அன்பானவர்களே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து அவருக்குச் செவிகொடுப்பது மகிழ்ச்சி நிறைந்த பாக்கியமாகும். அவர், சொல்லிமுடியாத சந்தோஷத்தால் நம் உள்ளங்களை நிரப்புகிறார். "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசாயா 60:2) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும். ஆம், நம்முடைய ஆண்டவரின் மகிமை நம்மேல் வருகிறது. இந்த இருள் எப்படி நம் வாழ்வில் நுழைகிறது?

எதிர்மறையான எண்ணங்கள் நமக்குள் வேரூன்ற அனுமதிக்கும்போது இருள் வருகிறது. நாம் தொடர்ந்து மற்றவர்களைப் பற்றி தவறானவற்றை பேசி, குறைகூறி, வேடிக்கை செய்து புறம்பேசுவோமானால் இருளும் அந்தகாரமும் நம் உள்ளத்துக்குள் எழும்பும். "நம் வேலைக்கு உத்தரவாதம் இல்லை", "உங்கள் குடும்பத்திற்கு பெரிய பிரச்னை வரும்", "நமக்கு தேவையான பணம் எப்படி கிடைக்கும்?" என்பதுபோன்ற உரையாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கும்போது பயம் நம்மை பிடிக்கும். இச்சையான காரியங்களை பார்த்துக்கொண்டே அல்லது அவற்றை செய்துகொண்டே இருக்கும்போது காரிருள் நம்மை மூடுகிறது. உலகம் இதையே நமக்குத் தருகிறது. அந்தகாரமான காரிருள் நம்மை மூடுகிறது.

அன்பானவர்களே, இன்னொரு வழி உள்ளது. நீங்கள் ஆண்டவரின் சமுகத்தில் அமர்ந்து, வேதாகமத்தை வாசித்து, ஆவியில் அல்லது இன்னொருவருடன் இணைந்து ஜெபிக்கும்போது அவரது வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கிறது. நீங்கள் ஆண்டவருக்கு வைராக்கியத்துடன் ஊழியம் செய்து, தேவ ஊழியர் அறிவிக்கும் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு அல்லது தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும்போது, கர்த்தரின் மகிமை உங்கள்மேல் உதிப்பதை காண்பீர்கள். ஆம், அவரது மகிமை வெளிப்படும்; தெய்வீக பிரசன்னம் உங்களை மூடும்; நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் அதுவே உங்களை வழிநடத்தும். ஆதாமையும் ஏவாளையும் நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அனுதினமும் தேவனுடன் சஞ்சரித்து அவர் குறித்தவற்றை நிறைவேற்றியபோது தேவ மகிமை அவர்கள்மேல் இருந்தது. ஆனால், அவர்கள் கீழ்ப்படியாமல் பாவம் செய்தபோது, அவரது மகிமை விலகியது. இருள் அவர்களை மூடியது. பாவத்தின் சாபம் அவர்கள் வாழ்வின்மேல் மூடியது. ஆகவே, ஆண்டவர் நமக்குச் சமீபமாய் இருக்கிறாரா என்பதில் கவனம் செலுத்துவோம். "ஆண்டவரே, உலக காரியங்களை விட்டு விலகுவதற்கு எனக்கு உதவி செய்யும். உலகபிரகாரமான உரையாடல்கள், புறங்கூறுதல், தவறான செயல்களில் ஈடுபடாதபடி காத்தருளும். தீங்கான ஆலோசனைகளை பின்பற்றாதிருக்க, பயமுறுத்தல்களுக்கு அஞ்சிடாமல் இருக்க உதவும். எங்கள் உள்ளங்கள் உம்முடைய வார்த்தையால் பாதுகாக்கப்படட்டும்," என்று முறையிடுவோம். தேவ மகிமை இன்று உங்கள்மேல் எழும்பி, உங்களை நடத்துவதாக. அவரது வெளிச்சத்தினால் நீங்கள் பிரகாசமாக ஜொலிப்பீர்கள்; அவரது பிரசன்னம் பாதையில் உங்களை வழிநடத்தும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்தை வாஞ்சித்து, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, தயவாய் உம்முடைய ஒளியை என்மேல் பிரகாசிக்கப்பண்ணி, என்னை மூட முயற்சிக்கும் இருளை விரட்டுவீராக. உம்முடனான என் உறவை பாதிக்கின்ற புறங்கூறுதலுக்கும், பயத்துக்கும் பாவத்துக்கும் என்னை விலக்கியருளும். உம்முடைய வார்த்தையினாலும் உம்முடைய ஆவியின் பெலத்தினாலும் என்னை நிரப்பும். உம்முடைய வாக்குத்தத்தங்களை நம்பவும், உம்முடைய பூரண சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கவும் எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய மகிமை என்மேல் உதித்து, பாதையில் எனக்கு வழிகாட்டுவதாக. என் வாழ்க்கை உம்முடைய திவ்ய பிரசன்னத்தை எப்போதும் வெளிப்படுத்துவதாகவும், உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவதாகவும் இருக்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.