அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்" (சங்கீதம் 147:14) என்ற விசேஷித்த வாக்குத்தத்தத்தை தேவன் உங்களுக்கு வைத்திருக்கிறார். இந்த வசனத்தை வாசித்தபோது, ரூத்தின் வாழ்க்கை எனக்கு நினைவுக்கு வந்தது. ரூத்தும் நகோமியும் தாங்கள் இருந்த தேசத்தில் பஞ்சம் வந்தபோது, யூதாவில் மீண்டும் ஆகாரம் உண்டாகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டார்கள். ஆகவே, அவர்கள் நகோமியின் சொந்த ஊருக்கு திரும்பவும் பயணித்தார்கள். இந்த சம்பவத்தில், நகோமி தன்னுடைய சந்தேகங்களை பகிர்ந்துகொண்டிருக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தேன். "நான் முன்பு வாழ்ந்த இடத்துக்கு திரும்பிச் சென்றால் மக்கள் என்னைப் பற்றி என்ன கூறுவார்கள்?" என்று அவள் நினைத்திருக்கலாம். "உன் குடும்பத்தினர் எங்கே? ஆகாரத்துக்காகவே திரும்பி வந்துவிட்டாயா?" என்று தன்னை கேள்வி கேட்பார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்கலாம். உறவினர்களும், சுற்றிலும் வாழ்கிறவர்களும் அவளை குறைகூறுவார்கள் என்று எண்ணியிருக்கலாம்.
ஆனாலும் நகோமி தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு யூதாவுக்கு திரும்பினாள். தேவன், அவளையும் அவள் மருமகளாகிய ரூத், இருவரையும் ஆசீர்வதித்ததை காண்கிறோம். ரூத், அந்நியதேசத்தை சேர்ந்தவளாக இருந்தாலும், உத்தமமாய் வேலை செய்து மரியாதையை சம்பாதித்துக்கொண்டாள். அவள், தன் மாமியாரை பராமரித்தாள். இருவரும் தங்கள் எல்லைகளில் சமாதானத்தை அனுபவித்தனர்; உச்சிதமான கோதுமையினால் திருப்தியானார்கள். ரூத்திற்கான ஆசீர்வாதம் அத்துடன் நின்றுவிடவில்லை. அவளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை ஆசீர்வாதமாக கிடைத்தது. இயேசுவின் வம்சவரலாற்றில் அவர்கள் பெயர் இடம்பெறும்வண்ணம் அவள் குடும்பம் கனமடைந்தது. அவ்வாறே, அன்பானவர்களே, நீங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கவேண்டும். நீங்கள் புதிய இடத்துக்குச் செல்லலாம்;புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் அல்லது குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். அப்போது, "மக்கள் என்னைக் குறித்து என்ன சொல்லுவார்கள்? நான் புதிதாக வந்திருக்கிறேன். நான் எப்படி இதை நிர்வகிக்கப்போகிறேன்? எனக்கு எங்கே ஆதரவு கிடைக்கும்?" என்று நீங்கள் நினைக்கலாம். மற்றவர்களின் வார்த்தையை, அவர்கள் எண்ணங்களை எப்படி தனியாக எதிர்கொள்வது என்று நீங்கள் நினைக்கலாம்.
அன்பானவர்களே, திடன்கொள்ளுங்கள். உங்கள் எல்லைகள் எங்கும் தேவன் சமாதானத்தை அருளிச்செய்வார். அவர் உங்களுக்கு வேண்டியவற்றை கொடுப்பார். நல்ல நண்பர்களை, ஆதரவு தரும் சுற்றத்தினரை, உங்களுக்கு வேண்டிய உதவியை தருவார். தேவன், உச்சிதமான கோதுமையை தந்து உங்களை திருப்தியாக்குவார். உங்களுக்கு ஒன்றும் குறைவுபடாது. நகோமி தேவனை நம்பியதுபோல, அவரை முழுவதுமாக நம்புங்கள். அவர் உங்களுக்கு சமாதானத்தை தந்து ஆசீர்வதிப்பார்; உச்சிதமான நன்மைகளினால் திருப்தியாக்குவார். ஆகவே, பயப்படாதிருங்கள். தேவன் உங்களோடு இருப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அன்புடன் நீர் கொடுக்கும் வாக்குத்தத்தங்களுக்காக நன்றியுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என் எல்லைகளெங்கும் சமாதானத்தை அருளிச்செய்வதற்காகவும், உம்முடைய பரிபூரணத்தினால் என்னை திருப்தியாக்குவதற்காகவும் நன்றி செலுத்துகிறேன். சந்தேகங்கள் எழும்பும்போது நீர் நகோமிக்கும் ரூத்துக்கும் உண்மையுள்ளவராயிருந்தீர் என்பதை நான் மறவாதிருக்கும்படி செய்யும். வாழ்வில் நான் புதிய காரியங்களை ஆரம்பிக்கிற தருணத்தில் உம்மை முழுவதுமாக நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். என்பேரில் நீர் கொண்டிருக்கிற உயர்ந்த நினைவுகளை நிறைவேற்றும்படி ஏற்ற மக்களும் வேண்டிய பொருள்களும் எனக்கு கிடைக்கும்படி செய்யும். எல்லா பயங்களுக்கும் மேலாக எழும்புவதற்கான பெலனையும், வாழ்வில் உம் திட்டத்தை பின்பற்றுவதற்கான தைரியத்தையும் எனக்கு தாரும். உம்முடைய சமாதானம் என் இருதயத்தை நிரப்பி, அனுதினமும் என்னை வழிநடத்தட்டும். எப்போதும் என்னோடு இருப்பதாகவும், நலமானவற்றை எனக்கு தருவதாக நிச்சயமாய் கூறுவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.