அன்பானவர்களே, "இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்" (சங்கீதம் 54:4) என்று வேதம் கூறுகிறது. தேவன் நமக்கு சகாயராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு உதவி செய்கிறவர்களுடனும் இருக்கிறார். ஆம், ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார்; உங்களை ஆதரிக்கும்படியாய் உங்கள் பட்சத்தில் நிற்பவர்களுடனும் இருப்பார். உங்கள் பெற்றோரோ, பிள்ளைகளோ, கணவர், மனைவியோ, உங்களுடன் பணி புரிகிறவரோ, வேண்டிய வழியை காட்டி உதவுகிறவரோ, பொருளாதாரம் உள்ளிட்ட வேறு வழிகளில் உதவுகிறவரோ, யாராயிருந்தாலும் அவர்கள் உங்களுக்கு உதவும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவதூதர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். "இவர்கள் அன்புக்கு எப்படி பதில் செய்வேன்? எப்படி இவர்களுக்கு உதவப்போகிறேன்?" என்று நீங்கள் எண்ணலாம். தேவன் அவர்களுக்கு உதவி செய்வார் என்பதை மறந்துபோகாதிருங்கள். அவர், அவர்களுடன் இருப்பார். ஆண்டவர், அவர்கள் வாழ்க்கையை தாங்குவார்; அவர்களை பூரணமாய் ஆசீர்வதிப்பார். ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
இன்றும், இயேசு அழைக்கிறார் பங்காளராக இருந்து, ஊழியத்தை உண்மையாய் ஆதரிப்பதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தாங்குகிறீர்கள். உங்கள் காணிக்கைகளினால், தேவ அன்பு மற்றும் வல்லமையை கொண்டு கணக்கற்ற மக்களின் வாழ்க்கையை தொடுகிறீர்கள். ஆம், நீங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகிறீர்கள்; அதற்குப் பலனாக, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை தாங்குவார்; அவர் உங்களுக்கு உதவுவார்; பூரணமாக ஆசீர்வதிப்பார்.
தேவன், அற்புதவிதமாக உதவி செய்ததைக் குறித்த ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். டெய்சி ராணி என்ற அன்பு சகோதரி தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் 20 ஆண்டு காலம் இயேசு அழைக்கிறார் ஊழிய பங்காளராக இருக்கிறார்கள்; குடும்ப ஆசீர்வாத திட்டத்திலும் இணைந்துள்ளார்கள். அவர்கள் மகன் இளம் பங்காளர். அவன் தற்போது காருண்யா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறான். அவர்களுக்கு விரோதமாக யாரோ பில்லிசூனியம் செய்ததினால், திடீரென பயம், கலக்கம் அவர்களைப் பிடித்தது; உடல்நலமும் பாதிக்கப்பட்டது. தினமும், "உன்னால் ஒரு பிரயோஜனமுமில்லை. உனக்கு பெலனே கிடையாது. உனக்கு எதிலும் வெற்றி கிடைக்காது; உன் ஆரோக்கியம் கெட்டுப்போகும். உன்னால் வேலைக்குச் செல்ல முடியாது," என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த குரலால், அவர்கள் உள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள், விடுமுறை முடிந்து மகனை காருண்யா பல்கலைக்கழகத்திலே விட்டுச் செல்லும்படி அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் என் மனைவி இவாஞ்சலினும் கோயம்புத்தூரில் காருண்யா பல்கலைக்கழகத்திற்கு அடுத்து அமைந்துள்ள பெதஸ்தா ஜெப மையத்தில் அனைவருக்காகவும் ஜெபித்துக்கொண்டிருக்கிறோம் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் எங்கு வசித்தாலுமி இந்த அழகிய ஜெப கோபுரத்திற்கு வந்து, அமைதியான சூழ்நிலையில் தேவ வல்லமையை அனுபவிக்கலாம். சகோதரி டெய்சி ராணி விசுவாசத்துடன் தேவ தொடுதலை அனுபவிக்கும்படி ஜெப மையத்திற்கு ஓடி வந்தார்கள். நானும் என் மனைவி இவாஞ்சலினும் அவர்கள்மேல் எங்கள் கைகளை வைத்துள்ளோம். "பயமே, இவர்களை விட்டு வெளியே வா," என்று நான் கூறி, "ஆண்டவர் இயேசுவே, இவர்களை விடுவியும்; பூரண விடுதலையை கொடும்," என்று ஜெபித்துள்ளேன். என் மனைவி இவாஞ்சலினும், "பயத்தின் ஆவி இவர்களை விட்டுப் போகட்டும்," என்று அதிகாரத்துடன் ஜெபித்துள்ளாள். அப்போது அற்புதமான விஷயம் நடந்துள்ளது; சகோதரி டெய்சி ராணி பயத்திலிருந்து பூரணமாய் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தெய்வீக சமாதானம் அவர்கள் உள்ளத்தை நிறைத்துள்ளது; பயத்தை கொண்டு வரும் பிசாசின் ஆவி வெளியே விரட்டப்பட்டுள்ளது. அவர்கள் உடல் நடுக்கம் நின்றுள்ளது. வேலைக்கு புதிய நபராக செல்லும்படி பெலன் பெற்றுள்ளார்கள். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு வல்லமையுள்ளவர்!
அன்பானவர்களே, சகோதரி டெய்சி ராணிக்கு உதவி செய்து விடுவித்த தேவன், உங்களுக்கும் உதவி செய்வார். அவர் உங்கள் சகாயர்; உங்களை பாதுகாக்கிறவர்; உங்களை விடுவிக்கிறவர். உங்களை துன்புறுத்தும் பிசாசுகளை இயேசு துரத்தி, தமது அன்பின் கரங்களால் உங்களைப் பாதுகாப்பார். அவரை நம்புங்கள்; அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார்; உங்களை கைவிடவும் மாட்டார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எனக்கு அநுகூலமான துணையாக இருப்பதற்காக, வழிகாட்டுவதற்காக, வாழ்வின் எல்லா தருணங்களிலும் என்னை தாங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை பாதுகாக்கிறவர்; நீர் என்னோடும், என்னை ஆதரிக்கிறவர்களுடனும் இருக்கிறீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, என் குடும்பத்தை, நண்பர்களை, என்னை ஆதரிக்கிற அனைவரையும் ஆசீர்வதித்தருளும். அவர்களோடு இருந்து, உம்முடைய கிருபையாலும் பெலத்தாலும் அவர்கள் வாழ்க்கையை தாங்கியருளும். நீர் ஒருபோதும் என்னை விட்டு விலகவும், என்னை கைவிடவும் மாட்டீர் என்பதை அறிந்திருக்கிறேன்; உம்முடைய கிருபையே எனக்கு சமாதானமும் பாதுகாப்பும் தருகிறது. என் இருதயத்தை பாரப்படுத்தும் எல்லா பயத்தையும் உபத்திரவங்களையும் அகற்றிப்போடும். உம்முடைய அன்பின் புயங்களால் என்னை பாதுகாத்தருளும்; நான் எப்போதும் உம்மை சார்ந்திருப்பதற்கு உதவும். நீர் அருளும் பரிபூரண ஆசீர்வாதங்களுக்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.