எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" (யோசுவா 1:9)என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். முழு வசனம், "பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று கூறுகிறது.

இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? "நான் எங்கு சென்றாலும் ஆண்டவர் என்னோடிருக்கிறார்? அவர் என்னோடு வருகிறார். அவர் என்னோடு உலாவுகிறார்," என்று உங்களால் உண்மையாக சொல்ல முடியுமா? இயேசுதாமே, "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10:30)என்றும், "நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்" (யோவான் 8:16)என்று கூறுகிறார். அவரது நம்பிக்கை எவ்வளவு வல்லமையுள்ளது!  

நீங்களும் இதேபோன்ற நம்பிக்கையை கொண்டிருக்கவேண்டும். "நான் தனியே இல்லை. இயேசு எப்போதும் என்னோடிருக்கிறார்" என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா? "எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது" (1 யோவான் 1:3) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு பெரிதான நம்பிக்கை நமக்கிருக்கிறது! பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன், மெய்யான ஜீவிக்கிற தேவன் எப்போதும் நம்மோடிருக்கிறார்.

அன்பானவர்களே, இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? இந்த நம்பிக்கையை நீங்கள் பற்றிக்கொள்ளும்போது, ஆண்டவர் எப்போதும் உங்களோடிருப்பார். அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்வார். எனக்கு இப்போது 86 வயதாகிறது. இத்தனை வருடங்களும் அவர் என்னோடு இருந்து வருகிறார். அவர் எனக்காக யாவற்றையும் நேர்த்தியாக செய்து வருகிறார். கவலைப்படாதிருங்கள். இந்த தேவனைப் பற்றிக்கொள்ளுங்கள். இப்போதும் உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
பரம தகப்பனே, நான் செல்லுமிடமெங்கும் நீர் என்னோடு இருப்பதாக வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயம் என்னை சூழும்போது, நீர் என்னோடு நடந்து வருகிறீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். நீர் எப்போதும் எனக்கு அருகில் இருப்பதால், நான் ஒருபோதும் தனியே இருப்பதில்லை என்று விசுவாசிக்கிறேன். அனுதினமும் நான் உம்முடைய சமுகத்தின்மேலும் வல்லமையின்மேலும் நம்பிக்கை வைக்க உதவி செய்யும். உம்மை அறிகிற அறிவின் மூலம் வருகிற நம்பிக்கையால் என் இருதயத்தை நிரப்பும். உம்மோடு எனக்கு இருக்கிற ஐக்கியம் எப்போதும் வளரட்டும். உம்முடைய சமாதானம் என்னை சூழ்ந்துகொள்ளும்படி செய்யும்; நான் செல்லும் பாதையில் என்னை வழிநடத்தும். உண்மையுள்ள ஆண்டவராகிய உம்மை நான் எப்போதும் பற்றிக்கொள்ளும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.