அன்பானவர்களே, "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்" (யோவான் 15:5) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. அவரே நம்முடைய அஸ்திபாரமாயிருக்கிறார். நாம் அவர்மேல் கட்டப்பட்டிருக்கிறோம். அவரே அசையாத கன்மலையாயிருக்கிறார்; நாம் அவர்மீது ஸ்திரமாய் நிற்கும் மாளிகையாய் இருக்கிறோம். இந்த சத்தியத்தை அழகாக விளக்கும் ஒரு கதையை என் தந்தை அடிக்கடி கூறுவார். ஒரு தந்தையும் மகனும் ஆறு ஒன்றை கடந்தனர். தந்தை, தன் மகனை தோள்களில் சுமந்துசென்றார். தந்தை உயரமான மனிதராக இருந்தார். ஆனாலும், ஆற்றுக்குள் செல்ல செல்ல ஆழம் அதிகரித்தது. சீக்கிரத்தில் நீர்மட்டம் தந்தையின் கழுத்து வரைக்கும் வந்துவிட்டது. மகன் பயந்துபோய், "அப்பா, நான் மூழ்கிவிடுவேனோ?" என்று கேட்டான். அவன் அப்பா, "மகனே, நீ மூழ்கவேண்டுமென்றால், முதலாவது நான் மூழ்கவேண்டும். புரண்டு வருகிற இந்த தண்ணீரைக் காட்டிலும் நான் உயரமாயிருக்கிறேன். என் தோள்களின்மேல் இருக்கும்வரைக்கும் நீ பாதுகாப்பாகவே இருப்பாய்," என்று கூறினார்.

ஆம், ஆண்டவர் நம்முடைய திராட்சச் செடியாக இருக்கிறார்; நித்திய ஜீவனுள்ள திராட்சச்செடியாக விளங்குகிறார். அவர் பெரிதான, பராக்கிரமமான கன்மலையாக இருக்கிறார். அவர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஒருபோதும் பட்டுப்போவதில்லை. நீங்கள் அவரில் நிலைத்திருக்கும் வரைக்கும் பாதுகாப்பாய் இருப்பீர்கள். அவரில் நிலைத்திருக்கும்போது மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள். ஒருவேளை விலகிப்போகிறதாக உணர்ந்தால், இன்றே அவருடன் இணைந்துகொள்ளுங்கள். அவரே ஜீவனுள்ள திராட்சச்செடி. நீங்கள் அவருடைய கொடியாகும்போது, ஜீவன் உங்கள் மூலம் பாய்ந்துசெல்லும்; அவருடைய கிருபையினால் நீங்கள் கனிகொடுப்பீர்கள். இயேசுவுடன் இணைந்திருப்பதற்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள்; நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள்.

சகோதரி தமிழ்ச்செல்வி, இயேசு அழைக்கிறார் கூட்டம் ஒன்றில் இயேசுவை பற்றி முதல்முறை கேள்விப்பட்டார்கள். இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்பட்டு, ஜெப கோபுரத்திற்கு வரத்தொடங்கினார்கள்; அவர்கள் மகனை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள். குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்ததன் மூலம், தேவனுக்கு அர்ப்பணித்தார்கள். ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் மூலமாக இயேசுவுடன் அவர்கள் இணைந்திருந்ததால், மற்றவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்ற வாஞ்சை தீவிரமாய் அவர்களுக்குள் எழுந்தது. இயேசு அழைக்கிறார் வல்லமை பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமை அவர்கள்மேல் வந்தது; மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படி அவர்களை பயிற்றுவித்தது. ஜெப கோபுரத்தில் தன்னார்வமாக மற்றவர்களுக்காக ஜெபித்தபோது, அவர்கள் மூலமாக அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தன. ஜனங்கள் அவர்கள் பக்கமாய் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் ஜெபத்தின் மூலம் அநேகர் கிறிஸ்துவண்டை வந்தனர்; ஊழியத்தில் பங்காளராகினர்.

தேவன் அவர்கள் உண்மையை கனப்படுத்தினார்; வேலையில் அவர்களுக்கு உயர்வை கொடுத்தார். இப்போது அவர்கள் ஒரு கல்வி நிறுவனத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள்; அவர்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கி வருகிறார்கள். நீங்களும் மிகுந்த கனிகளைக் கொடுக்க முடியும். மெய்யான திராட்சச் செடியாகிய இயேசுவுடன் இணைந்திருங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் எனக்கு திட அஸ்திபாரமாகவும், கன்மலையாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீரே மெய்யான திராட்சச் செடி; நான் உம்முடைய கொடி. எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க உதவி செய்யும். வாழ்வில் பிரச்னைகள் அதிகரிக்கும்போது, பயம் மேற்கொள்ள முயற்சிக்கும்போது, நான் உம்முடைய தோள்களின்மேல் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்பதை மறந்துபோகாமல் இருக்க உதவும். ஜீவனை அளிக்கும் உம் கிருபை என் மூலமாய் பாய்ந்து, விடாய்த்துப்போன என் ஆத்துமாவுக்கு புதுப்பெலன் தந்து, என்னை கனிகொடுக்கிறவனா(ளா)ய் மாற்றட்டும். உமக்குள் நான் ஆழமாய் வேரூன்ற உதவும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் விளங்கி, அதிக கனிகளைக் கொடுக்கும்படி என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும். ஒருபோதும் பட்டுப்போகாமல், எப்போதும் எனக்கு வேண்டியவற்றை அருளிச் செய்து என்னை ஆதரிப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் பயங்கள், போராட்டங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் அர்ப்பணிக்கிறேன். நான் உம்மோடு ஐக்கியப்பட்டு ஜீவிக்கிறபடியினால், என் வாழ்க்கை உமக்கு மகிமை கொண்டு வருகிறதாய் அமையவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.