அன்பானவர்களே, இன்று முதல் 'ஜீவ அப்பத்தை' இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறேன். 'ஜீவ அப்பம்' என்பது என்ன? "தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்" (1 யோவான் 4:16) என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. நாம் அவரை கிட்டிச் சேரவும், அவர் நம்மை கிட்டிச் சேரவும் உதவும்படி இந்த அன்பு நமக்குள் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதே இந்த வசனத்தின் பொருளாகும்.

நாம் எப்படி அன்பில் நிலைத்திருக்க முடியும்? "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்று வசனம் கூறுகிறது. அப்படியானால் இந்த அன்பின் அர்த்தம் என்ன? நாம் அவர்களுக்கு நன்மை செய்யும்போது அல்லது நம்மேல் ஈர்ப்பு இருக்கும்போது மாத்திரம் மக்கள் நம்மேல் காட்டுகிற இவ்வுலக அன்பு அல்ல அது. தேவன் குறிப்பிடுகிற அன்பு வேறானது. அது நிபந்தனையற்ற, நித்தியமான, ஒருபோதும் மாறாத அன்பாயிருக்கிறது. ஒருவருடைய தோற்றம் எப்படியிருக்கிறது அல்லது அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை அது சார்ந்ததல்ல. அப்படிப்பட்ட அன்பை கொண்டிருக்க நாம் முயற்சிக்கவேண்டும்.

நம் இருதயங்களை பெரிதான அன்பினால் நிறைக்க தேவன் விரும்புகிறார். இயேசு அப்படியே அன்புகூர்ந்தார். பேதுரு, "அந்த மனுஷனை நான் அறியேன்" என்று இயேசு மறுதலித்தான். நம் நண்பன் அப்படிச் சொன்னால் நம் மனம் எவ்வளவாய் உடைந்துபோகும்? ஆனாலும், இயேசு, பேதுருவை நேசித்தார். தன்னுடைய பாடுகளின் நேரத்திலும் இப்படிப்பட்டவர்கள்மேல் இயேசுவால் எப்படி அன்புகூர முடிந்தது? தேவ ஆவியானவர் அவரது இருதயத்தினுள் ஊற்றியிருந்த அன்பினால் அப்படி நடந்துகொள்ள முடிந்தது (ரோமர் 5:5).  

தேவ ஆவியானவர் தினமும் நம் இருதயங்களில் தொடர்ந்து தேவ அன்பை ஊற்றவேண்டும். இந்த அன்பில் நாம் நிலைத்திருந்தால், தேவனில் நிலைத்திருப்போம். தேவனுடைய ஆவியானவர் இல்லையென்றால் நாம் கோபப்படலாம்; பழிவாங்கத் தேடலாம்; மனஞ்சலித்துப்போகலாம். ஆனாலும், பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் அன்பில் நிலைத்திருக்க முடியும். ஆகவே, நமக்கு உதவி செய்யும்படி தேவனிடம் கேட்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மிலும் உம்முடைய அன்பிலும் நான் நிலைத்திருக்க உதவுவதாக நீர் வாக்குப்பண்ணியிருக்கிறீர். என்னுடைய சொந்த மனுஷீக பெலவீனங்களோடு நான் அதைச் செய்ய இயலாது; ஆகவே, உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தை மாற்றி, உம்முடைய பரிபூரண அன்பினால் அதை நிரப்பவேண்டும். ஆண்டவரே, நீர் என்னில் நிலைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே, அனுதினமும் உம்மிலும் உம்முடைய அன்பிலும் நிலைத்திருக்க என்னை அர்ப்பணிக்கிறேன். என்னை இன்னொரு முறை நிரப்பும். நான் எப்போதும் அன்பாக நடந்துகொண்டு, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்கு உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.