அன்பானவர்களே, இன்றைக்கு, "பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இந்த வசனத்தின் மூலம், தேவன், தாம் உங்களை மீட்டுக்கொண்டிருப்பதால் பயப்படவேண்டாம் என்று நிச்சயமாய் கூறுகிறார். அவர் உங்களை பெயர் சொல்லி அழைத்து, "நீ என்னுடையவன்(ள்)" என்று கூறுகிறார்.

இன்றைக்கு, நீங்கள் திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதாக உணர்ந்து, தேவன் என்னை மன்னிப்பாரா என்று சந்தேகப்படலாம். பாவத்தை விட்டுவிட மனதாயிருந்தாலும், மீண்டும் அதே தவறுகளை செய்துகொண்டிருக்கலாம். தேவன் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா என்று நீங்கள் கேட்கலாம். தேவன் உங்களை பெயர் சொல்லி அழைத்திருக்கிறபடியினால், அவர் பாவத்துடனான போராட்டத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவி செய்து, தம்முடைய அன்பின் கரங்களினால் உங்களை அணைத்துக்கொள்வது உறுதி. அவர், "நீ என்னுடையவன்(ள்)" என்று சொல்லுகிறார். ஆகவே, இன்றே அவரிடம் ஓடுங்கள்; பாவங்களை பின்னாக விட்டுவிட்டு, அவருடைய பார்வைக்கு ஏற்ற காரியங்களை செய்யுங்கள். அவர் உங்களை ஜெயத்திற்கு நேராக வழிநடத்தி, நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியை அருளுவார். தேவனுடைய மீட்பு குறித்து நன்றியறிதலுள்ளவர்களாக இன்றைக்கு அவரை தேடுவோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை மீட்டுக்கொண்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னுடையவர் என்று நான் சொல்லும்வண்ணம், என்னை பெயர் சொல்லி அழைத்து உம்முடையவன்(ள்) என்று உரிமை பாராட்டுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மைக் குறித்து ஆழமாக அறிந்துகொள்ளவும், உம்மை கிட்டிச்சேரவும் நீர் என்னை தெரிந்துகொண்டிருப்பதால் நன்றியுள்ளவனா(ளா)ய் இருக்கிறேன். இன்றைக்கு, பாவத்தினாலும், உலக இன்பங்களுக்கான இச்சைகளினாலும் வரும் போராட்டங்களை நான் மேற்கொள்ள உதவவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்மால் வராத காரியங்கள் எல்லாம் என்னை விட்டு விலகட்டும். இன்றைக்கு என்னை மீட்டுக்கொண்டு, உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவி சுத்திகரித்து, உமக்குள் புதுச்சிருஷ்டியாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். பயமின்றி, ஆக்கினையின்றி உம்முடைய மீட்பின் வல்லமையை நான் அனுபவித்து மகிழும்படி என்னை உம்மிடம் கிட்டிச்சேர்ப்பீராக. நீர் எனக்குத் தந்திருக்கும் இந்த புதிய வாழ்க்கையில் நான் மகிழ்ந்திருக்கவும், உம்முடைய பார்வைக்கு சரியானவற்றை செய்து எப்போதும் உம்முடையவனா(ளா)க இருக்கவும், ஜெயத்தின் பாதையில், நித்திய ஜீவனின் பாதையில் தொடர்ந்து முன்னேறவும் உதவி செய்யும். நீர் அளிக்கும் இந்த ஈவுக்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.