"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" (ஏசாயா 9:6)என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவர் இயேசு வந்ததை குறித்து மகிழ்ந்து கிறிஸ்துமஸை கொண்டாடும் சமயத்தில், அவர் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்ற சத்தியத்தை நினைவுகூருவோம்.

"ஆண்டவரே, நீர் எனக்காக வந்தீர். எனக்காக நீர் கொடுக்கப்பட்டீர். எனக்காகவே இந்த உலகில் நீர் பிறந்தீர். ஆண்டவரே, உம்மை எனக்குச் சொந்தமானவராக ஏற்றுக்கொள்கிறேன். உமக்கு நன்றி," என்று உள்ளத்தில் சொல்வீர்களா? இயேசு, நமக்குச் சொந்தமானவர் என்பதை அறிந்துகொள்வது எவ்வளவு சந்தோஷம்! ஒரு குழந்தை, பொம்மை ஒன்றை வைத்து விளையாடுகிறது என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவர்கள் வீட்டுக்கு வரும் இன்னொரு குழந்தை, அந்த பொம்மையை எடுப்பதற்கு முயற்சித்தால் உடனடியாக, "இது என்னுடைய பொம்மை. என் அம்மா இதை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்," என்று அந்தக் குழந்தை கூறும். அவ்வாறே நாமும், "இயேசு என்னுடையவர். தேவன் அவரை எனக்குத் தந்திருக்கிறார்," என்று தைரியமாக சொல்லலாம். ஆம், நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டதுபோல, மற்றவர்களுக்கு தம்மைப் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு நம்மை அழைக்கிறார்.

"தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்" (1 தீமோத்தேயு 3:16)என்று வேதம் கூறுகிறது. மனுஷீக வடிவில் வந்த தேவனே இயேசு கிறிஸ்து என்ற சத்தியத்தை நம்புங்கள். மனுஷகுமாரன், தேவ குமாரன் என்றும், இன்னும் பல பெயர்களிலும் அவர் அழைக்கப்பட்டாலும், மாம்சத்தில் வந்த தேவன் அவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கென்றே வந்த தேவன் என்று அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஜீவன் பெற்றிருக்கும்படியாக இயேசு பிறந்தார். முன்பு ஒரு காலத்தில் அவர் பிறந்ததை கொண்டாடும் நாளாக மட்டும் கிறிஸ்துமஸ் அமைந்துவிடக்கூடாது. "அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12)என்று வேதம் வாக்குப்பண்ணுகிறதுபோல, இயேசு எனக்காக பிறந்தார்; எனக்குக் கொடுக்கப்பட்டார் என்று கூறுங்கள். நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளையாகிறீர்கள்.

தூத்துக்குடியை சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற சகோதரரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே, தந்தையை இழந்துவிட்டார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். வழிகாட்ட யாரும் இல்லாததால் அவர் பாவவாழ்க்கைக்குள் விழுந்தார். 15 வயதிலேயே சாராயம் காய்ச்சி, மற்றவர்களுடன் சண்டையிடும் ரௌடியாக மாறினார். ஒருநாள், வழக்கு ஒன்றை தீர்ப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. மருத்துவர்கள், உடலிலுள்ள இரத்தத்தில் 99 சதவீதம் இழப்பு நேரிட்டுள்ளதென்றும், உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்றும் கூறினார்கள்.

மருத்துவமனையில் அவர் மரணப்படுக்கையில் கிடந்தபோது, இயேசு சிலுவையில் தொங்கும் தரிசனத்தை கண்டார். இயேசுவின்மேல் அவருக்கு விசுவாசம் இல்லையெனிலும், "இயேசுவே," என்று கூப்பிட்டார். இயேசு, "மகனே, பயப்படாதே. நான் உனக்காக சிலுவையில் மரித்தேன். நான் உனக்கு சமாதானம் தருவேன். இனி பாவஞ்செய்யாதே," என்று கூறினார். இரத்தம் வெளியேறுவது அற்புதவிதமாக நின்றது. அவர் வாழ்க்கை மறுரூபமானது. என் தந்தை சகோ.டி.ஜி.எஸ். தினகரனின் செய்திகளை அவர் கேட்க தொடங்கினார். இயேசுவை முழு மனதுடன் பின்பற்றினார். அவருக்கு வாசிக்க தெரியாவிட்டாலும், 91ம் சங்கீதத்தை தியானித்தார். அவருக்கு திருமணமானது. குழந்தைகள் பிறந்தனர். தேவனுக்கு உண்மையான ஊழியரானார். இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் பங்காளரானார். தன் சாட்சியை பகிர்ந்துகொள்கிறார். இப்போதும், இயேசுவை குறித்து சாட்சி கூறிக்கொண்டிருக்கிறார். குடும்பமாக, ஃபேமிலி சேனலை பார்க்கிறார்கள். குழந்தையாக பிறந்த ஆண்டவர், சௌந்தரபாண்டியனுக்கு தகப்பனானார்.

ஆம், அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு, உங்களுக்கு தகப்பனாகவும் ஆயத்தமாக இருக்கிறார். "தகப்பனே, நீர் எனக்காக பிறந்தீர். நீர் எனக்காக கொடுக்கப்பட்டீர்," என்று கூறுங்கள். இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்காக உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.  நான் நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் சுதந்தரித்துக்கொள்ளும்படி இயேசு எனக்குச் சொந்தமாகவே கொடுக்கப்பட்டபடியினால் களிகூருகிறேன். இயேசுவை, எனக்குச் சொந்தமானவராக, என் இரட்சகராக, என் ராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். உம்முடைய அன்பையும் சத்தியத்தையும் மற்றவர்களுக்குக் காட்டும் உம்முடைய பிள்ளையாக நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை உம்முடைய ராஜரீக குடும்பத்திற்குள் அழைக்கிறபடியினாலும், உம்முடைய பிள்ளையாகும் வல்லமையை தருகிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மை அறியாதவர்களுக்கு, என் வாழ்க்கையானது உமது கிருபையையும் வெளிச்சத்தையும் குறித்த சாட்சியாக விளங்கட்டும். உம்முடைய பிறப்பின் நற்செய்தியை தைரியமாகவும் சந்தோஷமாகவும் பகிர்ந்துகொள்வதற்கு எனக்கு போதித்தருளும். ஆண்டவரே, நான் என்னை அர்ப்பணித்து, நீர் எனக்குப் பாராட்டிய நிபந்தனையற்ற அன்பை நினைவுகூரும்வண்ணம் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.