அன்பானவர்களே, "இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்" (செப்பனியா 3:15) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும். பிசாசுகளும் இழப்புகளும் வேதனையும் நன்றியறியாதவர்களும் பெலவீனமும் உங்களைச் சூழ்ந்திருப்பதாக நீங்கள் உணரலாம். ஆனால் தேவன், "ராஜா உன்னோடு இருக்கிறார். ராஜா உன்னைச் சூழ்ந்திருக்கிறார். நானே ராஜாதி ராஜாவாயிருக்கிறேன். நான் மரணத்தை தோற்கடித்திருக்கிறேன்; இருளின் வல்லமையை ஜெயித்திருக்கிறேன். நான் ஜீவிக்கிறேன். நானே இயேசு. நான் உன்னோடு இருக்கிறேன். இனி ஒருபோதும் நீ தீங்குக்குப் பயப்படமாட்டாய். தீங்கு உன்னைத் தொடாது. உன்னைப் பாதுகாக்கும்படி நான் உன்னுடனே கூட இருப்பேன்," என்று கூறுகிறார். பயப்படாதிருங்கள். தீங்கு எதிர்ப்படலாம். ஆனால், தேவன் நீங்கள் அதை கடந்து வந்து சாட்சியாக விளங்கும்படி செய்வார்.

அகஸ்டஸ் பிரபு என்ற அன்பு சகோதரரின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் இயேசுவை அறிந்திருந்தாலும் அவருக்கு தூரமாய் இருந்தார். ஒருநாள் அவருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறியது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய இரத்தத் தட்டுகளின் (பிளேட்லெட்) எண்ணிக்கை, இயல்பு அளவுக்கு மிகவும் குறைவாக 780 என்ற எண்ணிக்கையில் காணப்பட்டது. உள்ளுறுப்புகளிலிருந்து இரத்தம் கசிவதால் அவர் விரைவிலேயே மரித்துவிடுவார் என்று மருத்துவர் கூறிவிட்டார். அவருடைய மனைவி அழுதார்கள்; மரண பயம் அவர்களைப் பிடித்தது. அந்த வேதனையின் மத்தியில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு ஓடினார்கள். தன்னுடைய கணவரின் உயிர் காப்பாற்றப்படும்படியாக ஜெபிப்பதற்குக் கேட்டுக்கொண்டார்கள். ஜெப வீரர்களும் அவர்களோடு சேர்ந்து அழுது ஜெபித்தார்கள். ஒரு ஜெப வீரர், "நிச்சயமாகவே ஆண்டவர் உங்கள் கணவரை இப்போது தொடுகிறார்," என்று கூறினார். அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சகோதரர் அகஸ்டஸ், தன்னை யாரோ தொடுவதை உணர்ந்தார். அற்புதவிதமாக இரத்த தட்டுகளின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. 780 என்ற அளவிலிருந்து 7000 ஆக உயர்ந்தது. மருத்துவர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். சில நாட்களில் அவர் பூரண சுகமடைந்தார்; ஆண்டவரின் பிள்ளையாக மாறினார். இன்றைக்கு அவர்கள் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர். நீங்கள் இனித் தீங்கை காணமாட்டீர்கள். ராஜா உங்களண்டை வருகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இஸ்ரவேலின் ராஜாவாகிய நீர் என்னோடு இருப்பதால் நான் இனி எந்தத் தீங்குக்கும் பயப்பட்ட தேவையில்லை என்று வாக்குக்கொடுத்திருப்பதால் உள்ளத்தில் நன்றி நிறைந்தவனா(ளா)ய் உம் முன்னே வருகிறேன். இருள், வேதனை, இழப்பு, பெலவீனம் என்னை சூழ்ந்திருப்பதாக நான் உணர நேரிட்டாலும் ராஜாதி ராஜாவாகிய நீர் என்னுடன் இருக்கிறீர் என்று நம்புகிறேன். இயேசுவாகிய நீர் என்னுடன் இருக்கிறீர் என்பதே எனக்கு ஆறுதல். பயமும் நிச்சயமற்ற நிலையும் சூழ்ந்துகொள்ளும்போது, உம்முடைய பிரசன்னமும் வல்லமையும் என்னுடன் இருப்பதை நினைவுப்படுத்தும். நீர் என்னை பாதுகாக்கிறபடியினால் எந்தத் தீங்கும் என்னை தொடாது என்று நாம் நம்புவதற்கு உதவி செய்யும். சவால்கள் எழும்பும்போது, அவற்றை நான் கடந்து வருவதற்கு உதவி செய்து, என்னுடைய உபத்திரவங்களை உம்முடைய கிருபையாலும் வல்லமையாலும் அற்புதமான சாட்சியாக மாற்றுவீர் என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தத்தினால் என்னை பெலப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.