அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4)என்பதாகும். இது நாம் நன்கு அறிந்த வசனம்; அனைவருக்கும் பிடித்தமான வசனம். இந்த வசனம் எவ்வளவு உறுதியான நிச்சயத்தை நமக்குத் தருகிறது! நாம் மரணத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும், நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாம் அழிவு வருவதையே காட்டினாலும், தேவன் நம்மோடிருப்பதால் நாம் பயப்படமாட்டோம். எவ்வளவு ஆறுதலையும் பெலனையும் தருகிற வாக்குத்தத்தம் இது!

இன்று, நீங்கள் இருளான பள்ளத்தாக்கின் வழியாக செல்வதுபோல உணரலாம். இருள் உங்களை சூழ்ந்திருக்கலாம்; யாருமில்லாத தனிமையை உணரலாம்; மரணம் வாசலில் நிற்பதைப்போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். மருத்துவர்கள் உங்களை கைவிட்டிருக்கலாம். "இன்னும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பீர்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக இருங்கள்," என்று சொல்லியிருக்கலாம். அப்படிப்பட்ட நம்பிக்கையற்ற நிலையில் நீங்கள் இருக்கலாம். கடன் பாரம் அழுத்திக்கொண்டிருக்கலாம்; கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க இயலாத நிலையில், "அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?" என்று யோசித்துக்கொண்டிருக்கலாம். இருளான தருணத்தை கடந்துசெல்வதால், "இன்றே என் வாழ்க்கையின் கடைசிநாள்," என்று எண்ணிக்கொண்டிருக்கலாம்.  
ஆனால், அன்பானவர்களே, தேவன் உங்களோடிருக்கிறார். நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். புதுச்சேரியை சேர்ந்த பூங்காவனம் என்ற அன்பு சகோதரிக்கு இப்படியே நடந்தது. 2022ம் ஆண்டில் அவர்களுக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு வாரம் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள் என்று கூறினர். எந்த சிகிச்சையும் பலன் தராத நிலையில் அவர்கள் மனமுடைந்து போனார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், இயேசு அழைக்கிறார் பங்காளர்கள். அவர்கள், ஊழியத்தின் மூலம் நடைபெறும் அற்புதங்களைப் பற்றி கூறியிருக்கிறார்கள். "Dr. பால் தினகரன், பங்காளர் கூட்டம் நடத்துவதற்கு புதுச்சேரிக்கு வருகிறார். எங்களுடன் வாருங்கள். கூட்டத்தில் நீங்கள் ஜெபித்தால், ஆண்டவர் உங்களை குணமாக்குவார்," என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் மிகுந்த விசுவாசத்தோடு கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். உடலில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள், சிறுநீர்ப் பையுடன் முன் வரிசையில் உட்கார்ந்திருந்திருக்கிறார்கள். ஜெபவேளையில் என் தந்தை Dr. பால் தினகரன், "எல்லா கேன்சரும் குணமாகட்டும்," என்று ஜெபித்திருக்கிறார். அவர்களும் கடவுள் தன்னை குணப்படுத்துவார் என்று இருதயத்தில் நம்பிக்கையோடு இணைந்து ஜெபித்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்குப் பின்பு, மருத்துவரிடம் ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றிருக்கிறார்கள். மருத்துவர், "கேன்சர் எங்கே? அது இருந்த அடையாளமே இல்லை. நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். வீட்டுக்குச் செல்லுங்கள்," என்று கூறியதைக் கேட்டு, அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள்; மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். தேவன் அவர்களை மரணத்தின் நிழலில் இருந்து மீட்டார்; அவர்கள் பூரண சுகம் பெற்றார்கள்.

இன்றைக்கு தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். தேவன் உங்களோடிருப்பதால் ஒரு தீங்குக்கும் நீங்கள் பயப்படமாட்டீர்கள். மரண நிழலின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும், "தேவன் என்னோடிருக்கிறார். நான் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. அவர் என்னை மீட்டுக்கொள்வார்," என்று சொல்வீர்கள். அன்பானவர்களே, இன்றைக்கு அவர் உங்களை மீட்பார். அனைவரும் உங்களை கைவிடலாம். ஆனால், தேவன் உங்களோடு வருகிறார். பயப்படாதிருங்கள். நாம் இணைந்து ஜெபித்து, இந்த வாக்குத்தத்தத்தை நம் வாழ்க்கைக்கு உரிமையாக்கிக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எப்போதும், மரண பள்ளத்தாக்கிலும், எனக்கு உற்ற சிநேகிதராக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயமும் கலக்கமும் என்னை சூழும்போது, நீர் என் அருகில் இருக்கிறீர்; உம்மோடு நெருக்கமாய் இருக்கும்படி என்னை பற்றிப்பிடித்திருக்கிறீர் என்று நம்புகிறேன். நீர் என்னோடு இருப்பதால் எந்த தீங்குக்கும் நான் பயப்பட தேவையில்லை என்று நீர் வாக்குப்பண்ணியிருக்கிறீர்; அந்த நிச்சயத்தை நான் பற்றிக்கொள்கிறேன். பயங்களிலிருந்து, பாரங்களிலிருந்து, குழப்பங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். மற்றவர்கள் என்னை கைவிடும்போது, நீர் எப்போதும் எனக்கு உண்மையுள்ளவராய், என்னை விட்டு விலகாமல் இருக்கிறீர். எல்லாப் புத்திக்கும் மேலான உம்முடைய பூரண சமாதானத்தினால் என்னை நிறைத்து, எல்லா தீங்கிலிருந்தும் நீர் என்னை விடுவிப்பீர் என்று நான் அறிந்து, தைரியத்துடன் முன்னேறிச் செல்ல உதவும். என் வாழ்க்கையை உம் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.