அன்பானவர்களே, இன்றைக்கு, "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1 யோவான் 2:17) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, தம்முடைய சித்தத்திற்கு நம்மை அர்ப்பணிக்கும்படி ஆண்டவர் அழைக்கிறார். அது எவ்வளவு கடினமானதாக தோன்றினாலும், சிரமமாக தென்பட்டாலும், நம் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்படிக்கு நாம் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

பெரும்பாலும் நாம், சொத்து சேர்ப்பது, கருத்தாய் சேமிப்பது, ஓய்வில்லாமல் உழைத்து நமக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொள்வது, வேலையில், தொழில் முன்னேறுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். இவற்றின் மத்தியில், இந்த வாழ்வில் நாம் என்ன செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அறியும்படி  அவரது குரலை நிதானித்து கேட்க தவறிவிடுகிறோம்; அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறந்துபோகிறோம். ஆனால், இறுதியில், பரலோகத்தில் தேவன் முன்பு நிற்கும்போது, அவர், "நீ யார் என்று எனக்கு தெரியவில்லை," என்று கூறுவதை கேட்க நாம் விரும்பமாட்டோம். உலகில் நாம் எவ்வளவு புகழை சம்பாதித்தாலும், வெற்றியாக காரியங்களை செய்தாலும், உண்மையானபடி நாம் தேவனை அறியாதிருந்தாலும், அவர் நம்மை அறியாதிருந்தாலும் லாபம் என்ன? "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" (மாற்கு 8:36) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஒருவன் இயேசுவிடம் வந்து, "நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும்?" என்று கேட்டதற்கு அவர், "விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே," என்றார். அதற்கு அவன், "போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்," என்றான். இயேசு அவனிடத்தில் அன்புகூர்ந்து, "உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா," என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் என்று ஒரு சம்பவத்தை வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 10:17-22). தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுவதற்கு தன்னை அர்ப்பணிப்பதைக் காட்டிலும், தன் ஆஸ்தியை, அந்தஸ்தை, சிலாக்கியங்களை பற்றிக்கொள்ளவே அவன் விரும்பினான். நாம் மிகவும் விருப்பமாக வைத்திருக்கும் காரியங்களை விட்டுவிடும்படி சிலவேளைகளில் தேவன் கூறுவார். அது நம் ஆஸ்தியாக இருக்கலாம்; அன்புக்குரியோராக இருக்கலாம்; நம் வேலை அல்லது தொழிலாக இருக்கலாம்; நாம் கடினமாக உழைத்து சாதித்தவையாக இருக்கலாம். நம்முடைய திட்டங்களை புறம்பே வைத்துவிட்டு, சவாலானதாக, நிச்சயமற்றதாக தோன்றினாலும்கூட தம்முடைய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை பின்பற்றி வா," என்று அவர் கூறுவது நமக்கு மலைப்பை உண்டாக்கலாம். ஆனால், நாம் அவரை நம்பி, அவரது அழைப்புக்குக் கீழ்ப்படியும்போது, பரலோக பலன்களை பெறுவோம்; நித்திய ஜீவனை சுதந்தரிப்போம். இன்றைக்கு ஆண்டவர் உங்களுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில் உங்களோடு பேசலாம்; சிறிய உந்துதலை உங்கள் உள்ளத்தில் கொடுக்கலாம். அவரது சத்தத்தை உன்னிப்பாக கவனியுங்கள். அவர் என்ன செய்யும்படி கூறுகிறார் என்பதற்குச் செவிகொடுங்கள். அவரது திட்டத்தை பின்பற்றுங்கள்; அதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது, ஒருநாள் நீங்கள் அவர் முன் நிற்கும்போது, "நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே," என்று அவர் அருமையாக அழைப்பதைக் கேட்பீர்கள். அதற்காகத்தானே நாம் வாழ்கிறோம்? அந்த சந்தோஷத்தை தானே எதிர்பார்த்திருக்கிறோம்? இன்றைக்கு அவரது சித்தத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம். உங்கள் இருதயத்தின் விருப்பங்களை அவர் அறிந்திருக்கிறபடியினால், அவரை நம்புங்கள். அவர் தமது சித்தத்தின்படி யாவற்றையும் செய்து முடிப்பார்; பாதையெங்கும் உங்களை வழிநடத்துவார். தேவனுடைய சித்தத்திற்கு இன்றைக்கு உங்களை அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையை உம்முடைய சித்தத்திற்கு உகந்ததாக்கும்படி உம்முடைய வசனம் நினைவுப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை பின்பற்றும்படி என் ஆஸ்தி, இலட்சியம், அன்புக்குரியோர் என எனக்குண்டான யாவற்றையும் அர்ப்பணித்துவிட எனக்கு உதவி செய்யும்.  பாதையும் அழைப்பும் கடினமாக தோன்றினாலும், அதற்குக் கீழ்ப்படியும் தைரியத்தை எனக்கு அருளிச்செய்யும். உம்முடைய சத்தத்தை நான் தெளிவாகக் கேட்பதற்கு உதவி செய்து, எனக்கு வழிகாட்டும். உமக்குக் கீழ்ப்படிவதாகவும், உண்மையுள்ளதாகவும் என் வாழ்க்கை அமைந்து உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வர உதவும். நீர் என்னை விசாரிக்கிறவராகையால், இருதயத்தின் விருப்பங்களோடு உம்மை நம்புவதற்கு கற்றுத்தாரும்.  ஆண்டவரே, நான் உமக்கு முன்பு நிற்கும்போது, "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே," என்று நீர் கூறுவதை நான் கேட்கும்படி செய்யும். நித்திய ஜீவனை நோக்கி உம்மோடு பயணிப்பதில் நான் உறுதியாய் இருக்கும்படி காத்துக்கொள்ளும். நீர் பாராட்டும் கிருபைக்காகவும், அளிக்கும் வழிநடத்துதலுக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.