அன்பானவர்களே, இன்று களிகூருதலின் நாளாகும். இன்று தேவனுடைய ஆசீர்வதிக்கும் வல்லமையான கரம் நம்மேல் அமரும். "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" (சகரியா 2:8) என்று தேவன் கூறுகிறார். தேவதூதனால் உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகள், தேவன் நம்பேரில் எவ்வளவு மகிழுகிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன. அவர் நம்மை தம்முடைய கண்மணியாக - சொந்த சம்பத்தாக கருதுகிறார். தேவனுக்கு முன்பாக நமக்கு அவ்வளவு உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாக, பெறுமதியுள்ளவர்களாக கருதுகிறார். இதை அறியும்போது ஆச்சரியமாக உள்ளதல்லவா! ஆனாலும், உபத்திரவங்கள் நேரிடும்போது நாம், "தேவன் என்னை மறந்துவிட்டாரோ?" என்று கேட்கிறோம். நம்மை தாழ்வாக கருதுகிறவர்களை, நம்மை வஞ்சிக்கிறவர்களை பார்த்து, நாம் தனிமையாய் இருப்பதாகவும், நமக்கு துணையாக யாருமில்லை என்றும் நினைத்துவிடுகிறோம். ஆனால், தேவதூதன் இந்த வசனத்தில், "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று கூறுகிறான்.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதே சமயம், அவர்கள் சிறு நாய்க்குட்டி ஒன்றையும் வாங்கினார்கள். பையனும் நாய்க்குட்டியும் ஒன்றாகவே வளர்ந்தனர். இருவரும் இணைபிரியாமல் இருந்தனர். அந்தப் பையன் எங்கு போனாலும் அந்த நாயும் அவன் பின்னே அவனுக் பாதுகாவலாக செல்லும். ஒருநாள், அந்தப் பையன் குறும்பு செய்ததால் தாயார், அவனை திட்டினார்கள். அதைப் பார்த்த அந்த நாய், அவர்களை நோக்கி உக்கிரமாய் குரைத்தது. அந்தப் பையனை பாதுகாப்பதுபோல அவன் முன்னே குதித்தது. அப்போதுதான் அவர்கள் தன்னுடைய மகன்மேல் வீட்டு நாய் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது என்பதை உணர்ந்தார்கள்.

ஆண்டவரும் அப்படியே இருக்கிறார். அவர் நம்மேல் பூரண அன்பு கொண்டவராக, உரிமை பாராட்டுகிறவராக இருக்கிறார். நாம் உதாசீனப்படுத்தப்படுவதையோ, புண்படுத்தப்படுவதையோ அவரால் தாங்கிக்கொள்ள இயலாது. நாம் புண்படுத்தப்படும்போது, அவருடைய இருதயத்தில் இரத்தம் கசியும். "பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்" என்றும் அந்த வசனம் கூறுகிறது. தேவன் நமக்காக எழுந்தருளுவார். நமக்கு தீங்கு செய்கிறவர்களுக்கு விரோதமாக தம்முடைய தேவதூதர்களை அனுப்புவார். நமக்கு நிந்தையும் இக்கட்டும் நேரிடும்போது, அதற்கு எதிரிடையாக அவர் நம்மை பூரணமாக ஆசீர்வதிக்கிறார். நாம் சகிக்கும் உபத்திரவங்களால் நமக்கு தேவனிடமிருந்து பெரிய ஆசீர்வாதங்கள் வரும். ஒவ்வொரு முறை நாம் பாடனுபவிக்கும்போதும், அவர் நம்மை உயரே தூக்கி, அளவில்லாத பெருக்கத்தை அருளிச்செய்கிறார். அவருடைய கண்மணியை யார் தொட்டாலும், தேவன்தாமே அவர்களுக்கு பதில் செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நன்றியறிதலுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என்னை உம்முடைய கண்மணி என்று கூறியதற்காக, என்பேரில் களிகூருவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உபத்திரவங்கள் எழும்பும்போது, நீர் எனக்கு அடைக்கலமாகவும் என்னை தற்காக்கிறவராகவும் இருக்கிறீர் என்பதை நான் மறந்துபோகாமல் இருக்க உதவி செய்யும். ஆண்டவரே, எனக்காக எழுந்தருளும்; எல்லா நிந்தையையும் அளவில்லாத ஆசீர்வாதமாக மாற்றும். எனக்காக யுத்தம் செய்யும்படி தேவதூதர்களை அனுப்பும்; எனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்கள் அமைதலாயிருக்கும்படி செய்யும். நீர் எப்போதும் என்னை கண்ணோக்கிக்கொண்டிருக்கிறீர் என்ற நிச்சயத்தினால் நான் இளைப்பாறுதல் காணும்படி செய்யும். நீர் என்னை உயர்த்தி, ஜெயம்பெறச் செய்வீர் என்று விசுவாசித்து என்னுடைய யுத்தங்களை உம்மிடம் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.