அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை" (நீதிமொழிகள் 12:28) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். நீதியின் பாதை, ஜீவனுக்கு நேராக வழிநடத்தும் என்பதால் நாம் அதில் நடக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்தப் பாதையில் மரணமில்லை. ஒருவேளை, உங்கள் வாழ்க்கையில் எல்லாமே மரணத்திற்கு நேராக செல்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆண்டவரை விட்டு தூரமாய் இருப்பதாக உணரலாம். இப்படி தூரமாக இருப்பதால், வியாதி உங்களை வாட்டலாம்; வேலையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கலாம்; தொழிலில் போராட்டம், பொருளதார இழப்பு நேரிடலாம்;பாவத்தைக் குறித்த குற்றவுணர்ச்சி மிகுதியாய் இருக்கலாம். "நான் கடவுளிடம் சென்றால் அவர் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா?" என்று நீங்கள் தயங்கலாம்.

இந்தக் கேள்விக்குப் பதிலை வேதாகமத்தில் இளைய குமாரனின் கதையில் காணலாம் (லூக்கா 15:11). அவன், தன் தகப்பனின் வீட்டில் இருந்தபோது, சந்தோஷம், சமாதானம், செல்வம், உணவு, தகப்பனின் பராமரிப்பு எல்லாமும் அவனுக்கு இருந்தது. ஆனால், அவன் ஆஸ்தியில் தன் பங்கை எடுத்துக்கொண்டு, தகப்பன் வீட்டை விட்டு தொலைவாய், தன் வழியே செல்ல தீர்மானித்தபோது, அவன் வாழ்க்கை சிதைய ஆரம்பித்தது. அவன் பணம் எல்லாவற்றையும் செலவழித்தான். பணம் தீர்ந்தபோது, நண்பர்கள் அவனை கைவிட்டனர். முன்பு அவனுக்கு இருந்த சந்தோஷம், சமாதானம், உறுதியான நம்பிக்கை எல்லாம் மறைந்துபோனது. பராமரிக்க யாருமில்லாத நிலையில் இருப்பிடமோ, உணவோ இல்லாமல், தனிமையும் குற்றவுணர்வும் வாட்ட, கந்தையான உடைகளோடு விடப்பட்டான். அவன் வாழ்க்கை மரண பாதையில் சென்றது. அப்போது அவன், "நான் என் தகப்பன் வீட்டுக்குச் செல்லட்டும். அங்கு வேலைக்காரனாக இருந்தாலும் போதும். நான் திரும்பிச் செல்கிறேன்," என்று நினைத்தான். ஆனால் அவன் திரும்பியபோது, அவன் தகப்பன் அவனை அணைத்துக்கொண்டு, குடும்பத்தில் அவன் இடத்தை திரும்ப கொடுத்தார். அவனுக்கு ஆஸ்தி கொடுக்கப்பட்டது; திருப்தியான உணவு அளிக்கப்பட்டது; அளவற்ற சந்தோஷம் கிடைத்தது. தகப்பனுடன் இருந்தபடியினால், அவனது அக்கிரமம் அழிக்கப்பட்டு, பூரண வாழ்க்கை கிடைத்தது.

ஆம், அன்பானவர்களே, நாம் நம்முடைய பரம தகப்பனின் வீட்டில் இருந்தோமானால், நம் வாழ்க்கை நீதியின் பாதையில் செல்லும். அந்தப் பாதை பரிபூரண ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையாகும். பிதாவின் வீட்டில் எந்தக் குறைவும் காணப்படாது. தகப்பன் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற நிச்சயமும், சந்தோஷமும், செழிப்புமே இருக்கும். வியாதி, பாவம் அல்லது சோதனை என்று எந்த உபத்திரவம் எதிர்ப்பட்டாலும், பிதா நம்முடன் இருப்பதால் நம்மால் அவற்றை மேற்கொள்ள முடியும். அவர் உங்கள் பட்சத்தில் இருப்பதால், நீங்கள் எப்போதும் ஜீவனின் பாதையாகிய நீதியின் பாதையில் நடப்பீர்கள். ஆகவே, இன்று, இயேசு உங்கள் பக்கமிருக்க, பிதாவின் வீட்டில் நிலைத்திருக்க தீர்மானியுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார்; நீங்கள் ஒன்றிலும் குறைவுபட்டுவிடாதபடி, அவர் உங்களுக்கு வேண்டிவற்றை அளிக்கிறார். அவரை ஸ்தோத்திரிப்பதோடு, இயேசு எப்போதும் உங்களோடிருக்கும்படி, தம்முடைய வீட்டில் உங்களை வைத்துக்கொள்ளும்படி பிதாவிடம் கேட்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய பிரசன்னத்தை வாஞ்சித்து உம்மிடம் வருகிறேன். மரணமற்றதும் ஜீவனுள்ளதுமான நீதியின் பாதையில் என்னை நடத்தும். நாம் உம்மை விட்டு விலகி அலைந்து திரிந்ததை மன்னித்து, என்னை மறுபடியும் உமக்குப் பிரியமான பிள்ளையாக சேர்த்துக்கொள்ளும். என் வாழ்க்கையை உம்முடைய சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும், பூரண ஆசீர்வாதங்களினாலும் நிரப்பும். நான் வியாதியையும் பாவத்தையும் சோதனையையும் மேற்கொள்வதற்கு பெலன் அடையும்படி என் பக்கம் நிற்பீராக. எப்போதும் உம்முடைய அன்பின் பராமரிப்பில் உம் வீட்டில் வாசம்பண்ணுவதற்கு எனக்கு உதவி செய்யும். இயேசுவே, எப்போதும் என் வழிகாட்டியாகவும், வாழ்வின் வெளிச்சமாகவும் இருப்பாராக. எவ்வித நிபந்தனையுமில்லாமல் என்னை நேசிப்பதற்காக, எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வதற்காக உமக்கு நன்றி. நான் நீதிமானாயிருக்கும்படி எப்போதும் என்னை உம் அரவணைப்பில் வைத்துக்கொள்ளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.