அன்பானவர்களே, இன்றைக்கு, "என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்" (யாத்திராகமம் 9:16) என்ற வசனத்தை நாம் தியானிப்போம்.

இந்த வசனம் கூறுகிறபடி, தேவன் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவருடைய வல்லமையை காட்டி, அவருடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வரும்படியாகவும் நம்மை உயர்த்துகிறார்.

பல வேளைகளில் நாம், குறைவான காரியங்களோடு திருப்தியாகி, இருக்கிற நிலையை தக்கவைத்துக்கொள்ளும்படி, "ஓய்வு பெறும் வரைக்கும் இந்த வேலையில் இருந்து, சம்பளம் பெற்று, குடும்பத்தைக் கவனித்து சாப்பிட்டால் போதும், சந்தோஷம்," என்று எண்ணுகிறோம். ஒருவேளை, தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றால் மாத்திரம் போதும் என்று நினைக்கிறோம். இதுபோன்று விரும்புவது இயல்புதான் என்றாலும், இந்த வசனம், சற்று மேலான காரியத்துக்கு முயற்சி செய்யுமாறு நம்மை அழைக்கிறது. சாதாரணமான காரியங்களை அல்ல; மேலானவற்றையே தேவன் நமக்கு திட்டம்பண்ணியுள்ளார். இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறவண்ணம், செல்வாக்கும், மகத்துவமும் கொண்ட நிலைக்கு, நாம் தனிப்பட்ட பலனை பெற்றுக்கொள்ளும்படி அல்ல, தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படிக்கு தேவன் உயர்த்துகிறார். அவருடைய மகிமைக்காக, அசாதாரண காரியங்களை சாதிக்கும்படி, வாழ்வில் ஒளிவீசுவதற்கு நம்மை அவர் அழைக்கிறார்.

யோசேப்பின் வாழ்க்கையை பார்ப்போம். அவன், எகிப்து நாட்டில், ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருந்தாலும், அவன் அந்த தேசத்தின் ஜனங்களுக்கு மாத்திரம் சேவை செய்யவில்லை; பஞ்சம் வரும்போது, அனைத்து தேசங்களின் ஜனங்களும் தானியம் வாங்கும்படி எகிப்துக்கு வரும் வண்ணம் தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்து உரிய இடத்தில் அமர்த்தியிருந்தார். அப்போது, யோசேப்பின் தலைமைத்துவம் மற்றும் ஞானத்தின் வாயிலாக தேவ நாமம் மகிமைப்பட்டது. இந்த முக்கியமான பணிக்கு தேவன் யோசேப்பை எப்படி வனைந்து, வழிநடத்தி, ஆயத்தப்படுத்தினார் என்பதை வேதம் அழகாக விவரிக்கிறது. அவனுக்கு செல்வாக்கு பூமியெங்கும் விளங்கியது; அவன் வாழ்வில் தேவ வல்லமை வெளிப்படுத்தப்பட்டது.

எஸ்தரை பாருங்கள். ராணியான அவளுக்கு, பாதுகாப்பும், ராஜரீக சிலாக்கியமும் வசதியும் இருந்தன. ஆனால், தேவனுடைய ஜனங்களுக்கு ஆபத்து வந்தபோது, அவள் மௌனமாயிருக்கவில்லை; தன்னுடைய பாதுகாப்பை மாத்திரம் பார்க்கவில்லை. தன்னுடைய ஜனங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு தம்முடைய அந்தஸ்தை தைரியமாக பயன்படுத்தினாள். அவளுடைய தைரியத்தினால் தேவ ஞானம் மகிமைப்பட்டது.

அவ்வாறே, மகத்துவமான நிலைக்கு எழும்பி, செல்வாக்கான இடத்தை அடைந்து, நம்முடைய சொந்த மகிமைக்காக அல்லாமல், அவருடைய நாமம் உயர்த்தப்படும்படியாக பெரிய காரியங்களை செய்வதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். அவருடைய வல்லமையையும் ஞானத்தையும் உலகம் அறியச்செய்யும்படி நம்மை பயன்படுத்த அவர் விரும்புகிறார்.

ஆகவே, நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம். படிப்பில் மிக உயர்ந்த மதிப்பெண்களை வாங்குவதற்கு, வேலையில் சிறந்துவிளங்குவதற்கு, வியாபாரத்தை உயர்த்துவதற்கு  முயற்சி செய்யுங்கள். நாம் செய்கிற எல்லாவற்றையும் உத்தமத்தோடு செய்து, தேவனுடைய ஞானத்தை தேடி, அவருக்கே சகல மகிமையையும் செலுத்துவோம். "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:16) என்று வேதம் கூறுவதுபோல, இன்று வெளிச்சம் பிரகாசிக்கட்டும். தேவனுடைய நாமம் பூமியெங்கும் துதிக்கப்படும்படி, உங்கள் செயல்களை காணும் மக்களை தேவனை நோக்கி திருப்புங்கள். அவருடைய மகிமைக்காக பயன்படுத்தப்பட நம்மை அர்ப்பணிப்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு உம்முடைய ஞானத்தையும் பெலனையும் எனக்கு தந்தருளும்படி கேட்கிறேன். நான் இப்போது இருக்கிற நிலையிலிருந்து என்னை தூக்கியெடுத்து, மகா உயரங்களுக்கு எழும்ப எனக்கு உதவி செய்யும். செல்வாக்கும் சிறப்பும் வாய்ந்த நிலையில் நான் அமர்த்தப்படும்படி, நான் செய்கிற எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக செய்யும்படி என்னை பெலப்படுத்தும். என்னுடைய சுய மகிமைக்காக அல்ல; என் மூலம் உம்முடைய ஒளி பிரகாசிக்கும்படியும், உம்முடைய நாமம் பூமியெங்கும் மகிமைப்படுத்தப்படும்படியும் நான் விசேஷித்தவண்ணம் வேறுபட்டு நிற்பதற்கு உதவி செய்யும். உத்தமமாய் நடக்கும்படி எனக்கு வழிகாட்டி, உமக்கு கனத்தை கொண்டு வருகிறதான தீர்மானங்களை நான் எடுப்பதற்கான ஞானத்தை தந்தருளும். வேலைகளை செய்யும்படி என் கரங்களையும் இருதயத்தையும் பெலப்படுத்தும்; நீர் என்னைக் குறித்து வைத்திருக்கிற நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வேண்டிய உதவியை அருளிச்செய்யும். நான் மற்றவர்களுக்கு உண்மையாய் சேவை செய்து, நான் செய்து முடிக்கிற எல்லா காரியங்களாலும் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி என்னை ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.