அன்பானவர்களே, "நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்" (சங்கீதம் 41:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நீங்கள் உத்தமமாய் வேலை செய்யலாம்; அரசுப் பணியில், வீட்டில் அல்லது சமுதாயம் சார்ந்த விஷயங்களில் உத்தமமாய் இருக்கலாம். ஆனாலும், உங்கள் உத்தமத்தின் மத்தியிலும் உங்கள் நற்பெயரைக் கெடுப்பதற்கு பலர் முயற்சிக்கலாம். தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார். நீங்கள் உத்தமமானவர் என்று அவர் வெளிப்படுத்தி, தம்முடைய பிரசன்னத்தில் எப்போதும் உங்களைக் காத்து, தேற்றி, இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு உங்களை பெலப்படுத்தி, திடப்படுத்துவார். இறுதியில் அவர் உங்களுக்கு நியாயம் செய்வார். பள்ளியில், வேலையில், அரசாங்கத்தில், சமுதாயத்தில் எதிர்ப்பை நீங்கள் மேற்கொள்வீர்கள்; முற்றும் ஜெயங்கொள்ளுவீர்கள். உங்களுக்கு விரோதமாக செய்யப்படும் அநியாயங்கள் வெற்றி பெறாமல் போகும். உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது.


சென்னையை சேர்ந்த ஜெயவேலு என்ற சகோதரர் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். தற்போது அவருக்கு 73 வயது. அவர் 2008ம் ஆண்டில் மின்வாரியத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற சில நாள்களில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கலாகி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்திலிருந்து அறிவிக்கை வந்தது. அவர் உத்தமமானவர் என்பதால், இதைக் கண்டு உள்ளமுடைந்துபோனார். விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டார். அவரும் ஒத்துழைத்தார். இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் 2010, 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளிலும் விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. உத்தமராகிய அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் தொந்தரவுக்குமேல் தொந்தரவு கொடுத்தார்கள். இறுதியாக, வழக்கில் அவர்மேல் குற்றமில்லையென்று அதிகாரிகள் அறிவித்தனர். ஆனாலும் பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், குறிப்பிட்ட அதிகாரி வழக்கை முறைப்படி முடிக்காமல் சென்றுவிட்டதால், இன்னும் நிலுவையில் இருப்பதாக 2023ம் ஆண்டில் திரு. ஜெயவேலு அறிந்தார்.


இந்நிலையில் அவர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் ஜெப உதவி நாடினார். ஜெப வீரர்கள் அவருக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று ஜெபித்தனர். இயேசு அழைக்கிறார் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு என்னை சந்தித்தார். அந்த வழக்கு முறைப்படி முடித்துவைக்கப்படவேண்டுமென்று நானும் அவரும் இணைந்து ஆண்டவரிடம் ஜெபித்தோம். அற்புதவிதமாக அந்த வழக்கு அந்த ஆண்டே முடிக்கப்பட்டது; அவருக்கு நியாயம் செய்யப்பட்டது. அவரிடம் அவர்கள் ஒரு குற்றத்தையும் காணவில்லை. தேவன் நியாயம் செய்ததைக் குறித்து திரு. ஜெயவேலு சாட்சி கூறினார். எந்த இடத்தில் அவருக்கு அநியாயம் செய்யப்பட்டதோ, அதே இடத்தில் தேவன் அவருக்கு நியாயம் செய்தார். தேவன் அவர் பெயரை உயர்த்தினார்; தொந்தரவை சகிப்பதற்கு தமது பிரசன்னத்தின் மூலம் அவரை பெலப்படுத்தினார். தேவன் அவ்வாறே உங்களுக்கும் செய்வார்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய நித்திய அன்பையும் நியாயத்தையும் நன்றியுடன் நினைத்து உம் முன்னே வருகிறேன். என்னை தாங்குவதற்காக, உம்முடைய பிரசன்னத்தில் நிறுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, வேலையில், வீட்டில், சமுதாயத்தில் என்று எல்லா இடங்களிலும் வாழ்க்கையில் உத்தமத்தை காத்துக்கொள்ள எனக்கு பெலன் தாரும். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, பெயரை கெடுப்பதற்கான முயற்சிகள் செய்யப்படும்போது, நீர் என்னை தற்காக்கிறவராய், எனக்கு நியாயத்தை வழங்குகிறவராக இருக்கிறீர் என்பதை நான் மறவாதிருக்க உதவும். எனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது என்பதை அறிந்து உறுதியாக நிற்கும்படி என்னை பெலப்படுத்தும். உம்முடைய ஆறுதலாலும், பெலத்தாலும், சமாதானத்தாலும் என்னை நிறைத்து இந்த சவால்களை நான் கடந்து போவதற்கு உதவி செய்யும். நீர் எனக்கு நியாயம் செய்து என் உத்தமத்தை அனைவருக்கும் வெளிப்படுத்துவீர் என்ற வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். எனக்காக வழக்காடுகிறவராகவும் என்னை பாதுகாக்கிறவராகவும் நீர் இருப்பதால் உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.