அன்பானவர்களே, தேவன் உங்களுக்கென்று வைத்து வைத்திருக்கிறவற்றை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்களா? "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" (லூக்கா 2:14) என்ற வசனத்தின் மூலம் அந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு வருகின்றன. தேவன், தாம் யாரிடத்தில் அதிக பிரியமாய் இருக்கிறாரோ அவர்களுக்கு மகத்தான சமாதானத்தை அளிக்கிறார். அவர் அருளும் சமாதானம் மெய்யாகவே இணையற்றதாகும். இயேசு சிலுவையில் மரித்தபோது, அவரது சீஷர்கள் பயத்தால் நிறைந்தனர். இயேசுவைக் கொன்றவர்கள் அடுத்து, தங்களைத் தேடி வருவார்கள் என்று அவர்கள் எண்ணினர். தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று சீஷர்கள் நினைத்தனர். இயேசு மரணத்திலிருந்து எழுந்து மறுபடியும் ஜீவிக்கிறார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். இயேசு ஜீவனை விட்டதையே அவர்கள் கண்டிருந்தனர். அவர் இல்லை என்று அவர்கள் நினைத்ததால் நம்பிக்கையின்மையும் பயமும் அவர்களைப் பிடித்தது.

நம் வாழ்விலும் சிலவேளைகளில் இத்தகைய சூழ்நிலை காணப்படுகிறதல்லவா? நமக்காக செயல்பட இயேசு நம்முடன் இல்லை என்று எண்ணி நம்பிக்கையை இழக்கும்போது பயம் நம்மை பிடிக்கிறது. "என் வாழ்க்கை அவ்வளவுதான்", "எனக்கு நன்மை நடக்காது" என்று நாம் சொல்வது, "ஆண்டவர் உயிருடன் இல்லை" என்று சொல்வதுபோலாகிறது. அப்போது பயம் மேற்கொள்கிறது. தேவன் உயிருடன் இல்லை; ஆதலால் எனக்கு அவரால் உதவி செய்ய இயலாது என்று நாம் கூறுவதுபோலாகிறது. அப்படிப்பட்ட வேளையில்தான் இயேசு தம் சீஷர்களுக்கு காட்சியளித்தார். "உங்களுக்குச் சமாதானம். நான் உயிரோடிருக்கிறேன்," என்று அவர் கூறினார். தம்மை உயிரோடிருக்கிறவராக அவர்களுக்குக் காண்பித்தார். "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக" (யோவான் 14:27) என்று அவர் முன்னதாகவே தம் சீஷர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார்.

அன்பானவர்களே, எப்போதும் தேவன்மேல் நம்பிக்கையாயிருங்கள்; அப்போது அவரது சமாதானம் உங்களோடிருக்கும். இயேசு, மெய்யாகவே ஜீவனோடிருக்கிறார்; அவர் மரிக்கவில்லை; எனக்கு அருகில் இருக்கிறார் என்று நீங்கள் நம்பும்போது, தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும். போட்டித் தேர்வுகளை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறீர்களா? மருத்துவ பரிசோதனை முடிவை எண்ணி கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கை என்னவாகுமோ என்ற கேள்வி மனதுக்குள் எழும்புகிறதா? அதுபோன்ற தருணங்களில், "ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன்," என்று சொல்லுங்கள். இவ்வாறு நீங்கள் அவர் உங்களோடிருப்பதை அறிக்கையிடும்போது, தேவன் அருளும் மகத்தான சமாதானம் உங்கள் உள்ளத்தை நிறைக்கும். இந்த சமாதானம் உங்களை நிரப்பும்; பாதுகாக்கும்; உள்ளத்தை திடப்படுத்தும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் தரும் இணையற்ற சமாதானம் என்னும் ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பயப்படுகிறதும், நம்பிக்கையிழந்திருக்கிறதுமான தருணங்களில், நீர் உயிரோடிருப்பதையும், என்னோடே கூட இருப்பதையும் எனக்கு ஞாபகப்படுத்தும். உம்முடைய பிரசன்னத்தாலும் வல்லமையாலும் திடமான நம்பிக்கையை எனக்கு தந்தருளும். எல்லா கலக்கத்தையும் என்னை விட்டு விலக்கியருளும். எல்லாப் புத்திக்கும் மேலான உம்முடைய பூரண சமாதானத்தை நான் பெற்றுக்கொள்ள உதவும். சந்தேகங்கள் எழும்பும்போது, நீர் என் அருகில் இருக்கிறீர்; ஆளுகை செய்கிறீர் என்ற அறியும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். கலங்கியிருக்கும் என் இருதயத்தை உம்முடைய சமாதானத்தினால் அமைதிப்படுத்தும். சரியான தீர்மானங்களை செய்யும்படி என்னை வழிநடத்தும். நீர் என்னைக் குறித்து கொண்டிருக்கிற நினைவுகளை நம்பி, எதிர்காலத்தை குறித்த என் கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் வழிகளிலெல்லாம் உமக்குப் பிரியமாய் நடந்துகொள்வதற்கு என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். என் இருதயத்தையும் சிந்தையையும் உம்முடைய சமாதானம் ஆளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.