இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இயேசுவுக்குள் நமக்கு நம்பிக்கை உண்டு. நம் வாழ்க்கையில் தொடங்கியிருக்கும் நற்கிரியைகளை அவர் நிறைவேற்றுவார். இன்றைக்கு அவர், "அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்" (எபேசியர் 2:20). குறிப்பாக, நம்முடைய வீடு, நேர்த்தியான மூலைக்கல்லின்மேல் கட்டப்பட்டு வருகிறது.
அந்தக் காலத்தில், முழு வீடும் நிற்பதற்கான வலிமையையும் உறுதியையும் கொடுக்கக்கூடிய முக்கியமான கல்லாக மூலைக்கல் விளங்கியது. இயேசு, "உன் வீடு கட்டப்படும் மூலைக்கல்லாக நானிருப்பேன்," என்று கூறுகிறார். தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் விதைத்த ஆவிக்குரிய விதைகளின் மூலம் நம் வாழ்க்கையின் அஸ்திபாரம்போடப்படுகிறது என்பதையும் இந்த வாக்குத்தத்தம் நினைவுப்படுத்துகிறது. அவர்களுடைய உண்மையும் போதனைகளும் ஆரம்ப வேலைகளை செய்துள்ளது; அவர்கள் விதைத்தவை நம் வாழ்வில் பெரும் விளைச்சலை தரும்.
கிறிஸ்து இயேசுவுக்குள் காணப்படும் எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் பெறுகிறோம். அவரை நம்முடைய வீட்டின் மூலைக்கல்லாக வைத்திருக்கிறபடியினால், அவரது சமாதானமும் தயவும் அபிஷேகமும் நம் குடும்பங்களுக்குள் பாய்ந்து செல்லும். அவரது வல்லமையால் எல்லா சாபமும் முறிக்கப்படுகிறது; அவர் மூலமாக, தேவனுடைய அபிஷேகத்தின் பரிபூரணம், நம் வாழ்வினுள் ஊற்றப்படுகிறது. நம் குடும்பம் இந்த ஆசீர்வாதத்தினால் நிரப்பப்படும்; ஞானம், கிருபை, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் எல்லா ஐசுவரியங்கள் இவற்றை பெற்று அனைத்து வழிகளிலும் செழிக்கும்.
அன்பானவர்களே, இன்றைக்கு, "ஆண்டவரே, நீரே எங்கள் மூலைக்கல்லாக இருக்கிறபடியினால், உமக்குள் இருக்கிற யாவற்றையும் எங்களுக்குத் தந்தருளும்," என்று தைரியமாக கேட்போம். நித்தியரான அவர் நம்முடைய மூலைக்கல்லாக இருக்கிறபடியினால், நம்முடைய வீடும், குடும்பமும் நித்திய ஜீவனில் நிலைத்திருக்கும். நாம் விழுந்துபோகமாட்டோம்; அவரோடு நித்தியமாய் ஜீவிப்போம்.
ஆகவேதான் இயேசு, "தன் வீட்டை கற்பாறையின்மேல் கட்டுகிறவன் புத்திமான்; அந்த வீடு எப்போதும் நிலைத்திருக்கும்," என்று இயேசு கூறுகிறார். இன்றைக்கு அவர் நமக்கான கற்பாறையாக இருக்கிறார். ஆகவே, அவருக்குள் இருக்கும் எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொள்வோம். அவரது சமாதானத்தை, அவரது ஆசீர்வாதங்களை, அவரது ஞானத்தை, உங்கள் குடும்பத்துக்கான அவரது நித்திய வாக்குத்தத்தங்களை கேட்டு சுதந்தரியுங்கள். உங்கள் வாழ்வில் எல்லா பகுதியிலும் அவரது பரிபூரணம் பாய்ந்து செல்லட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குள் இருக்கும் பூரண சமாதானத்தை இன்றைக்கு நான் சுதந்தரிக்கும்படி கேட்கிறேன். ஆண்டவரே, என்னையும் என் குடும்பத்தையும் இந்த தெய்வீக சமாதானத்தினால் நிறைத்தருளும். உமக்குள் இருக்கும் எல்லையில்லாத அன்பினை நான் சுதந்தரிக்கும்படி கேட்கிறேன் - உம் அன்பு எங்கள் உள்ளங்களுக்குள் நிறைந்து, எங்களை ஒன்றாய் இணைக்கட்டும். ஆண்டவரே, உம்முடைய அபிஷேகத்தை எங்கள்மேல் ஊற்றி, உமது ஞானத்தினால் எங்களை நிரப்பும். நாங்கள் போராட்டமில்லாமல், வாழ்வில் எல்லா நிலைகளிலும் செழிக்கும்படி செய்யும். உம்முடைய குணப்படுத்தும் வல்லமை என் குடும்பத்தின் வழியாக பாய்ந்துசென்று, எங்களை பூரணமாக சீர்ப்படுத்தி, புதுப்பிக்கட்டும். உமக்குள் இருக்கும் எல்லா நன்மைகளினாலும் எங்களை நிரப்பும். எங்கள் வீடு, உம்முடைய சத்தியமாகிய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டு நித்தியமாய் உறுதியாய் இருக்கட்டும். ஆண்டவரே, என் வீட்டார் அனைவரும் உம்முடைய குடும்பத்துக்குச் சொந்தமானவர்கள். இப்போதும் எப்போதும் உமக்குள் அசைக்கமுடியாமல் பாதுகாப்பாய் இருக்கும்படி, உம்முடைய சமுகத்தில் நித்திய ஜீவனை எங்களுக்கு அளித்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.