கிறிஸ்துவுக்குள் எனக்கு பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவர் இயேசு கூறியதும், தேவன் கொடுத்ததுமான, "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7)என்ற அருமையான வாக்குத்தத்தத்தை இன்றைக்கு தியானிப்போம். இந்த வசனம் என்ன போதிக்கிறது என்பதை கருத்தாய் பார்ப்போம். தேவனுடைய வார்த்தைகள் நம் இருதயங்களில் தங்கியிருக்க அனுமதிக்கவும், ஆண்டவரிலும் அவருடைய வார்த்தைகளிலும் நிலைத்திருக்கவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுதான் கிறிஸ்தவ வாழ்வின் சாராம்சமாக இருக்கிறது. கடமைக்காக தேவனுடைய வசனத்தை வாசிக்கக்கூடாது. மாறாக, நாம் வேத வசனங்களின் அர்த்தத்தை நாம் புரிந்துகொண்டு, அவற்றால் ஆசீர்வாதம் பெறுகிறவரைக்கும் அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆண்டவருடைய வார்த்தைகள் நம்மில் நிலைத்திருக்கும்படி, நாம் ஆண்டவரில் நிலைத்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே பொருளாகும். இப்படிச் செய்யும்போது, "நாம் கேட்டுக்கொள்வதெதுவோ, அது நமக்குச் செய்யப்படும்," என்று வாக்குத்தத்தம் கூறுகிறது. இது எவ்வளவு ஆசீர்வாதம்!

நமக்கு விருப்பமான உணவை நாம் ருசித்து உண்பதுபோல, தேவனுடைய வசனத்தை புசிக்கும்படி வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவ்வாறே, நாம் தேவனுடைய வார்த்தையின்மேல் பசிதாகம் கொண்டவர்களாய், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதை உட்கொள்ளவேண்டும். "அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" (யோவான் 14:23)என்றும், "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்" (லூக்கா 11:28)என்றும் வேதம் கூறுகிறது.  அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய வார்த்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள்? அதை வாசிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்? வேதத்தை வாசித்து நாளை ஆரம்பியுங்கள். அதிகாலையில் எழுந்து, தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள்; அப்போது அவரது வல்லமையான பிரசன்னத்தை உணருவீர்கள். இந்தப் பழக்கத்தின் மூலம் ஆண்டவர் உங்களை தமது பிரசன்னத்தால் வல்லமையாக நிரப்புவார்.

இதற்கு என் வாழ்க்கையே சாட்சியாக இருக்கிறது. நான் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து ஜெபத்திலும் வேதம் வாசிப்பதிலும் நேரத்தை செலவிடுவேன். இந்த நேரத்தில் ஆண்டவரின் சந்தோஷமும் பிரசன்னமும் நாள் முழுவதும் என்னை தாங்கும்படி நிரப்பும். சிலர், "உங்களுக்கு அதிகமாக வயதாகிவிட்டதே, எப்படி தனியே இருக்கிறீர்கள்?" என்று கேட்பார்கள். ஆனால், உண்மையில் நான் ஒருபோதும் தனியே இருப்பதில்லை. ஆண்டவரின் வசனம் எனக்குள் நிலைத்திருப்பதால், அவர் எப்போதும் என்னோடு கூட இருக்கிறார். தேவ பிரசன்னம் என் இருதயத்தை களிப்பினால் நிரப்புகிறது. ஆண்டவரின் பிரசன்னத்தில் வாசம்பண்ணுவது எவ்வளவு மகிமையான அனுபவம்! அன்பானவர்களே, இந்த எளிய உதாரணத்தை பின்பற்றுங்கள்; உங்கள் வாழ்க்கை அதிகமாய் ஆசீர்வதிக்கப்படும். ஆண்டவரில் நிலைத்திருங்கள்; அவருடைய வார்த்தை உங்களில் நிலைத்திருக்கட்டும்; அப்போது நீங்கள் விரும்புவது உங்களுக்கு செய்யப்படும். நீங்கள் ஜெபித்து இன்றைக்கு இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்மில் நிலைத்திருக்கவும், உம்முடைய வார்த்தைகள் என் இருதயத்தில் நிலைத்திருக்க அனுமதிக்கும்படியும் என்னை அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை அதிகமாய் சார்ந்திருக்கவும், கடமைக்காக வசனங்களை வாசிக்காமல், உம்முடைய வசனங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவும் உதவி செய்யும். ஆவிக்குரிய போஜனமாக தினமும் உம்முடைய வசனத்தை உட்கொள்ளும்படி, அதன்மேல் எனக்கு பசிதாகத்தை தந்தருளும். உம்முடைய வசனம் எனக்குள் தங்கி, என் எண்ணங்களை, விருப்பங்களை, செயல்களை வழிநடத்தட்டும். தகப்பனே, உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்போது, உம்முடைய வல்லமையான பிரசன்னத்தினாலும், தெய்வீக சமாதானத்தினாலும் என்னை நிரப்பியருளும். அதிகாலையில் எழுந்து, உம்முடைய முகத்தைத் தேடி, உம்முடைய பரிசுத்த வேதாகமம் தரும் ஞானத்தினால் ஆசீர்வாதம் பெறுவதற்கு எனக்குப் போதித்தருளும். நான் உம்மில் நிலைத்திருக்கும்போது, உம்முடைய சித்தத்தின்படி என்னுடைய விருப்பங்கள் அருளப்படும் என்று உறுதி தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்களாலும், கிருபையாலும் தொடர்ந்து நான் பாக்கியம் பெறும்படி, உமக்குள் மகிமையான வாழ்க்கை நடத்துவதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.