அன்பானவர்களே, "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9) என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. இதன் மூலம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காரியங்கள் சிரமமாகும்போது, நம்முடைய கிரியைகளுக்கு பலனில்லை என்று தோன்றும்போது, சோர்ந்துபோகாதிருப்போம். நம்மை சோர்ந்துபோகச்செய்யக்கூடிய சோதனைகள் எப்போதும் எழும்பும். ஆகவே, இக்கட்டுகள் நேரிடும்போது, சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்பீர்கள் என்பதை மறந்துவிடாதிருங்கள்.

இளம் போதகர் ஒருவர் என் கணவருடன் தொலைபேசியில் பேசினார். தாம் ஊழியத்தில் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து அவர் கூறினார். ஆண்டவருக்கு ஊழியம் செய்வதால் தன்னைப் பற்றி பிறர் குறைசொல்வதாகவும், அதனால் தாம் மனவேதனை அடைந்திருப்பதாகவும் கூறினார். சுற்றிலுமிருப்பவர்கள் கேலி செய்வதால், சோர்ந்துபோய்விட்டதாக தெரிவித்து, இனிமேல் ஊழியம் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும், நான் இதை விட்டுவிடலாமா? புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தட்டுமா? என்று என் கணவரிடம் ஆலோசனை கேட்டார். என் கணவர், "தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களுக்கு முன்னே இருக்கிற இலக்கை அடையும்வரை பிரயாசப்படுங்கள்," என்று ஆலோசனை கூறினார். இது அவருடைய இருதயத்தை தொட்டது. அவர் தேவனை பற்றிக்கொண்டார். இன்றைக்கு அவர் வல்லமை நிறைந்த போதகராக, மக்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்படி ஆண்டவரால் பயன்படுத்தப்படுகிறார். ஒருபோதும் சோர்ந்துபோகாதிருங்கள். பனித்துளி (snowdrop) என்று அழைக்கப்படும் ஒரு தாவரம் இருக்கிறது. அதன் மலர் வெண்மை நிறத்தில் அழகாக இருக்கும். குளிர்காலத்தில் படர்ந்திருக்கும் பனியை தாண்டி அது பூக்கும். இந்தச் செடி, கிறிஸ்துவைப் போன்று நம்பிக்கையையும் புது வாழ்வையும் குறிக்கிறது. சோர்ந்துபோகக்கூடாது என்ற பாடத்தை இந்த மலர் உணர்த்துகிறது. இந்தச் செடியைப் போன்று, கடினமான தருணங்களிலும் தளராமல் செயல்பட்டால் நீங்களும் நிச்சயமாகவே ஏற்ற காலத்தில் அறுவடை செய்ய முடியும்.

"நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு" (2 நாளாகமம் 15:7) என்று வேதம் கூறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் அளித்த அழைப்பு உள்ளது. ஆண்டவர் உங்களை அழைத்திருக்கும் வேலையை மாத்திரம் நீங்கள் செய்தால் போதும். ஒருபோதும் சோர்ந்துபோகாதிருங்கள். ஆண்டவர் உங்களை குடும்பத்தில், திருச்சபையில், ஊழிய பணித்தளத்தில் பயன்படுத்துவாராக. உங்கள் கிரியைக்கு பலன் உண்டு. நற்கிரியை செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள். ஏற்ற காலத்தில் உங்களுக்கு பலன் கிடைக்கும். தாவரங்கள் வளர்ந்து பூத்து செழிப்பதற்காக விவசாயி பொறுமையாக காத்திருக்கிறார். அவ்வாறே நீங்களும் பொறுமையாயிருங்கள். நீங்கள் அறுவடையை காண்பீர்கள். ஆண்டவரின் சௌந்தரியம் உங்களில் காணப்படுவதாக; அவர்தாமே உங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
பரம தகப்பனே, இன்றைக்கு தயவாய் என்னை ஆசீர்வதியும். உமக்கும் உம்முடைய ஜனத்துக்கும் நான் செய்த அன்பின் பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு நீர் அநீதியுள்ள தேவன் அல்ல. நீர் எனக்கு பலன் அளிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். உம்மை நம்பி, உம்முடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்த்திருக்கிறேன். என்னுடைய தளர்ந்த கரங்களை திடப்படுத்தி, நீர் எனக்கு முன்பாக வைத்திருக்கிற இலக்கை நோக்கி தொடர்வதற்கான கிருபையை எனக்கு தந்தருளும். என் குடும்பத்திலும் வேலைஸ்தலத்திலும் நான் பலனை காண்பதோடு, உமக்காக நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் திரளான அறுவடையை பெற்றுக்கொள்ள உதவி செய்யும். தகப்பனே, என் வாழ்வில் நம்பிக்கையையும் நல்ல எதிர்காலத்தையும் புதிய ஆரம்பங்களையும் அருளிச்செய்யும். என் வாழ்வில் எல்லா பகுதிகளும் பூத்து செழிக்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.