எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய தினம் (அக்டோபர் 10) என் கணவர், Dr.டி.ஜி.எஸ். தினகரனை ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பிய நாளாகும்.

நாங்கள் காருண்யா பல்கலைக்கழகத்தை தொடங்கியபோது, பல்வேறு இக்கட்டுகளை எதிர்கொண்டோம். எங்களிடம் பணமில்லை; எண்ணற்ற பிரச்னைகள் எங்களை அழுத்தின. இவற்றின் மத்தியிலும் ஓர் அதிசயம் நடந்தது. ஒருநாள் இரவு, காவலாளி ஒருவர் வானத்திலிருந்து பூமி வரைக்கும் ஒளிர்ந்த ஒரு பெரிய வெளிச்சத்தை பார்த்தார். காருண்யாவில் அந்த இடத்தில் தரிசன ஸ்தலம் அமைந்துள்ளது. மெய்யாகவே, ஆண்டவர் காருண்யாவில் மகத்துவமான காரியங்களை செய்துள்ளார். அவரது பிரசன்னம் அங்கே இருக்கிறது. அவ்வாறே, "தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்" (2 சாமுவேல் 22:33) என்று தாவீது கூறுகிறான்.

அன்பானவர்களே, நாம் தேவனை அப்படியே நம்பி, அவரை முழுமையாய் விசுவாசிக்கவேண்டும். அப்போது, இயேசு கிறிஸ்துவின் அபிஷேக வல்லமையை பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகிய தாவீது ராஜா, கர்த்தர் அவனை அவனுடைய எல்லா எதிரிகளிடமிருந்தும் விடுவித்தபோது இந்த சங்கீதத்தைப் பாடினான் (2 சாமுவேல் 22:1). அவன் தேவன்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் வைத்திருந்தான்.

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" (சங்கீதம் 23:1) என்று அவன் கூறுகிறான். இந்த வசனத்தை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள்? "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" என்று மனதார சொல்கிறீர்களா? ஆம், தேவனாகிய கர்த்தரை தாவீது தன் மேய்ப்பராக கொண்டிருந்தான்; அவன் வாழ்வில் எப்போதும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தான். "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4) என்று அவன் தைரியமாக கூறுகிறான். தேவன் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

என் கணவர், ஆண்டவரிடமிருந்து அபிஷேகத்தை பெற்றுக்கொண்டதுபோல, நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். வாழ்வின் உபத்திரவங்களால் நீங்கள் பாரப்பட்டு, மனஞ்சலித்துப்போயிருந்தாலும், ஆண்டவரால் உங்களுக்கு தரிசனங்களை அருள முடியும். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். எனக்கு தேவ வல்லமை வேண்டும்," என்று இன்றைக்குக் கூறுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களை தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய மகத்தான வல்லமையை நம்பி, விசுவாசம் நிறைந்த இருதயத்தோடு உம்மிடம் வருகிறேன். நீரே எனக்கு உறுதியான அரணாகவும், மேய்ப்பராகவும் இருக்கிறீர். உம்மை முழுவதுமாய் நம்புகிறேன். ராஜாவாகிய தாவீதை நீர் அபிஷேகித்து, எல்லா உபத்திரவங்களின் மத்தியிலும் வழிநடத்தியதுபோல, என்னையும் இன்றைக்கு உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, உபத்திரவத்தின், இருளின் நாள்களில் என்னுடைய வெளிச்சமாகவும் பெலனாகவும் விளங்கும். Dr.டி.ஜி.எஸ். தினகரனின் வாழ்க்கையில் நீர் அற்புதங்களைச் செய்ததுபோல, நானும் உம்முடைய வல்லமையை அனுபவிக்க விரும்புகிறேன். என் இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து, நீதியின் பாதையில் என்னை நடத்தும். நீரே என் மேய்ப்பன். நான் பயப்படமாட்டேன் என்று தைரியமாகக் கூறுவதற்கு எனக்கு உதவும். உம்முடைய கோலாலும் தடியாலும் என்னை வழிநடத்தும்; உம்முடைய ஆறுதல் என்னை சூழ்ந்துகொள்வதாக. என்மேல் உம்முடைய வல்லமையான அபிஷேகத்தை ஊற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.