அன்பானவர்களே, இன்றைக்கு, "சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" (சங்கீதம் 9:9)என்ற வசனத்தை தியானித்து நாம் ஆசீர்வாதம் பெறுவோம். அடுத்த வசனம், "கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்" என்று கூறுகிறது. ஆண்டவரை நம்புகிறவர்கள் அவரது ஆசீர்வாதங்களையும் அவர் அருளும் பலன்களையும் பெறுவார்கள். நாம் தேவனுடைய குணாதிசயத்தை அறியும்போது அவர் மெய்யாகவே நமக்கு அரணிப்பான கோட்டையாக விளங்குவார். அவர் யார் என்று நாம் அதிகமதிகமாய் அறிந்துகொள்ளும்போது, அவர் மேலான நம் நம்பிக்கை அதிகரிக்கும்.

உபத்திரவங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். அநேகவேளைகளில் இப்படியான உபத்திரவங்கள், நாம் தேவனை அண்டிச் சேருவதற்குக் காரணமாகும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நாம் தேவனை அதிகமாய் அறிந்துகொள்கிறோம். தாவீதை கொல்வதற்காக, சவுல் ராஜா விடாமல் பின்தொடர்ந்தபோதும், அவன் தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டான் (1 சாமுவேல் 23:14). தாவீது, வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலும் சீப் வனாந்தரத்திலுள்ள மலையிலும் தங்கியிருந்தான். சவுல், நாள்தோறும் அவனை தேடிக்கொண்டிருந்தான். ஆனால், தேவன், தாவீதை சவுலின் கைகளில் ஒப்புக்கொடுக்கவில்லை. தாவீது, தேவனை நம்பியதால், அவர் அவனுக்கு அடைக்கலமும் பாதுகாப்புமாக மாறி, தீமையிலிருந்து அவனை காத்துக்கொண்டான்.

இவ்வாறே, ஆண்டவர் உங்களுக்கு அடைக்கலமும் அரணான கோட்டையுமாய் விளங்குவாராக. தேவனுடைய குணாதிசயத்தை அறியாதவர்கள் அவரை சந்தேகப்படுவார்கள். தமக்கு அன்பாயிருந்த லாசருவை உயிர்த்தெழச் செய்யும்படி இயேசு சென்றபோது, அவருடைய சீஷர்களில் ஒருவனாகிய தோமா, அவரை சந்தேகித்தான் (யோவான் 11-ம் அதிகாரம்). "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்," என்று இயேசு கூறியபோதும், தோமா பயத்தினால் நிறைந்தவனாய், அடுத்த என்ன நடக்குமோ என்று கலங்கியவனாய், "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம்," என்று கூறினான். இயேசுவின் வல்லமையை ஏற்றவிதத்தில் புரிந்துகொள்ளாத அவன், பிரதான ஆசாரியருக்கும் மூப்பர்களுக்கும் பயந்து, சந்தேகப்பட்டான். ஆனால், இதற்கு மாறாக, மார்த்தாளும் மரியாளும் இயேசுவை முழு மனதாய் நம்பினார்கள். தங்கள் சகோதரனை இழக்கக்கொடுத்த துக்கத்தில் அவர்கள் இருந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்," என்று கூறினார்கள். "உங்கள் சகோதரன் எழுந்திருப்பான்," என்று இயேசு அவர்களிடம் மறுபடியுமாய் கூறினார். அவர் கல்லறையினிடத்திற்குச் சென்று, உரத்த சத்தத்தோடு அதிகாரமாய், "லாசருவே, வெளியே வா!" என்று கூறினார். அடுத்து ஓர் அற்புதம் நடந்தது. இறந்தவன் உயிரோடு வந்தான். மார்த்தாளும் மரியாளும் தேவையோடு இருந்தபோது, இயேசு அவர்களுக்கு மெய்யாகவே அடைக்கலமாகவும் அரணானகோட்டையாகவும் விளங்கினார்.

மனுஷர்கள் நம் வெளிப்புற தோற்றத்தை காணலாம். ஆனால், நாம் உண்மையாகவே தம்மை விசுவாசிக்கிறோமா என்பதை பார்க்க ஆண்டவர் நம் உள்ளங்களை கண்ணோக்குகிறார். இன்றைக்கு, "ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்," என்று கூறி, உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பீர்களா? ஆண்டவர்தாமே இப்போதும் எப்போதும் உங்களுக்கு அரணான கோட்டையும், அடைக்கலமுமாய் விளங்குவாராக.

ஜெபம்:
பரம தகப்பனே, ஆபத்துக்காலத்தில் எனக்கு அடைக்கலமும் அரணான கோட்டையுமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பெலனையும் பாதுகாப்பையும் தேடி இன்றைக்கு உம்மண்டை வருகிறேன். உம்மை நான் முழுமையாய் நம்பும்படி இன்னும் அதிகமாய் உம்மை அறிந்துகொள்ள உதவும். ஆண்டவரே, இருதயத்தை நோக்கிப்பார்த்து, எல்லா சந்தேகமும் பயமும் நீங்க சுத்திகரித்தருளும். தாவீதுக்கு அரணாகி, தீங்குக்கு அவனை விலக்கிக் காத்ததுபோல, நீர் என்னை தற்காக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். வாழ்வில் இக்கட்டுகள் நிறைந்திருந்தாலும் உம்மையே பற்றிக்கொள்ள எனக்கு கற்பித்தருளும். கலங்கிய என் இருதயத்துக்கு உம்முடைய பிரசன்னம் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருவதாக. நான் எப்போதும் உம்மை தேடவும், உம்முடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும் உதவும். என்னை ஒருபோதும் கைவிடாதிரும். என்னை விசுவாசத்தினால் நிரப்பும். உமக்கு மகிமையானவிதத்தில் நான் வாழும்படி வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.