் எப்போதும் எனக்குச் சமீபமாயிருக்கிறீர் என்பதை நான் மறந்துபோகாதிருக்க உதவும். ஆண்டவரே, என் பாரங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை எடுத்துக்கொண்டு, உம்முடைய இளைப்பாறுதலை தந்தருளும். நீர் என் வாழ்க்கைக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற தெய்வீக திட்டங்களுக்குள் என்னை நடத்தும். உம்முடைய நாமத்தினாலே என்னை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவனா(ளாக) மாற்றும். நீர் எனக்காக யாவற்றையும் செய்துமுடிப்பீர் என்று அறிந்து, உம்மை முற்றிலும் நம்புவதற்கு உதவும். என் அருமை இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் விடுதலையையும், திடநம்பிக்கையையும் சந்தோஷத்தையும் சுதந்தரித்துக்கொண்டு ஜெபிக்கிறேன், ஆமென்.