அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்" (சங்கீதம் 147:13) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறபடி, தேவன்தாமே உங்கள் வீட்டின் எல்லைகளை பாதுகாத்து, அதற்குள் வாசம்பண்ணும் அனைவர்மேலும் தமது ஆசீர்வாதங்களை பொழிந்தருளுவார்.

இன்று பயந்துபோய் இருக்கிறீர்களா? சத்துரு உங்கள் வீட்டாருக்கு விரோதமாக சதியாலோசனை செய்கிறான்; தீங்கு என் குடும்பத்திற்கு நேரிடும்; மற்றவர்கள் என்னை அழித்துப்போடும்படி செயல்படுகிறார்கள் என்று அஞ்சுகிறீர்களா? அன்பானவர்களே, திடன்கொள்ளுங்கள்! தேவன் உங்கள் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்துவார்; உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் சுற்றி பாதுகாப்பு வேலி அடைப்பார். அவர் உங்களை பாதுகாப்பார்; உங்கள் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

இந்த சத்தியம், யாத்திராகமம் 12ம் அதிகாரத்தில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சத்துருக்களை சங்காரம்பண்ண வரும் சங்காரக்காரன், இஸ்ரவேல் ஜனங்களை அடையாளம் கண்டு பத்திரமாய் விட்டுவிடும்படி ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் வீட்டு நிலைக்கால்களில் அடையாளம் இடும்படி தேவன் கட்டளை கொடுத்தார்.  இஸ்ரவேலர் அதற்குக் கீழ்ப்படிந்து ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்கள் வீட்டு நிலைக்கால்களில் பூசினார்கள்; சங்கார தூதன் வரும்போது அவர்கள் தீங்கின்றி தப்பினார்கள்.  வீட்டில் இருந்த அவர்கள், தேவனுடைய வல்லமையினால் காக்கப்பட்டார்கள். அது அந்த நேரத்திற்கு மாத்திரமான ஆசீர்வாதமாக அமையவில்லை; தலைமுறைகளுக்கு உரிய ஆசீர்வாதமாக அமைந்தது என்று, "இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்" (யாத்திராகமம் 12:24) வேதம் கூறுகிறது.

அவ்வாறே, அன்பானவர்களே, ஆண்டவருடைய நாமத்தை உங்கள் நெற்றியில் தரித்திருக்கிறீர்கள்; அவருடைய நாமம் உங்கள் வீட்டின்மேல் இருக்கிறது. நீங்கள் இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அடையாளம் போடப்பட்டிருக்கிறீர்கள். சத்துருவின் எந்த யோசனையும் உங்களை தொட முடியாது. சங்காரக்காரனுக்கு உங்கள்மேல் எந்த அதிகாரமும் இல்லை. உங்களுக்கு விரோதமாக சாத்தான் திட்டமிடும் கிரியைகள் எதுவும் வாய்க்காது. நீங்களும் உங்கள் வீட்டாரும் சுகமாய் இருப்பீர்கள்; பூரண ஆசீர்வாதம் பெற்றிருப்பீர்கள். தேவனே உங்களுக்கு அடைக்கலமும் கோட்டையுமாக இருக்கிறபடியினால் இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தின்மேல் ஸ்திரமாக நில்லுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வீட்டின்மேலும் என் குடும்பத்தின்மேலும் உம்முடைய தெய்வீக பாதுகாப்பு நிலவவேண்டும் என்று மன்றாட உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, எங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாக, எந்த சத்துருவும் புகமுடியாத கோட்டையாக நீர் இருந்தருளும். இருளின் எந்த யோசனையும், சத்துருவின் எந்த கிரியையும், எங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகட்டும். ஆண்டவரே, எல்லா பொல்லாத யோசனையும், பில்லிசூனியமும், எங்களுக்கு விரோதமாக ஆலோசிக்கப்படும் தாக்குதல்களும் நொறுங்கி இல்பொருளாவதாக. ஆண்டவரே, நீரே எங்களை பாதுகாக்கிறவராக, எங்கள் கேடயமாக, எங்கள் அடைக்கலமாக இருப்பதால் எங்களுக்கு விரோதமாக ஆலோசிக்கப்படும் தீங்கான யோசனைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமற்போகட்டும். என் வீட்டின்மேலும் குடும்பத்தின்மேலும் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் இன்றைக்கு தங்குவதாக. உம்முடைய கிருபை  எங்களை மூடுவதாக; உம்முடைய சமாதானம் எங்களைச் சூழ்ந்துகொள்ளட்டும். உம்முடைய பரிசுத்த நாமம் எங்கள் நெற்றிகளில் பொறிக்கப்பட்டிருப்பதால் எங்களைக் கனப்படுத்தும். எங்களை உம்மிடம் கிட்டிச்சேரும்; உம்முடைய பலத்த செட்டைகளின் கீழ் எங்களை பத்திரமாய் காத்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.